சப்தம் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : 7 ஜி பிலிம்ஸ் & ஆல்ஃபா பிரேம்ஸ்
நடிகர்கள் : ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம். எஸ். பாஸ்கர் மற்றும் பலர்.
இயக்கம் : அறிவழகன்
மதிப்பீடு : 2.5 /5
‘ஈரம்’ எனும் படத்தில் தண்ணீரை பேயாக காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவான படம் என்பதால் இந்த ‘சப்தம்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்களை பயமுறுத்தியதா ? இல்லையா ? என்பதை தொடர்ந்து காண்போம்.
மருத்துவ கல்லூரி ஒன்றில் பயிற்சி வைத்தியராக இருக்கும் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கான காரணத்தை கண்டறிவதற்காக மருத்துவமனை நிர்வாகம் மும்பையில் இருந்து இத்தகைய தற்கொலை வழக்குகளை பிரத்யேகமாக துப்பறிவதில் நிபுணரான ஆதியை உண்மையைக் கண்டறியுமாறு நியமிக்கிறது.
அவர் ஒலி சார்ந்து தன்னுடைய வித்தியாசமான துப்பு துலக்கும் பணியை தொடர்கிறார் . அந்த தருணத்தில் மீண்டும் ஒரு தற்கொலை நடைபெறுகிறது. இந்த மூன்று தொடர் குற்ற சம்பவங்களிலும் கல்லூரியில் வைத்திய பிரிவின் முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் மாணவியான லக்ஷ்மி மேனனுக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
அத்துடன் அந்த வைத்திய கல்லூரி வளாகத்தில் 40க்கும் மேற்பட்ட ஆத்மாக்கள் உலகுவதாகவும் அவர் கண்டறிகிறார். அதன்பிறகு ஒலி ரூபத்தில் ஊடுருவி தற்கொலை செய்ய தூண்டுவது யார் ? என்ற உண்மையையும், குற்றவாளி யார் என்பதும், இந்த குற்ற சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? , அதற்கான பின்னணி குறித்து விவரிப்பதும் தான் இப்படத்தின் கதை.
ஒலி பொறியாளராக நடித்திருக்கும் ஆதி தன் முழு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆறுதல் படுத்துகிறார். லட்சுமிமேனன் -சிம்ரன் -லைலா – ஆகியோரில் லட்சுமிமேனனுக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது. அதனை அவர் சிறப்பாகவே உள்வாங்கி நடித்திருக்கிறார்.
இதுபோன்ற ஹாரர் படங்களுக்கு பட மாளிகை அனுபவம் என்பது ரசிகர்களுக்கு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருக்கும். ஆனால் அத்தகைய அனுபவம் என்பது மிகச் சில இடங்களில் மட்டுமே பார்வையாளர்களுக்கு கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் எஸ். தமனின் பங்களிப்பு பிரமிக்கும் வகையில் இருக்கிறது.
வழக்கமான பழிக்கு பழிவாங்கும் கதையாக இருப்பதால் பார்வையாளர்களுக்கு சோர்வும் ஏற்படுகிறது. சப்தம் பேயாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் .. அது எப்படி இருக்கும்? என்ற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும்… படக்குழுவினரின் காட்சிப்படுத்தலுக்கும் இடையே நடைபெற வேண்டிய மேஜிக் நிகழவில்லை. ஹாரர் படமாக இருந்தாலும்…. ஒலியை வித்தியாசமாக பயன்படுத்தி இருந்தாலும்… லாஜிக் மீறல் எக்கச்சக்கம்..
ஒளிப்பதிவாளரும் , ஒலிப்பதிவாளரும் படைப்பை தொழில்நுட்ப ரீதியாக உயிர்ப்பூட்டி இருக்கிறார்கள். இருந்தும் ரசிகர்களை கவரவில்லை.
சப்தம் – அபஸ்வரம்.