தயாரிப்பு : எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ்
நடிகர்கள் : விமல், சாயா தேவி, சரவணன், ரமா, எஸ். சிராஜ், சரவண சக்தி, எழுத்தாளர் ஜெயபாலன் மற்றும் பலர்.
இயக்கம் : போஸ் வெங்கட்
மதிப்பீடு : 2.5 / 5
நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் ‘சார்’. இந்தத் திரைப்படத்தை பார்த்து ரசித்து, இது சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய கருத்து என வியந்து தன்னுடைய நிறுவனத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் பார்வையாளர்களுக்கு வழங்கி இருக்கிறார்.
வெற்றிமாறனின் பங்களிப்பிற்கு பிறகு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
மாங்கொல்லை எனும் கிராமத்தில் அரசாங்க அனுசரணையுடன் இயங்கி வரும் பாடசாலையில் தலைமையாசிரியராக பணியாற்றுகிறார் பொன்னரசன்.
இவரது தந்தை அண்ணாதுரையும் இந்த பாடசாலையில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .
அவர் தற்போது புத்தி பேதலித்த நிலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறார். இவரது இயலாமையை ஊரில் உள்ள பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
இதனால் ஆத்திரமடையும் பொன்னரசனின் மகனான சிவஞானம் தன்னுடைய தாத்தாவை கேலிக்குள்ளாக்கிய மாணவர்களிடம் நியாயம் கேட்பதற்காக சண்டையிடுகிறார்.
ஆனால் அவர்கள் ஆதிக்க சாதியினர் என்பதால் அவரிடம் சண்டைக்கு செல்லக்கூடாது என்று அவரது தாயார் சிவஞானத்தை அடக்கி வைக்கிறார்.
இதனிடையே அந்த பாடசாலையினை இடிப்பதற்காக ஊராட்சித் தலைவர் தொடர்ந்து முயற்சிக்கிறார்.
தலைமை ஆசிரியரான பொன்னரசனின் குறுக்கிட்டால் அது இடிக்க முடியாமல் தள்ளிப் போகிறது. இந்நிலையில் பொன்னரசன் தலைமையாசிரியர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
அதே பாடசாலைக்கு ஆசிரியராக பணியாற்ற தன் மகனான சிவஞானத்திற்கு இடமாற்றம் ஏற்படுத்தித் தருகிறார்.
இளமை துடிப்புடன் இருக்கும் சிவஞானம் பாடசாலை கட்டிடத்தின் பின்னணியில் இருக்கும் ஆதிக்க சாதியினரின் சதி அரசியலை உணராமல் அந்தப் பாடசாலைக்கு புதிதாக பணிக்கு சேரும் ஆசிரியையை ( சாயாதேவி)காதலிக்க தொடங்குகிறார்.
இந்த நிலையில் ஒருநாள் ஊராட்சித் தலைவர் ஏற்கனவே திட்டமிட்டபடி பாடசாலை வளாகத்தின் ஒரு பகுதியை இடித்து தள்ளுகிறார்.
அத்துடன் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பொன்னரசனையும் ஊர்மக்கள் பைத்தியக்காரன் என பட்டம் கட்டி ஒதுக்கி விடுகிறார்கள்.
இந்த நிலையில் பாடசாலைக்காகவும், பாடசாலையில் பயிலும் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமைக்காகவும், அதன் பின்னணியில் சதி அரசியலை சாமியாடியாக அரங்கேற்றும் ஆதிக்க சாதியினரின் வன்மமான அணுகுமுறையையும் கண்டுபிடிக்கிறார் சிவஞானம். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
கதை நடைபெறும் காலகட்டம் 1950, 1960, 1980 , என்பதால் அதனை திரையில் பாடல்கள் மூலமாகவும், கலை இயக்கம் மூலமாகவும் பார்வையாளர்களுக்கு படக் குழுவினர் உணர்த்தியிருக்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி அறிவு பெற்றால் அதிகார பகிர்வுக்காக குரல் எழுப்புவார்கள் என்ற காரணத்திற்காக அவர்களின் கல்வி அறிவிற்கு மூலமாக இருக்கும் பாடசாலையை அழிக்க வேண்டும் என ஆதிக்க சாதியினர் திட்டமிடுகிறார்கள்.
இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளார்ந்த நம்பிக்கையான கடவுள் நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என விவரித்திருப்பது ஒரு புள்ளிக்குப் பிறகு சோர்வை தருகிறது.
அதாவது திரைக்கதையின் பயணத்தை பார்வையாளர்கள் எளிதில் ஊகிக்கும் வகையில் பயணிக்கிறது.
இதனால் இந்தப் படைப்பின் மூலம் ஏற்பட வேண்டிய தாக்கம் கானல் நீராகிறது. இருப்பினும் தற்போது இலவச கல்வியை பெற்று வருவதன் பின்னணியில் கடந்த கால வலிகளை பதிவு செய்திருப்பதால் இயக்குநரையும் படக் குழுவினரையும் பாராட்டலாம்.
பொன்னரசனாக நடித்திருக்கும் சரவணன் , நடிப்பில் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்கிறார். சிவஞானமாக வரும் விமல், காதல் காட்சிகளில் இளமையாகவும், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாகவும் நடித்திருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி இருக்கும் நடிகை சாயாதேவி மண்ணுக்கேற்ற முகம் என்றாலும் ரசிகர்களை இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
அதிலும் ஊர் குளத்தில் அதிகாலையில் குளிக்கும் காட்சி இளமை ததும்பும் புதுமை. சக்தி எனும் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் எஸ். சிராஜ் , இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை கச்சிதமாக செய்து கவனம் ஈர்க்கிறார்.
சித்து குமாரின் பாடலில் ‘படிச்சிக்கிறோம் பொழச்சிக்கிறோம்..’ பாடல் கவனம் பெறுகிறது. பின்னணி இசையிலும் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
குறைகள் இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக உச்சகட்ட சண்டைக் காட்சிகளில் இருக்க வேண்டிய எமோஷன் மிஸ்ஸிங். ஒவ்வொரு முறை காட்சிப்படுத்தும் போதும் பெரியார், அண்ணா ,பாரதியார் ,காமராஜ், ஆகியோரின் புகைப்படங்களும், கல்வி தொடர்பான மேற்கோள்களும் வலிந்து திணித்திருப்பது போல் இருக்கிறது.
தாத்தா ,மகன், பேரன் ,என மூவரையும் ஆதிக்க சாதியினரால் பைத்தியம் என பட்டம் கட்ட முடியுமா…!? இப்படி பலவற்றை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.
இருந்தாலும் கல்வி சார்ந்த அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி உரிமை சார்ந்த படைப்பாக வெளி வந்திருப்பதால் ‘சார்’ படத்திற்கு ஒரு சல்யூட் வைக்கலாம்.
சார் – நல்லாசிரியர்.