அமெரிக்கா அதன் நெருங்கிய நட்பு நாடான கனடாவுக்கு எதிரான வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
கனடா, சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்கும் புதிய வரி முட்டாள்தனமானது என்றும் அவர் சாடினார்.
இந்த வரிக்கு பதிலடியாக பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிக்கு 25 சதவீத வரியை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். போராடுவதிலிருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்றும் கனடா பிரதமர் தெரிவித்தார்.
இந்நிலையில், கனடா விதிக்கும் 25 சதவீத வரிக்கும் மேலதிக வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சீனாவின் வரிவிதிப்பு
இதேவேளை, இம்மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சில பொருள்கள் மீது கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் வரை வரி விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
அதன்படி, கோழி, கோதுமை, சோளம், பருத்தி போன்றவற்றுக்குக் கூடுதலாக 15 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்பதுடன், காய்கறிகள், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, பழங்கள், பால் சார்ந்த பொருள்கள் ஆகியவற்றுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீனாவின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 10 சதவீத வரியை டோனல்ட் டிரம்ப் அறிவித்தமைக்கு பதிலடியாக சீனாவின் வரிவிதிப்பு அமைந்தது.