’அலையோடு நீராடு…’-கவிதைத்தொகுதி வெளியீட்டுவிழாவில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன்
சங்கரி சிவகணேசனின் ’அலையோடு நீராடு…’-கவிதைத்தொகுதி
வெளியீட்டுவிழா அண்மையில் புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில்
இடம்பெற்றவேளை . மேனாள் துணைவேந்தர் பேராசிரியர்
என்.சண்முகலிங்கன் அவர்கள் விருந்தினராக கலந்து
கொண்டுவாழ்த்துரை வழங்கினார் .
அவர் தமது வாழ்த்துரையில் ’அறிதலையும் உணர்தலையும் தாண்டிய எழுதலே சங்கரி கவிதைகளின் தனித்துவம் என்பேன் .தன்னை அறிதல் என்ற மந்திரச் சொல் இன்பமாய் சங்கரி சிவ கணேசனின் ’அலையோடு நீராடு…’-கவிதைத்தொகுதி வசமாகின்றது. சமூகவாழ்வின் நிறுவனமயமாக்க மேலாண்மை அலைகளுக் குள் அந்தரிக்கும் இதயங்களுக்கான ஆற்றல் வீச்சுகளாக சங்கரியின் கவிதைகள் சமூக முக்கியத்துவம் பெறுகின்றன.
முகமூடிகளைத் தாண்டி
முகத்தைக் காணும் கண்கள்
வாய்த்த பின்புதான்
வாழ்க்கை புரிய ஆரம்பிக்கின்றது
என முதற்கவிதையிலேயே இன்றைய வாழ்வின் உறவுப்போலிகள் பற்றிய அறிதலும் உணர்தலும் அடிக்கோடிடப்படுகின்றன. கடந்து செல்லுதல் என்பதே இக்கவிதைகளின் உயிர் மூச்சாகும்.
கடக்கத் துணிந்தபின் மலை கூட கடுகளவுதான்
என்றவாறு அலையொடு நீராட அழைக்கும் சங்கரியின் சொல்லாடல் வல்லமைகளாக வலி தாங்கி வலி பெறல் , தினந்தினம் பிறந்திடும் மீள் பிறப்பு , உயிர்த்தெழல் என்பன அடி நாதமாக ஒலித்து நிற்கின்றன.
வெறும் உணர்வு வெளிப்படாக இல்லாமல் அறிவார்ந்த ஒரு பெருந் தவமாகவே இந்தக் கடத்தலின் படிமுறைகளை இக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனித்திருந்து தன்னைத்தான் செதுக்கிக் கொள்ளும் சுய தரிசனமும் ( Self realization ), அதன் வழியான சுய திறனியல் எய்துகையும் ( Self actualization ) வசப்பட்டுவிட்டால்
’ மலைகளைத்தாண்டி எழுகின்ற சூரியனின்
விடியல் நிரம்பிய வானத்தை
விரல்கள் நீட்டித்தொட்டுவிடலாம் ’
என சங்கரியின் கவிதா இலக்கு தெளிவாகவே இக்கவிதைகளின் வழி வெளிப்படக்காணலாம் .அலையோடு நீராடும் இந்தக் கவிதைகளினூடு நிமிர்வது சங்கரியின் சுயம் மட்டுமல்ல ; அவளது கவிதா அனுபவத்தினைத் தனதாக்கும் எங்கள் தமிழ் கவிதை உலகமும்தான் என்றால் மிகையில்லை.
அலையோடு நீராடும் வல்லமையை எமதாக்கும் சங்கரியை எல்லையிலா அன்புடன் வாழ்த்துகின்றேன் ’என்றார் .
இவ்வெளியீட்டுவிழாவில் பிரதம விருந்தினராக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா கலந்து சிறப்பித்தார் ,பேராசிரியர் சி.சிவலிங்கராஜா வெளியீட்டுரை நிகழ்த்தினார். சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் இ.இராஜேஸ் கண்ணன் நயப்புரை வழங்கினார்.