சந்தானம் நடிப்பில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்ற தில்லுக்கு துட்டு படத்தின் நான்காம் பாகத்திற்கு ‘தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட் லெவல்’ என பெயரிடப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் சந்தானத்தின் பிறந்த நாளன்று வெளியிட்டுள்ளனர்.
‘டி டி ரிட்டன்ஸ்’ ( தில்லுக்கு துட்டு ரிட்டன்ஸ்- தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகம்) எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டி டி நெக்ஸ்ட் லெவல்’ (தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட் லெவல்) எனும் திரைப்படத்தில் சந்தானம், கௌதம் வாசுதேவ் மேனன், மாறன், செல்வராகவன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைக்கிறார். கொமடி ஹாரர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டி இருப்பதாகவும், எதிர்வரும் மே மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இந்த திரைப்படத்தின் கதை சொகுசு கப்பலில் தொடங்கி, தீவு ஒன்றில் தொடர்ந்து நடைபெறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பிரம்மாண்டமான பொருட் செலவில் அரங்கம் அமைத்து படத்தினை சர்வதேச தரத்தில் உருவாக்கி வருகிறோம்” என்றார்.