ஒருநாளில் 6 பெண்கள் இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவற்றில் 4 இல் 3 பேர் 13 வயதுக்கு குறைவான சிறுமிகள் என்று பாராளுமன்றத்தில் பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிராக 33000 குற்றங்களும் பிள்ளைகளுக்கு எதிராக 24000 குற்றங்களும் பதியப்பட்டுள்ளன. ஆனால் 617 பேர் தான் குற்றங்களை அனுபவிக்கின்றனர் என்று அவ்வமைப்பின் உறுப்பினர் ரோசிசேனநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மகளிர்தின சிறப்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில் தெரிவித்ததாவது,
கல்வி சுகாதாரம் என்ற ஏனைய துறைகளில் இலங்கை மத்திய கிழக்கு நாடுகளை விட முன்னிலை வகித்தாலும் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களிலும் முன்னிலை வகிப்பது வேதனையானது.
உலகளவில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் முதன்மை வகிக்கும் நாடுகளில் இலங்கை 4 ஆவது இடத்தில் உள்ளது. உலகளவில் பெண்கள் அதிகமாக வன்முறைக்கு உள்ளாகின்ற நாடாக எமது நாடு உள்ளது.
உண்மையில் பெண்கள் அரைகுறை ஆடைகளை அல்லது கால் தெரிவது போன்ற கவர்ச்சியான ஆடைகளை அணிவதே பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என்று சிலர் வாதிடுகின்றனர். உண்மையில் அது உண்மையெனில் இன்று நாம் பெண்கள் அணியும் உள்ளாடை போன்ற உடைகளை உடுத்திக் கொண்டு எம் தாய்மார்கள் வயல்களில் வேலை செய்துள்ளனர். அப்போது அவர்கள் இன்றைய காலத்தில் போல் வன்முறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்பட்டனரா? இல்லை.
இங்கு பாலியல் வன்முறைகள் செய்வதற்கு உடைகள் காரணம் அல்ல. மனிதனின் மனதே அவர்கள் மனதில் ஏற்பட்டுள்ள குடூரமான எண்ணங்களே அதற்கு காரணம் என்று தெளிவாக புரிகின்றது.
அத்தோடு எம் நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே பாலியல் கல்வி அறிமுப்படுத்தப்பட்டால் இந்த துஷ்பிரயோகங்களில் இருந்து விடுதலை அடைய முடியும் என்ற ஒரு கருத்தும் உள்ளது. உண்மையில் இது வரவேற்கத்தக்க விடயமே ஆகும்.
ஏனெனில் தான் எவ்வாறு தாய்மை அடைகிறேன் எவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றேன் என்பதனை அறியாமலேயே சிறுமிகள் இன்று அம்மா ஸ்தானத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இதிலிருந்து சிறுவர்களுக்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு பாலியல் கல்வி அவசியமானதே. இது தொடர்பில் ஏற்கனவே சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இது தொடர்பிலான நூல்களை கூட இலவசமாக வழங்கின. ஆனால் அப்போது இது ஒரு தவறான விடயம் என்று பல பெற்றோர்கள் எதிர்ப்பு காட்டியதன் விளைவாய் அது நிறுத்தப்பட்டது.
இதன் மூலம் சிறுவர்களுக்கு எதிராக செய்யப்படும் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்த கூடிய வழிவகைகள் அல்லது சிறுவர்கள் துஷ்பிரயோகங்களில் இருந்து விடுபட கூடிய ஒரு நிலை உருவாகும். இது சிறுவர் பாதுகாப்பிற்கு அவசியமானது. எனவே இது தொடர்பில் பாராளுமன்றில் கலந்துரையாடுவோம்.
மேலும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக வன்முறைகளை விசாரிக்கும் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க கூடிய பொது மனு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்கள் பெண்களுக்கான பாதுகாப்பினை அதிகரிக்க முடியும் என்றார்.