அமாவாசை இருளொன்றில்
அவைகளின் இருப்பிடம் புகையூட்டப்பட்டது.
தோழர்கள் கொல்லப்பட்டனர்.
குழந்தைகளை தீ உண்டது.
உழைப்பின் வெகுமானங்களை
முரட்டுக்கரங்கள் சூறையாடின.
தப்பித்து சிறகுதைத்து
எல்லை கடந்தவைகளை முகமூடிகளின் தீ நாக்குகள்
சுற்றிவளைத்தன.
ஊழித்தாண்டவதில்
உழைப்பைக் கொள்ளையிட்டவர்கள்
புறங்கைகளைச் சுவைத்தபடி
இருளில் கரைந்தனர்.
ஆயினும் மறுநாளின்
சூரிய உதயத்தில்
தப்பித்த தேனீக்களுக்கு
புதிய வீடு,
புதிய தலைவன்,
புதிய கனவு
இருளில் கருகாத ஒவ்வொரு சிறகிலும்
பழைய உழைப்பு.
வில்வரசன் –