அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பின் மிரட்டல்களைச் சமாளிக்கத் தமக்கு வலுவான அதிகாரம் தேவைப்படுவதாக தெரிவித்த கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, திடீர்த் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதாவது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதியன்று தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவைப் பிளவுபடுத்தி, அதை அமெரிக்காவுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள டிரம்ப் பார்ப்பதாக மிதவாதக் கட்சித் தலைவரான கார்னி தெரிவித்தார்.
இரு நாட்டு உறவு மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதை அவரின் கருத்துகள் காட்டுவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
டிரம்ப் பதவிக்கு வந்ததும் கனடா மீது வரிகளை விதித்ததோடு, அதை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைத்துக்கொள்ளப் போவதாகவும் மிரட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கார்னி, வாழ்நாளில் மிகப்பெரிய நெருக்கடியைக் கனடியர்கள் சந்திப்பதாக தெரிவித்தார்.
டிரம்ப்பின் விருப்பம் கைகூட அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலி யெவ், அமெரிக்காவுடன் அரசதந்திர உறவை ஏற்படுத்தும் அணுகுமுறையைப் பின்பற்றப்போவதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.