வசந்த பாலனுக்கு இரண்டு அடையாளங்கள்.
இயக்குநர் ஷங்கரின் சிஷ்யர்.
அங்காடித் தெரு படத்தின் இயக்குநர்.
2010, மார்ச் 26 அன்று வெளியான அங்காடித் தெரு, இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்த, விவாதித்த படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படம் வெளியான புதிதில் உண்டான தாக்கம் அவ்வளவு எளிதாக மறக்கக்கூடியது அல்ல.
வெயில் படத்தைப் படமாக்கும்போது அங்காடித் தெரு கதையை உருவாக்கியுள்ளார் வசந்த பாலன். பஜார் என்கிற சொல், மக்களிடம் வெகுவாகப் புழக்கத்தில் இருந்தாலும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்ற அங்காடி என்கிற சொல்லைப் படத்தலைப்பில் சேர்த்தார். தைரியத்தைப் படத்தலைப்பிலிருந்து கொண்டிருந்த படம்.
சென்னைக்கு வந்த யாரும் தியாகராய நகரில் உள்ள ஜவுளிக்கடைகளுக்குச் செல்லாமலும் ரங்கநாதன் தெருவுக்குள் நுழையாமலும் இருந்திருக்கமுடியாது. ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக்கடைகளில் வேலை செய்யும் வெளியூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள், அடிமைப்படுத்தப்படுகிறார்கள், சிறிய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூட முடியாமல் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பிரசாரத் தொனி கலக்காமல் அழுத்தமான மற்றும் aழகான காட்சிகளின் மூலம் சொன்ன படம் – அங்காடித் தெரு.
ஐங்கரன் நிறுவனம் தயாரித்த படம். அந்நிறுவனம் தயாரித்த சில படங்கள் ஒரே சமயத்தில் ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வியடைந்ததால் அங்காடித் தெரு மக்களைச் சந்திக்க பல போராட்டங்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. ஆனால் படம் வெளிவந்த பிறகு ரசிகர்கள் அள்ளிக்கொண்டார்கள்.
தியாகராய நகரின் இரவு வாழ்க்கையை ஒருமுறை யதேச்சையாகப் பார்த்த வசந்த பாலன், இதை நிச்சயம் சினிமாவாக எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தார். தொழிலாளர்களைக் கஷ்டப்படுத்தும் ஜவுளி நிறுவனங்கள் என்று நேரடியாகக் கதை சொன்னால் எடுபடாது என்பதால் காதலின் வழியாகத் தொழிலாளர்களின் துயரங்களை வெளிப்படுத்த முடிவெடுத்தார். தியாகராய நகர், ரங்கநாதன் தெரு, காதலர்கள் மட்டும் இக்கதைக்குப் போதாது என்பதால் எழுத்தாளர் ஜெயமோகனின் துணையுடன் துணை கதாபாத்திரங்களுக்கான கிளைக்கதைகளை உருவாக்கினார். கதை முழு வடிவம் பெற்றது.
ஊர்ப்பகுதியில் இருந்து வரும் இளைஞன் தான் படத்தின் கதாநாயகன். திருநெல்வேலியில் கைப்பந்து வீரராக இருந்த மகேஷைப் பலவிதமான தேடல்களுக்குப் பிறகு கதாநாயகனாகத் தேர்வு செய்தார். இதேபோல கதாநாயகியும் புதுமுகமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார் வசந்த பாலன். படத்தில் காதலனுடன் சண்டை போட்டு தற்கொலை செய்துகொள்ளும் பெண்ணாக நடித்தவரை முதலில் கதாநாயகியாகத் தேர்வு செய்தார். ஆனால் அந்தப் பெண்ணால் காதல் காட்சிகளில் சரியாக நடிக்க முடியுமா எனச் சந்தேகம் வந்ததால் கற்றது தமிழ் படத்தில் அசத்திய அஞ்சலியைக் கதாநாயகியாகத் தேர்வு செய்தார். அது நல்ல முடிவு என்பதைத் தனது அட்டகாசமான நடிப்பால் வெளிப்படுத்தினார் அஞ்சலி. படப்பிடிப்புத்தளத்தில் அனைவரிடமும் கோபமாகப் பேசி வேலை வாங்கியதை அருகில் இருந்து பார்த்ததால் வில்லன் வேடத்துக்கு இயக்குநர் வெங்கடேஷைத் தேர்வு செய்தார் வசந்தபாலன்.
சாலிகிராமத்தில் ரங்கநாதன் தெரு மற்றும் தியாகராய நகர் பகுதிகளை செட்டாக அமைத்தார் கலை இயக்குநர் முத்துராஜ். மேலும் நிஜமான ரங்கநாதன் தெரு மற்றும் தியாகராய நகரில் உள்ள பகுதிகளிலும் மறைமுகமாக கேமராவை வைத்து 80 காட்சிகளை இயக்கியுள்ளார் வசந்த பாலன். ரகசிய கேமரா மூலம் 400 மணி நேரக் காட்சிகளை எடுத்து அதை வைத்து படப்பிடிப்புக்கும் காட்சிகளுக்கும் தயாராகியிருக்கிறார்கள். செட்டில் ரங்கநாதன் தெருவை அப்படியே கொண்டுவருவதற்காக அந்தத் தெருவில் கிடந்த குப்பைகளையெல்லாம் லாரியில் அள்ளிப் போட்டு கொண்டு கொட்டியுள்ளார்கள். இதனால் தான் படத்தில் அந்த தெரு நிஜ ரங்கநாதன் தெருவாகக் காட்சியளித்தது. தியாகராய நகரிலும் படப்பிடிப்பு நடைபெற்றதால் மக்களின் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்காக இரவு வேளைகளில் மாலை 6 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை 10 மணி வரை படப்பிடிப்பு நடைபெற்றது. மகேஷும் அஞ்சலியும் இரவில் சுற்றித் திரியும் பாடலான, கதைகளைப் பேசும் விழிகளிலே பாடலை 10 இரவுகளில் படமாக்கினார் வசந்த பாலன்.
வெயிலில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய ஜி.வி. பிரகாஷ், இந்தப் படத்தின் பாதியில் விலகிவிட்டார். இதனால் மீதமுள்ள இசையை வழங்கவேண்டிய பொறுப்பு, விஜய் ஆண்டனியிடம் வழங்கப்பட்டது. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, எங்கோ போவேனோ ஆகிய பாடல்களுக்கு இசையமைத்ததுடன் பின்னணி இசையையும் வழங்கினார். எல்லாப் பாடல்களையும் நா. முத்துக்குமார் எழுதினார்.
188 திரையரங்குகளில் வெளியான அங்காடித் தெரு, 30 திரையரங்குகளில் நூறு நாள்களைக் கொண்டாடியது. பண பலமும் அரசியல் பலமும் உள்ள நிறுவனங்களின் தொழிலாளர் விரோதப் போக்குகளை வசந்த பாலன் அம்பலப்படுத்தியதற்கு ரசிகர்கள் கரகோஷமிட்டு வரவேற்றார்கள். ஹீரோயிசம் இல்லாத கதையம்சத்துடன் கூடிய ஒரு படத்தால் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்தது.
இப்படத்தின் 100-வது நாள் விழா, காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. திரையரங்க உரிமையாளரே படக்குழுவினரை அழைத்து 100-வது நாள் விழாவைக் கொண்டாடினார். கேரளாவிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கும் படத்தின் கதைக்கரு விவாதமாக மாறியது. கோழிக்கோட்டில் சிறு கடைகளில் வேலை செய்பவர்களுக்குக் கழிப்பறை வசதி இல்லாத குறையைச் சரி செய்யும் பொறுப்பை நகராட்சி ஏற்றுக்கொண்டது.
படத்தில் சோகமான காட்சிகள் அதிகமாக இருப்பதாகப் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா தன்னுடைய விமரிசனத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற விமரிசனங்களுக்குப் பதிலளித்த படத்தின் வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன், ஆரம்பகாலத்தில் இப்படத்தின் துயரக் காட்சிகளைப் பலர் விமரிசித்தார்கள். நம் வாழ்க்கை இப்படி இல்லை என இவர்களால் சொல்ல முடியவில்லை. அதை ஏன் காட்ட வேண்டும் என்றுதான் கேட்டார்கள். ஒருவருடம் வெளிவரும் படங்களில் ஒன்றோ இரண்டோதான் இப்படி இருக்கிறது. மிச்ச படங்களெல்லாம் கேளிக்கையை மட்டுமே காட்டுகின்றன. இந்த படமும் அப்படி இருக்கலாகாதா என்பவர்களிடம் என்ன பேச என்று தன்னுடைய வலைத்தளத்தில் எழுதினார்.
தீவிரத்துடன் அமைக்கப்பட்ட காட்சிகளுக்கு ஜெயமோகனின் வசனங்கள் மிகவும் கைகொடுத்தன. படம் வெளிவந்த புதிதில் இந்த வசனங்கள் மிகவும் பாராட்டப்பட்டன.
“யானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழுது…”
“பெண் நாய் ஆண் நாய்க்குப் போக்கு காட்டுவது மாதிரி அவனை பின்னாலே சுத்த விடுறே…”
“இனிமே இது குள்ளனுக்கு பொறக்கலைண்ணு யாரும் சொல்ல மாட்டாங்கள்ல?”
“நாய்க் குட்டிகளைக் கொண்டாந்து போடுற மாதிரி கொண்டு போயி போட்டுட்டு போறவன் நான். நாய் சென்மம் தம்பி…”
”நீங்க யாருன்னு தங்கச்சி கேட்டுட்டே இருந்தா…
நீ என்ன சொன்னே?
சிரிச்சேன்”
“எப்ப சங்கரபாண்டி காதலிக்கலைன்னு சொன்னானோ அப்பவே அவ செத்துடா ….விழுந்தது அவ பொணம்தான்…”
”ஏலே நில்லுலே ராகு காலத்திலே பொறந்தவனே…
நீருல்லாவே நேரம் பாத்திருக்கணும்…?”
“ஆனாலும் உனக்கு இம்புட்டு ரோஷம் ஆகாது புள்ள…
உலகத்தில ஒரு ஆம்பளகிட்டயாவது மான ரோஷத்தோட இருக்கேனே…”
“மனுஷங்கதான் தீட்டு பாப்பாங்க. சாமில்லாம் தீட்டு பாக்காது…”
படம் வெளியான பிறகு தியாகராய நகரில் உள்ள ஜவுளிக் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களின் அவல நிலை குறித்த விவாதம் ரசிகர்களிடையே பெரிதளவில் உருவாகியது. படத்தினால் உண்டான பாதிப்பால் பெரிய கடைகளில் துணியெடுக்கச் செல்லக்கூடாது என்று சிலர் உணர்ச்சிவசப்பட்டார்கள். இன்னும் சிலர் அக்கடைகளுக்குச் சென்றபோது ஊழியர்களிடம் நலம் விசாரித்தார்கள். (சில கடைகளில் ஊழியர்கள், துணி வாங்க வந்தவர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டு பூட்டினார்கள்) படத்தின் கதை பற்றிய விவாதம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. துணிக்கடை ஊழியர்கள் தங்கும் இடங்களில் வசதிக்குறைவுகள் உள்ளனவா என்று ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் ஊழியர்களின் நலனில் கடைகள் கவனம் செலுத்தின. யாராவது வெளியே ஏதாவது பேசிவிடுவார்களா என கடை உரிமையாளர்கள் அஞ்சினார்கள். இந்தச் சமயத்தில் துணிக்கடை விளம்பரத்தில் நடித்த சூர்யாவுக்கும் கண்டனங்கள் எழுந்தன. சினிமாக்காரர்களே அங்காடி என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லி, பாண்டி பஜாரை செளந்தரபாண்டியன் அங்காடி எனப் பெயர் மாற்றினார் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி.
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் போட்டியில் இந்தியா சார்பாக 2010-ல் பீப்லி லைவ் தேர்வானது. இதற்குக் கடும் போட்டியளித்து நூலிழையில் வாய்ப்பைத் தவறவிட்டது அங்காடித் தெரு. அங்காடித் தெருவின் கதை இதுவரை உலகப் படங்களில் காண்பிக்காத ஒன்று என்பதில் வசந்த பாலனுக்கு எப்போதும் பெருமை உண்டு.
படத்தின் கடைசி ஷாட்டில் இந்தக் கதை யாரை, எதைப் பற்றியது என்று (இன்னொருமுறை) கோடிட்டுக் காட்டியிருப்பார் வசந்த பாலன். ரங்கநாதன் தெருவிலிருந்து மேலெழும் கேமரா, அப்படியே பருந்துப் பார்வையில் ஜவுளி நிறுவனங்களைக் காட்சிப்படுத்தும். ரசிகர்களுக்குப் படம் முழுக்கச் சொல்ல வந்ததை அந்த ஒரு ஷாட் புரியவைக்கும்.
ச.ந. கண்ணன்