பசும்பொன் பூத்த என் நிலம் -அங்கே
பனித்துளிகளும் உறங்கிடும் தித்திப்பில்
மேவிய புகை மண்டலமும்
சற்றே தவழ்ந்து செல்லும் காட்சி
பச்சிளங் குழந்தை பார்க்குமாபோல்
குறுநகையுடன் வரவேற்கும்
என்நில பூச்செண்டுகள்
கிடுகிடுத்த கால்களை தாங்கியே
சுமந்திடும் என் தாய்மண்
ஓங்கி வளர்ந்த காட்டுக்குள்ளே
கீற்றுகளின் உறுமலில் ஓடிய குழந்தைகளும்
பயத்தினால் ஒழிந்த மரப்பொந்துகளும்
அங்கே தாவித்திருந்த மந்திகளும்
கூச்சலிட்ட கரிச்சான்களும்
பூச்சி பூரான்களை துரத்திய குருவிகளும்
என் நிலம் போற்றிய செம்பகங்களும் எங்கே?
தற்கால முகவரி தொலைத்துவிட்டனவோ?
கிடுகிடுத்த கால்கள் சுமந்த
என் மண் மேலே இவன் கால்கள்
தடுமாறி விழமாட்டானோ எனும்
கிறுக்கு தலை சுற்றுகிறது.
விதைகள் மேலே கொட்டிய நெருப்பும்
அணைந்திடாமல் தகர கொட்டகையில்
காவல் காக்கிறது
அணைந்திட முடியாமல் ஒருநாள் மட்டும்
விதைகளுக்கு விடுதலையாய்
பாதை மருங்கிலும் கொள்ளிக்கட்டயுடன்
சூட்சுமங்களை சுமந்தபடி அசைகிறது
விதைகள் விருட்சங்களாகி
பற்றி எரியும் சுவாலைகளை அணைத்திடும் ஓர் நாள்
பற்றவைத்தவனுக்கு புரியவில்லை
விதைகள் நெருப்பாற்றில் குளித்தவையென்று
அன்று நாம் வணங்கிய தேசமது
இன்று வாசல் தெரியாமல் அழைக்கிறது
செல்ல வழிதெரியாமல் வாய்
பிதற்றுகிறது
எனக்கோர் நிலமில்லை
முள்வேலிகளால் மூடப்பட்டுள்ளது
எனக்கொரு வீடில்லை
சிப்பாய்களின் அடுப்படியாகிற்று
என் சொந்தங்கள் எங்கே?
யமனுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டேனா?
மூடி மறைக்கப்பட்ட யதார்த்தங்களாகிற்று
என் குழந்தை அழுகின்றாள்
சிறுவயதிலும் மடிப்பிச்சை கேட்கின்றாள்
சொப்பனத்தில் என்னோடு வந்துவிடு என்கிறாள்
விழிகளை மூட முடியவில்லை
காயம்பட்ட நெஞ்சம் புழுவாய் துடிக்கிறது
பற்றி எரிந்த என்தேசத்தின் கருகிய வாடை
ஐநா வாயிலில் நாறியதாம்
மூக்கடைத்து விண்வெளியில் இருந்து
அழகு பார்த்து வீரர்களின் சாகாசம்
பாராட்டி சென்றது ஒருமைகள்
கத்தினேன் கதறினேன் கூச்சலிட்டேன்
கேட்கவில்லை விண்ணூர்தி வீரனுக்கு
துப்பாக்கி மட்டும் எனை நோக்கித்திரும்பியது
திறந்த விழியினுள் இருண்ட யுகங்களை
தாண்டியும் செல்களை துளைக்கும்
தீராக்காயங்களை சுமந்தபடி
பொருமிடும் என் நெஞ்சம்
தாகங்கள் தணியாமல்…
கேசுதன்