செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு பற்றிய எனது எண்ணோட்டம் | தாருணி பாலேசன்

சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு பற்றிய எனது எண்ணோட்டம் | தாருணி பாலேசன்

5 minutes read

எழுத்துலகில் சிகரம் தொட்டு பொன்விழாவைக் கொண்டாடிய திருமதி. தாமரைச்செல்வி அவர்களின் சிறுகதைத்தொகுப்பு தான் ‘சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு’. சிறுகதையோ, நாவலோ அல்லது கட்டுரையோ வாசித்து முடித்தபின் பல எண்ணங்கள் வாசகனின் மனதில் உருவாகும். சில சமயங்களில் மகிழ்ச்சியாய் இருக்கும். சிரிப்பு வரும். முடிவு சில சமயங்களில் துக்கத்தைக் கொணரும். தாமரைச்செல்வி அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும்போதோ பற்பல உணர்வுகள் ஒருசேர எம்மைச் சூழ்ந்து கொள்ளும். நிறையவே எம்மைச் சிந்திக்கத் தூண்டும். எமது கடந்த கால வாழ்வில் நாம் சந்தித்த மனிதர்களைப் பற்றிய எண்ணங்களை மீட்டிப் பார்க்கச் சொல்லும். எமது வாழ்வின் அர்த்தத்தை தேடச் சொல்லும். கிருஸ்ணபகவானை தனது பக்தியால் அருச்சுனன் கட்டிப்போட்டது போல தாமரைச்செல்வி அவர்களின் படைப்புகள் வாசகர்களாகிய எம்மைக் கட்டிப்போட்டுவிட்டன என்று சொன்னால் மிகையாகாது. ஒரு பொழுதுபோக்காக வாசித்து முடித்துவிட்டு எம்பாட்டில் போக அவரது எழுத்துகள் எம்மை அனுமதிப்பதில்லை. எம் மனதில் பல மாற்றங்களை உருவாக்கும். எம் எண்ணங்களில் உள்ள கறைகளைக் களையச் சொல்லும். நாம் இப்படியெல்லாம் நடந்திருக்கக் கூடாதோ, வெளியிலிருந்து பார்த்து இன்னொருவரின் வாழ்வை நாம் இப்படியெல்லாம் எடை போட்டிருக்கக் கூடாதோ, என பலவாறு எம்மை சிந்திக்கத் தூண்டும். இவ்வாறான மாற்றங்களை வாசகரின் மனதில் உருவாக்கும் வல்லமை தாமரைச்செல்வி அவர்களின் எழுத்திற்கு நிறையவே உண்டு.

ஈழத்தமிழர்களின் வாழ்வில் போர் ஏற்படுத்திய வடு காலத்தாலும் மாற்ற முடியாதது. நேரடியாகவோ மறைமுகமாகவோ நாம் போரின் விளைவுகளை இன்னமும் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றோம். போர் முடிவுற்ற பின், இன்னமும் சரியாகக் கூறுவதானால் ஆயுதப் போர் முடிவடைந்தபின் வந்த எமது சந்ததியைக் கூட போரின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. அவயங்களை இழந்த தன் உறவினர், காணாமற் போனோர் பட்டியலில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கும் தனது மாமா, அந்த மாமாவைத் தேடியலையும் தனது அம்மம்மா, பூட்டன் பூட்டியிலிருந்து தனது அப்பா வரை வாழ்ந்த வீட்டின் இடிபாடுகள், இன்னும் எத்தனையோ துயரங்களை எமது அடுத்த சந்ததியும் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஏன் புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் குழந்தைகளைக் கூட இந்தப் போரின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. எந்தக் கண்டிப்புமில்லாத பேரன் பேர்த்தியின் அன்பினை வீடியோவில் கதைக்கும் ஒரு சில நிமிடங்களில் மட்டுமே தான் குழந்தையால் உணர முடிகின்றது. அப்பப்பாவின் தோளில் அமர்ந்து கோயிலுக்குப் போக முடிவதில்லை. ஓடியாடி விளையாடி களைத்து வரும் குழந்தைக்கு எண்ணெய் தேய்த்து கால் உருவி விட அம்மம்மா அருகிலில்லை. உலகெங்கும் உறவுகள் சிதறி வாழும் நிலை. இவ்வாறு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எம்மை இன்னும் சூழ்ந்து கொண்டிருக்கும் போரின் வடுக்களை தாமரைச்செல்வி அவர்களின் எழுத்துகள் சிறப்பாகவே பிரதிபலிக்கின்றன.

திருமதி. தாமரைச்செல்வி அவர்களின் ‘சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு’ சிறுகதைத் தொகுப்பின் முதற்கதையான ‘யாரோடு நோவோம்’, போரின் வடு ஒரு பெண்ணின் வாழ்வை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை எமக்கு கண் முன் படமிட்டுக் காட்டுகின்றது. அவயம் இழந்து ஆண் துணையின்றித் தவிக்கும் அவள், சூழ்நிலையின் தாக்கம் காரணமாக மறுமணம் செய்து வாழும்போது தான் இல்லையென்று எண்ணியவன் உயிரோடு இருக்கின்றான் என அறிந்ததும் அவள் மனச்சிந்தனையில் ஓடும் எண்ணங்களை, குழப்பங்களை எழுத்தாளர் தனது இயல்பான பாணியில் எம் கண்முன்னே கொண்டு வருகின்றார். கதையினை வாசித்த முடித்த பின்னரும் கூட நாம் கற்பனையில் கண்ட வேணியின் முகம் எம்மனதில் அப்படியே பதிந்து விடுகிறது.

அடுத்து ‘கனவுகளின் மீள்வருகை’. ஒரு வீடு கட்ட வேணும், எப்படி எப்படியெல்லாம் அந்த வீடு இருக்க வேணும் என்ற பெரும் கனவுக்கு எத்தனையோ தடைகள். போருக்குத் தந்தையைப் பறிகொடுத்து, வீட்டுப் பொறுப்பினை இள வயதில் சுமந்த உழைப்பாளிக்கு அவன் கனவு சுக்கு நூறாகி விட அவனது மனம் படும் பாடு. அதே கனவுடன் தனது மகனும் இருப்பது தெரிந்த கணம் அவனில் எழும் எண்ணவோட்டம். கனவுகள் நிறைந்த ஏக்கமான வாழ்வை இச்சிறுகதை நன்றாகவே சித்தரிக்கின்றது.

மூன்றாவது கதை ‘கசிந்துருகி கண்ணீர் மல்கி’. மிகவும் என்னைப் பாதித்த கதை. சில கோபங்களுக்குப் பாசமே காரணமாகிப் போக அதன் விளைவுகள் எப்படியெல்லாம் எமது வாழ்வைப் பாதிக்கின்றன என்பதை இக்கதை தெளிவாகக் கூறுகின்றது. பாசம் உண்டாக்கிய கோபம், மகளை, சகோதரியைப் பிரித்துவிடுகின்றது. ஆனாலும் அவள் எப்படியிருக்கின்றாள் என அறிய ஏங்கும் தந்தை மற்றும் அண்ணன்மார். ஆனால், போர் ஏற்படுத்திய அந்தக் கோர முடிவு. அழாமல் இக்கதையை என்னால் வாசிக்க முடியவில்லை.

உலகறிவு இல்லாத ஆனாலும் மற்றோருக்கு எந்தக் கெடுதலும் நினைக்காத அமைதியான ஒரு பெண்ணும் எந்த உணர்வுகளுமின்றி மற்றோருக்காக சிறிதேனும் அசைந்து போகும் பழக்கமற்ற ஆணுக்குமான உறவுப்போராட்டம். எம் பிள்ளைகளை முக்கியமாக பெண் பிள்ளைகளை உலக அனுபவங்களுடன் கூடியவர்களாக வளர்க்கவேணும் என்பதை சொல்லாமல் சொல்கின்றது ‘மௌன யுத்தம்’ சிறுகதை. இவ்வாறான சிறுகதைகள் சமூகத்தில் மாற்றங்களைத் தோற்றுவிக்கும் பலமிக்கவை.

அடுத்த கதை ‘எதிர்பார்ப்பு’. பிற தேசங்களில் வாழும் எமது அடுத்த சந்ததி எதிர்நோக்கும் பிரச்சினை. இரண்டு கலாசாரங்களுக்கிடையில் சிக்கித் தவிக்கும் பெற்றோரும் பிள்ளைகளும் கலந்த கலாசாரத்தில் வாழும் எமது பிள்ளைகளை எப்படித்தான் வளர்க்க வேணுமென இன்னும் எவராலுமே திடமாகக் கூற முடியாது. இக் கதையும் விடை தெரியாத ஒரு வினா போலவே முடிகின்றது. உண்மை நிலையின் விம்பம் போல இக்கதை அமைந்துள்ளது.

அடுத்து ‘வெயிலோடும் மழையோடும்’. தாயகத்திலிருப்பவர்கள் வெளிநாட்டு வாழ்க்கை பற்றி என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கை பலருக்கு எப்படி அமைகின்றது என்பதையும் தெளிவாகச் சொல்கின்றது. அதோடு மட்டுமல்லாமல், போரின் நிமித்தம் இழப்புக்களின் எல்லை வரை போய் சென்று வந்ததனால் உருவாகிய மன வைராக்கியத்தை ‘ஜனனி’ பாத்திரம் அழகாகச் சொல்கின்றது.

மேலைத்தேய வாழ்வை விரும்பும் பெற்றோருக்குப் பிறந்த அவள். தாயத்தில் போர் உருவாக்கிய வடுக்களை உணர்ந்தவன் இவன். கணவன் மனைவியாக இருவருக்குள்ளும் எழும் போராட்டம். அதற்கு மூலகாரணமாய், அவளின் பெற்றோரின் தலையீடு. இவை குழந்தைகளை எப்படிப் பாதிக்கின்றன, சிலரின் வாழ்வை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை சொல்லிச் செல்கின்றது ‘மழை வரும் காலம்’. சிந்திக்க வைக்கின்றது.

வீட்டு வேலைகளுக்கு வந்து உதவி செய்து போகும் அயல் வீட்டுப் பெண்ணின் மீது இருபது வயதில் ஏற்படும் காதல், கைகூடவில்லை. பல வருடங்களின் பின் அவளை சந்தித்த நிலைமை. மானுடர்களின் உணர்வுகள், எங்கோ ஒரு மூலையில் எப்போதும் பதிந்திருக்கும் ஏக்கம் என கலவையான உணர்வுகளைச் சொல்லிச் செல்கிறது ‘அவனும் அவளும்’. இவளுக்கு தான் ஒரு அண்ணாவாகவே இருந்திருக்கலாமோ என்ற அவனின் நினைப்பு’ எனும் வரிகளால் அவனது மனக் கலக்கத்தை தனது பாணியில் இலகுவாகவே சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்.

அடுத்து ‘இருட்டின் நிறம் வெள்ளை’ அருவியாய் ஓடும் கண்ணீரைத் துடைத்தபடி எழுத வேண்டியுள்ளது. வெட்கித் தலைகுனிய வைக்கின்றது. ச்சீ… அற்ப விடயங்களுக்காக எல்லாம் சண்டை பிடிக்கக்கூடாது. குறை கூறக்கூடாது. எம்மால் இயன்றவரை மற்றோருக்கு நாம் உதவவேண்டும் என்ற நல்லெண்ணம் தான் ஓங்குகின்றது. போராளிகளின் வாழ்க்கை, இப்போது யாருமற்ற நிலை, இயல்பாய் அவர்களுக்கு எழும் மற்றோரின் நலனைப் பற்றிய சிந்தனை, வாழ்வின் வெளிச்சத்தை இன்னமும் தேடிக் கொண்டிருக்கும் அவர்களின் ஏக்கம் என்று தெட்டத்தெளிவாக அவர்களின் வாழ்வை இக்கதை மூலம் எழுத்தாளர் எடுத்துக் கூறியுள்ளார். மனதின் பாரம் இன்னமும் குறையவில்லை. குறையவும் கூடாது. ….

‘பறவைகளின் நண்பன்’ துயரமே வாழ்வாய்ப் போயிருந்த நிலையில் சிறு வெளிச்சம் தெரிய ஆரம்பிக்கும் போது திடீரென ஏற்படும் பேரிருள். வியட்னாமிலிருந்து அவுஸ்திரேலியா வந்த இளைஞனின் கதை. நோய்கள் தான் எவ்வளவு கொடியன. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் தான். அவன் குடும்பத்தைப் பற்றி எண்ணி ஏங்க வைக்கின்றார் எழுத்தாளர்.

‘சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு’ வாசித்துக்கொண்டிருக்க இன்னும் இன்னும் ஏக்கம் வாசகர்களுக்கு அதிகரித்துக்கொண்டே போகும். அந்தப்பசு கிடைத்து விட வேணும் கடவுளே கிடைத்து விட வேணும் … அந்த முடிவு…, வறுமையிலும் இரக்கம் காட்டும் சின்னாசிக் கிழவனை இலகுவில் மறந்து போக எம்மால் முடியவில்லை. எத்தனை எத்தனை நல்ல மனிதர்கள் இவ்வுலகில் துன்பத்தையே அனுபவிக்கிறார்கள். எம்மை ஏக்கத்துடன் யோசிக்க வைக்கிறார் எழுத்தாளர்.

அடுத்து ‘இனிவரும் நாட்கள்’ நம்பிக்கையுடன் அவுஸ்திரேலியாவுக்குப் படகேறி வந்து விசா இன்றி தவிக்கும் அவனும். அவனின் துணையின்றி ஊரில் பிள்ளைகளுடன் தவிக்கும் அவளும். பல குடும்பங்களில் நிலவும் சமகாலப் பிரச்சினை. எல்லோருக்கும் இலகுவில் புரியும்படி பலபிரச்சினைகளை ஒரு சிறுகதையில் தனக்கேயுரிய பாணியில் கூறியுள்ளார் எழுத்தாளர்.

‘வாழ்தல் என்பது’ எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் நிலவிய காலத்தை, அதன்மூலம் எப்படியெல்லாம் எம் மக்கள் துன்பப்பட்டார்கள் என்பதையும் மற்றோருக்கு உதவி செய்யும் உயர்ந்த மனிதர்களைப் பற்றியும் கூறுகின்றது. விதம்விதமான பிரச்சினைளை எதிர்நோக்கும் எம்நாட்டு மக்களை எண்ணத் தோன்றுகிறது.

‘தேவதைகளின் உலகம்’ கட்டிய மனைவியையும் மகளையும் தவிக்கவிட்டு போகும் அவனிடம் எந்த நியாயமும் இருக்கப்போவதில்லை. அவன் நிச்சயமாய் நல்லவனே அல்ல என எண்ணும்போது அவனுக்குள்ளிருக்கும் வேதனையும் குற்ற உணர்வும் எமக்கும் இரக்கத்தையும் அனுதாபத்தையும் எற்படுத்துகின்றது. அவன் சுயநலமானவனாக இருந்திருந்தால் ஒரு குடும்பமாவது கஸ்டங்களை அனுபவிக்காது இருந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. ‘வினு’ விற்கு மட்டுமல்ல எமக்கும் அவளுக்குத் தோன்றிய அதே உணர்வு ஏற்படுகின்றது. எமது உளம், எண்ணங்கள் சார்ந்த ஒரு பிரச்சினையைக் கூறிச் செல்கிறது இக்கதை.

‘நிழல்’ வாசித்துமுடிய இரக்கப்படுவதா, கவலைப்படுவதா இல்லை கோபப்படுவதா என குழம்பிய மனநிலை. உற்றவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை, அவர்கள் எம்மீது வைக்கும் நம்பிக்கை, அந்த நம்பிக்கைப்; பாலம் உடையும்போது இரு சாராரும் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மன உணர்வுகள். இப்படியான ஒரு நிலையைத் தான் இக்கதையில் எழுத்தாளர் கூறியிருக்கின்றார்.

பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட இத் தொகுப்பு போரின் வலி, ரணம், சமகாலப் பிரச்சினைகள், புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் எம் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என பல வடிவங்களைத் தாங்கி நிற்கின்றது. பல சிறுகதைகளை வாசிக்கும்போது பொங்கிவரும் அழுகையை அடக்க முடியவில்லை. எம்மை ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாக்குகின்றன. எமக்குக் கிடைத்த வாழ்வை எண்ணி திருப்திப் பட வைக்கின்றன. மற்றோருக்கு உதவச் சொல்கின்றன. ஒரு சொல்லில் இத் தொகுப்பினைப் பற்றிக் கூறுவதானால், ‘அற்புதம்’ எனலாம். திருமதி. தாமரைச்செல்வி அவர்களின் எழுத்துக்கள் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது எனது பேரவா.

அவரின் தீவிர ரசிகையாக அவரின் சிறுகதைத் தொகுப்பு ‘சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு’ பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வுறும் நான், உங்களில் ஒருத்தி

தாருணி பாலேசன் | பிறிஸ்பேன், அவுஸ்திரேலியா

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More