தமிழர் பாரம்பரியத்தில் மண்ணில் விளையும் புல், பூண்டுக்குள் உள்ள மருத்துவ குணங்களைக் கண்டறிந்து வாழ்க்கை முழுக்கவும் பயன்படுத்தியுள்ளனர். இயற்கை மருத்துவ முறைகளால் நூற்றாண்டுகளைத் தாண்டியும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். எந்த பக்கவிளைவுகளும் இன்றி, இன்றளவும் அவற்றை மருந்தாக பயன்படுத்த முடியும். சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் உடல் அழகைக் குறைக்கும் மாசுகளில் இருந்து அழகை பாதுகாக்க கை கொடுப்பதில் கற்றாழைக்கு முக்கிய இடம் உள்ளது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
கற்றாழையின் மருத்துவ குணங்கள் மக்கள் மத்தியில் பரவி வருவதால், கிராமங்கள் மட்டுமின்றி நகர்ப்புறத்திலும் கிடைக்கிறது கற்றாழை. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை எனப் பல வகை இருந்தாலும் இதில் மருத்துவராக செயல்படுவது சோற்றுக் கற்றாழை மட்டுமே.
கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் அழகுசாதன பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோற்றுக் கற்றாழை மடல்களை பிளந்த நுங்குச் சுளை போல உள்ள சதைப்பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் 7 – 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால் கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.
கூந்தல் வளர: சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து, ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது படிகாரத் தூளைத் தூவி வைத்தால், சோற்றுப் பகுதி யில் உள்ள சதையின் நீர் பிரி ந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண் ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால்: கண்களில் அடிபட்டாலோ இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால், கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு: மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை எடுத்து, அதில் நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் எண்ணெய் ஆகும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள்: தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாற்றை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் உடனடி மருத்துவர் கற்றாழைச் சாறுதான். இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
நன்றி : வெளிச்சவீடு