தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமான நடிகர் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பைசன் ‘ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேகப் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர் எனும் அடையாளத்தை பெற்றிருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைசன்’ எனும் திரைப்படத்தில் துருவ் விக்ரம் , அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், ஹரிகிருஷ்ணன், அழகம்பெருமாள் , கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார் . கபடி வீரரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
பல கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்து இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ஆகியோர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படமும், கிராமிய பின்னணியில் தமிழர்களின் கலாச்சார விளையாட்டான கபடி எனும் விளையாட்டை உயிராக நினைத்து வாழும் ஒரு வீரரின் அக மற்றும் புற வாழ்வியலை பின்னணியாக கொண்ட படைப்பு என்பதால் வழக்கத்தை விட கூடுதலான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.