27
படுக்கையில் அமர்ந்திருந்து
இரு கைகளையும் ஏந்திப் பிரார்த்திப்பவராக
எனது மணிக்கட்டை வருடி
“உனக்கென்று கொஞ்சமாவது சேமிக்கவேண்டும்” என்று சொல்பவராக
“நீ ஏன் இப்படி இருக்கிறாய்?” என விசனங்கொள்பவராக
கட்டிலில் யாருமே இல்லாதது போல
சருகின் வடிவில் உறங்குபவராக
நள்ளிரவில் விளக்கெரியும்
எனது அறையின் முன்னின்று
கதவைத் தட்டிக்கொண்டிருப்பவராக
அம்மா என் கனவில் வருகிறார்
விதம்விதமான செல்லப்பெயர்களால் என்னை அழைத்தபடி
அம்மா என் கனவில் வருகிறார்
படிக்கட்டில் தலை அடிபட வீழ்ந்துகொண்டிருப்பவராக
தலையணையில் ஊறிய குருதியாக
வைத்தியசாலையில் படுத்திருப்பவராக
தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி வேண்டிக் கேட்டுக்கொள்பவராக
“உனக்குச் சிரமந் தரமாட்டேன்” என கண்கலங்குபவராக
என் கைகளைப் பிடித்தபடி,
எனைத் தாங்கிய வயிறு
மெலிதாக ஏறியிறங்க மூச்சுவிட்டபடி உறங்கிக்கொண்டிருப்பவராக
ஒரு விடிகாலையில்
மரணச் செய்தியாக
அம்மா என் கனவில் வருகிறார்.
வெறுமையாகிவிட்ட கட்டிலாக
திருநீற்று வாசனையாக
மூக்குத்தி உறுத்தும் முத்தமாக
தூலமற்ற தன்னுடலால்
வெற்றிடங்களையெல்லாம் நிரப்பும்
ஒற்றை ஆன்மாவாக
அம்மா என் கனவில்
ஒவ்வொரு நாட்களும் வருகிறார்.
-தமிழ்நதி