சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்மையான வேடத்தில் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவருடன் முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகரான யோகி பாபு நடிக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் இருந்தது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் ‘ஜெயிலர் 2’ படத்தை பற்றிய அறிவிப்பு பிரத்யேக காணொளியாக வெளியிடப்பட்டிருந்தது. பதினெட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி இருந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் சுப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.