செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவிடம் கட்டும் பணியை நிறுத்த இலங்கை முயற்சி

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவிடம் கட்டும் பணியை நிறுத்த இலங்கை முயற்சி

3 minutes read

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவிடம் கட்டும் பணியை நிறுத்த இலங்கை முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி, தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதை நிறுத்தும் முயற்சியில், பிராம்ப்டன் மேயருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மே மாதம் 03ஆம் திகதி மேயர் பேட்ரிக் பிரவுனுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அங்கு நினைவுச்சின்னம் அமைப்பது கனடாவில் “மத நல்லிணக்கத்தை கடுமையாக சீர்குலைக்கும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரொறொன்ரோவிலுள்ள இலங்கையின் தூதரக அதிகாரி துஷார ரொட்ரிகோ, இந்த நினைவுச்சின்னம் “ஆழமாக சிதைக்கப்பட்ட மற்றும் தவறான வன்முறைச் செய்தியை வெளிப்படுத்துகிறது” என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடிதம் இணைக்கப்பட்டுள்ளது : 240813 SL CG letter Patrick Brown Brampton Canada

2009 இல் பாரிய இராணுவத் தாக்குதலின் போது அரச படைகள் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை படுகொலை செய்த போதிலும், தாம் இனப்படுகொலை செய்ததாகக் கூறப்படுவதை இலங்கை தொடர்ந்து மறுத்து வருகிறது.

மருத்துவமனைகள் மீண்டும், மீண்டும் குறிவைககப்பட்டன. பரவலான பாலியல் வன்முறைகள் பயன்படுத்தப்பட்டன மற்றும் சரணடைந்த தமிழர்கள் 2009இல் தூக்கிலிடப்பட்டனர்.

இனப்படுகொலையின் போது தமிழர் பகுதிகளுக்குள் நுழைய, உணவு மற்றும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பல ஐ.நா அறிக்கைகள் ஆவணப்படுத்தியுள்ளன. எனினும், இதை ரொட்ரிகோ நேரடியாக மறுத்துள்ளார்.

இன்றுவரை, அட்டூழியங்களுக்கு பொறுப்பேற்க இலங்கை மறுத்து வருகிறது.

பல்லாயிரக்கணக்கான படையினர் நிலைகொண்டுள்ள வடக்கு-கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலப்பரப்பை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் குடும்பங்களும் தொடர்ச்சியாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பலவந்தமாக கடத்தப்பட்ட தமது அன்புக்குரியவர்களின் இருப்பிடத்தை அறியுமாறு கோரி தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும், ரொட்ரிகோவின் கடிதம், “கொழும்பு புலிகளை விடுவித்துள்ளதுடன், முன்னர் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த மோதல் பிரதேசங்களில் நிலங்களை கையளித்துள்ளது” என்று கூறுகிறது.

யாழ்ப்பாணத்தில் தமிழ் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, நினைவுச்சின்னம் ஒன்று 2021 இல் நிர்மாணிக்க முன்மொழியப்பட்டது.

அந்த நேரத்தில், கனடாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் பல எம்.பி.க்கள் இந்த அழிவைக் கண்டித்தனர். இது கனடாவிலும் பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியது.

பிராம்ப்டன் நகர சபை நினைவுச்சின்னம் அமைப்பதற்கான ஒரு பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றியது.

அத்துடன், இறுதி வடிவமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டதுடன், 4.8-மீட்டர் உயரமுள்ள துருப்பிடிக்காத எஃகு நினைவுச்சின்னம் நிரந்தரமாக சிங்குகௌசி பூங்காவில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை இலங்கையில் சீற்றத்தை ஏற்படுத்தியதுடன், இலங்கை அரசாங்கம் கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை கூட இந்த திட்டங்கள் தொடர்பாக விசாரணை செய்ய அழைத்ததாகக் கூறப்படுகிறது.

ரொட்ரிகோ தனது கடிதத்தில், “கனடாவின் முன்னணி தமிழ் அமைப்பில் ஒன்றான (sic) கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC), கொழும்பில் உள்ள கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் பங்கேற்புடன் இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளை ஆரம்பித்தது” என்றும் கூறுகிறார்.

“மேலும், நல்லிணக்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இமயமலை பிரகடனத்தின் கட்டமைப்பின் கீழ், புத்த பிக்குகளுடன் CTC முக்கிய ஈடுபாடுகளை மேற்கொண்டுள்ளது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனேடிய தமிழ் காங்கிரஸ் என்பது டொராண்டோவை தளமாகக் கொண்ட தமிழ் சமூக அமைப்பாகும், இது 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில், பல புலம்பெயர் தமிழ் குழுக்களைப் போலவே, CTCயும், 2009 இல் இலங்கை அரசால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரியது.

எவ்வாறாயினும், 2009 இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தில் தமிழினப் படுகொலையை வழிநடத்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் CTC மற்றும் Global Tamil Forum (GTF) மேற்கொண்ட சந்திப்பு கடந்த ஆண்டு சீற்றத்தைத் தூண்டியதுடன், ஒரு ‘நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட துரோகம்’ என்று வர்ணிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘இமயமலை பிரகடனம்’ முயற்சியானது, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, CTC மற்றும் GTF உறுப்பினர்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில், காணாமல் போனவர்களின் குடும்பங்கள், பெண்கள் அமைப்புக்கள், மாணவர்கள் மற்றும் மதகுருமார்கள் இதனை நிராகரித்து, “சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழர்கள் அனுபவித்து வரும் தமிழர்களின் அவலங்களையும் வேதனைகளையும் முற்றாகப் புறக்கணிப்பதாக” குற்றம் சாட்டினர்.

அத்துடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர், அதே நேரத்தில் டஜன் கணக்கான புலம்பெயர் அமைப்புகள் இந்த முயற்சியை கண்டித்து, சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைக்கான கோரிக்கைகளை இது குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டின.

கனடாவில், 18 வெவ்வேறு தமிழ் கனேடிய மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் தொகுப்பு CTC யிடம் இருந்து “பொது மன்னிப்பு” கோரியுள்ளது, அதே நேரத்தில் அவர்களின் ஆலோசனைக் குழுவில் குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழின அழிப்பு நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, Bramptio நகரின் Chinguacousy Parkஇல் இன்று (14) மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நன்றி – தமிழ் கார்டியன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More