செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் பிரசவத்தை கடினமாக்கும்!

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் பிரசவத்தை கடினமாக்கும்!

2 minutes read

இன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

பொதுவாக ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு உடல்நலம் மட்டும் போதுமானது இல்லை; மனநலமும் நன்றாக அமைய வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய ஆலோசனை.

ஏனெனில், மகிழ்ச்சியான மனநிலை பெண்களுக்கு சுரக்கும் பல ஹார்மோன்களை ஊக்கப்படுத்தி, ஆரோக்கியமான கர்ப்ப வளர்ச்சிக்கும்; பிரசவ நேரத்தில் இடுப்புத் தசை இயக்கங்களைக் குஷிப்படுத்தி, பிரசவம் எளிதாக நிகழ்வதற்கும்; பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் சுரத்தல், கருப்பைத் தன்னிலை மீள்தல் உள்ளிட்ட உடலியல் இயக்கங்கள் சரியாக நிகழ்வதற்கும் துணைபுரிகிறது. எனவே, கர்ப்பிணிகளுக்கு மனமும் இதமாக இருக்க வேண்டியது அவசியம்.

கர்ப்பிணிகளுக்கு மனச்சோர்வு (Depression) ஏற்படுவது சாதாரண நடைமுறைதான். இதில் மிதமான மனச்சோர்வு, தீவிர மனச்சோர்வு என இரண்டு வகைகள் உண்டு. மனச்சோர்வின் அறிகுறிகள் மிதமான மனச்சோர்வு பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஏற்படவே செய்யும். அதில் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், தீவிர மனச்சோர்வு ஏற்பட்டால் அதை கவனிக்க வேண்டியது அவசியம். உறக்கம் குறைவதும், உடலில் சக்தி இல்லாமல் இருப்பதுபோல் தோன்றுவதும் தீவிர மனச்சோர்வுக்கு முதலில் தோன்றும் அறிகுறிகள். இந்த இரண்டுமே கர்ப்பிணிகளுக்கு முதல் டிரைமெஸ்டரில் இயல்பாகவே இருக்கும் என்பதால், இவை மனச்சோர்வின் அறிகுறிகளாகக் கருதப்படுவது சற்று தாமதமாகலாம்.

அடுத்ததாக, பசி குறைவது, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, காரணமற்ற கவலை, எரிச்சல், கோபம், அழுகை போன்ற அறிகுறிகள் வெளிப்படும். இவை எல்லாமே மகப்பேறு மருத்துவரின் சரியான ஆலோசனைகள் மூலம் சரியாகிவிடும்.தீவிர மனச்சோர்வு பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகுதான் ஏற்படும். ஒரு சிலருக்குக் கர்ப்ப காலத்திலும் ஏற்படலாம். இவர்களுக்கு பயம், பதற்றம், மனக்குழப்பம், குழந்தையைப் பேணுவதில் ஆர்வமின்மை, குடும்பத்தாருடன் பேசுவதும் பழகுவதும் குறைவது, தற்கொலை முயற்சி, குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சி போன்ற மோசமான
அறிகுறிகள் தோன்றும்.

மனநலப் பிரச்சனை உள்ள கர்ப்பிணிகள் தொடக்கத்திலிருந்தே சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால், கருவில் வளரும் குழந்தைக்கு அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை. என்றாலும், சிலருக்குப் பிரசவ நேரத்தில் கருப்பை வாய் திறப்பது தாமதமாவது, குழந்தை கீழிறங்குவது தாமதமாவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு சுகப்பிரசவம் ஆவது தடுக்கப்படலாம்; சிசேரியன் பிரசவம் தேவைப்படலாம்.

நன்றி : அதிர்வு இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More