புற்றுநோய்களில் ஒப்பீட்டு அளவில் ஆபத்து குறைந்ததாகக் கருதப்படுவது மார்பகப் புற்றுநோய். ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்திவிடலாம். ஆனால், சில வகை மார்பகப் புற்றுநோய்கள் உயிரிழப்பை ஏற்படுத்திவிடக்கூடியவை.
இந்த வகை புற்றுநோயாளி களும் மகிழ்ச்சியடையக்கூடிய வகையில் ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டிருக் கிறது. சில பத்தாண்டுகள் ஆராய்ச்சி செய்ததன் விளைவாக, மார்பகப் புற்றுநோயாளிகளின் வாழ்நாட்களை நீட்டிக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஹார்மோன் சிகிச்சையை மட்டும் கொடுத்தபோது இருந்ததைவிட, Ribociclib மருந்தையும் சேர்த்துக் கொடுத்தபோது, உயிரிழக்கும் ஆபத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்திருக்கிறது என்கிறார்கள் அமெரிக்காவின் புற்றுநோயியல் துறை ஆராய்ச்சியாளர்கள். இந்தச் செய்தி மார்பகப் புற்றுநோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.
சாராவின் ஆராய்ச்சி
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், மருத்துவர் சாரா ஹர்விட்ஸ் தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மெனோபாஸ் கட்டத்துக்கு முன்புள்ள, 59 வயதுக்குக் கீழுள்ள 672 பெண்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் ஹார்மோன் சிகிச்சை வழங்கப் பட்டது. இவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெண்களுக்கு மட்டும் Ribociclib மருந்தும் சேர்த்துக் கொடுக்கப் பட்டது.
42 மாதங்களுக்குப் பிறகு மருந்தும் ஹார்மோன் சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்பட்ட பெண்களில் 70% பேர் உயிருடன் இருக்கிறார்கள். ஹார்மோன் சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்ட பெண்களில் 46% பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
“மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்காக, முதல் முறை நிகழ்த்தப்பட்ட வாழ்நாள் நீட்டிப்பு ஆராய்ச்சி இதுதான். இந்த ஆராய்ச்சியின் மூலம் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்பது எல்லோருக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. Ribociclib மருந்தும் ஹார்மோன் சிகிச்சையும் எடுத்துக்கொண்ட பெண்களுக்கு 23.8 மாதங்கள் வரை புற்றுநோய் அணுக்கள் பரவவில்லை. ஹார்மோன் சிகிச்சையும் மட்டும் எடுத்துக்கொண்ட பெண்களுக்கு 13 மாதங்களிலேயே புற்றுநோய் அணுக்கள் பரவ ஆரம்பித்துவிட்டன” என்கிறார் சாரா ஹர்விட்ஸ்.
முற்றிய நிலையில் உள்ள மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இந்த முதல் கட்ட ஆராய்ச்சி முடிவு மிகுந்த நம்பிக்கையை அளித்திருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் முன்னேற்றம் நிகழக்கூடிய சாத்தியம் வாய்த்திருக்கிறது.
நன்றி : இந்து தமிழ் | சுஜாதா