தயாரிப்பு : சபரி புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : சதாசிவம் சின்னராஜ், சாய் தன்யா, பிளாக் பாண்டி, ஆதவன், ஓ.ஏ.கே சுந்தர், லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர்.
இயக்கம் : சதாசிவம் சின்னராஜ்
மதிப்பீடு: 2/5
நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் தங்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை மாத தவணை திட்டத்தின் மூலம் வாங்குகிறார்கள். இதன் பின்னணி குறித்து உருவான திரைப்படம் என்பதால் ஒரு பிரிவினருக்கு ‘EMI மாத தவணை’ எனும் அறிமுக கலைஞர்களின் கூட்டணியில் உருவான இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனை படக்குழுவினர் பூர்த்தி செய்தார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சிவா(சதாசிவம் சின்னராஜ்),ரோசி (சாய் தன்யா) என்ற பெண் மீது ‘கண்டவுடன்’ காதல் கொள்கிறார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
தன் காதல் மனைவியை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் விலையுயர்ந்த கைப்பேசி, துவிச்சக்கர வாகனம், மகிழுந்து ஆகியவற்றை மாத தவணையாக பணம் செலுத்தும் முறையில் வாங்குகிறார்.
சிறிது நாட்கள் வரை தவணையை செலுத்தி வந்த சிவாவை திடீரென்று வேலையிலிருந்து நீக்கி விடுகிறார்கள். இதனால் அவரால் ஒழுங்காக மாதத் தவணையை கட்ட முடியவில்லை. இந்தத் தருணத்தில் அவரும் அவருடைய மாத தவணை திட்டத்திற்கு பிணையமிட்டவர்களும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். இதன் முடிவு என்ன? என்பதுதான் படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் சதாசிவம் சின்னராஜ் திரையில் இயல்பாக தன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். சில உணர்வுகளை கடத்துவதற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறார்.
கதை இப்படித்தான் பயணிக்கும் என பார்வையாளர்கள் யூகிக்கும் காட்சிகள் அடுத்தடுத்து நகர்வதால் சோர்வை தருகிறது.
நாயகி ரோஸி மற்றும் அவரது தந்தை இடையேயான உரையாடல் கலாசாரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதால் ரசிக்க முடிகிறது.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு இனி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கலாம்.
அதே தருணத்தில் நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் குறிப்பிட்ட தருணத்திற்குள் அருகில் இருக்கும் அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தமிழக அரசு நிதி உதவி வழங்குகிறது என்ற ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தையும் தலைக்கவசம் அணிந்து துவிச் சக்கர வாகனத்தில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் எனும் விழிப்புணர்வை பிரச்சாரமாக இல்லாமல் இயல்பாக சொன்னதற்காக இயக்குநரை பாராட்டலாம்.
ஆனால் மாத தவணையில் குடும்ப உறுப்பினர்களுக்காக ஸ்மார்ட் போன், கார் வாங்குவதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம். நடுத்தர வர்க்கத்தினர் இதை செய்வதில்லை. இதனால் திரைக்கதை பார்வையாளகளிடமிருந்து விலகுகிறது. இதனால் சொல்ல வந்த முதன்மையான கருத்துடன் ஒன்ற முடியவில்லை. அத்துடன் மாத தவணை வசூல் தொடர்பான காட்சிகளில் அழுத்தம் இல்லை. இருப்பினும் குழந்தை பிறப்பிற்காக கடன் வாங்கி மாதத் தவணை கட்டுவது போன்ற கற்பனை மிகை.
ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை, கலை இயக்கம், படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப பணிகளும் குறைந்தபட்ச தரத்தில் இருக்கிறது.
EMI மாத தவணை – வீரியமற்ற உழைப்பு சுரண்டல்.