1.
என் மலர்வு
கொண்டாட்டத்தை விரும்பியதல்ல.
கொண்டையில் சூடி மகிழ்வதற்குமானதல்ல.
மாலையாய் உருமாறி
தோள்கள் கனப்பதற்குமல்ல.
கோடை வெயிலில் கொடிவிட்ட
பூசணி நான்
மலர்வேன்
மடிவேன் மகிழ்வாய்
நாளை என்மடியில் கருக்கட்டும்
சிறுபிஞ்சின்
புன்னகையில் மலரும்
மானிடத்தின் உழைப்பு.
2.
பெருவெளிகள் குறுகிய நாளில்
கைவிலங்குகள் பூட்டி
உன்னை இழுத்து செல்கையில்
நானும் அங்குதானிருந்தேன்.
என் துப்பாக்கிகள் அவிந்திருந்தன
தோள் பட்டை
ரவைக்கூடுகள் நளுவியிருந்தன
கதறுவதை தவிர
குரல்வளைக்கு வேறு தேர்வுகளில்லை.
கொலைக்களத்துக்கு உன்னை அழைத்துச் செல்கையில்
இயலாமையை
பருகிய தாகத்துடன்
நானும் அங்குதான் இருந்தேன்
என்னுடைய கொலைக்களத்திற்கு
அழைக்கப்படுவதற்காக..
3.
பொண்னையாப்பிள்ளையின்
பிரேதம் வந்தது.
புரண்டு அழுகின்றான்
டாக்டர் மருமகன்
சீதனச்சண்டையில் ஒதுங்கிய
தலைமகன்
மொட்டைச்சிரசுடன் மூலையில்
கசிக்கிறான்.
பாக்கு வெற்றிலை தட்டம் நிறைய
குளிர்பான போத்தல்கள்
பரிமாற்றம் புரிந்தன.
பாடை கட்டிய பத்தர் சண்முகம்
“போத்தல் ” இல்லையென்று
வாயை சுளிக்கிறார்.
கடிகாரம் பார்த்து
கைகளை சொரிந்து
நேரம் போகுதென்று நெளிகிறார்
நல்மனிதர்.
பட்டு வேட்டியில் பந்தம் பிடிக்க
பயத்துடன் நிற்கும் பேரக்குழந்தையை
கண்களை மூடிய பொன்னையாத்தேவர்
கற்றுக்கொடுக்கிறார்
சாவினை பழக.
வில்வரசன்