கரு விழி, மான் விழி, மீன் விழி, வேல் விழி என பெண்களின் கண்களை கவிஞர்கள்தான் எவ்வளவு உவமைப்படுத்துகிறார்கள். சிறப்பு வாய்ந்த நமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது? வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி நீக்குவது போன்ற வழிமுறைகளைச் சொல்கிறார் அழகுக் கலை நிபுணர் ஹேமலதா. முகத்தை பளிச்சென ஃப்ரெஸ்ஸா, ப்ரைட்டாகக் காட்டினாலும், நம்மைப் பார்ப்பவர்களை எதிர்கொள்வது என்னமோ நம் கண்கள்தான். உள்ளமும், உடலும் சோர்வாய் இருப்பதை கண்களே காட்டிக் கொடுக்கும். மருத்துவர்கள் எப்படி கை மற்றும் விரல் நெகத்தைப் பார்த்து நோய் அறிகுறிகளைக் கண்டு பிடிக்கிறார்களோ, அதேபோல் கண்களைப் பார்த்தும் நோயினை கண்டுபிடிக்க முடியும்.
கண் அழகு கெட்டாலே, மொத்த உடலின் ஆரோக்கியமும் சரியில்லை என்றாகும். இத்தனை சிறப்புபெற்ற கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றினால், கண்ணாடியில் நமது உருவத்தைப் பார்க்கும்போதே சோர்வடையத்தானே செய்யும். கண்களுக்கு கீழே தோன்றும் கருவளையமும் தோல் பிரச்சனைதான். கருவளையம் வருவதற்கு பல காரணங்கள் இருப்பினும், முக்கியமானது நமது உடல் ஆரோக்கியம் சரியில்லை என்பதே. முகத்தில் தோன்றும் அலர்ஜி, தளும்பு, முகப்பரு, பிக்மென்டேஷன் இவைகளைப்போலவே கருவளையத்தையும் பார்த்தவுடன் நம்மால் கண்டுபிடிக்க முடியும்.
விட்டமின், அயர்ன், மினரல்ஸ் போன்ற நம் உடலிற்குத் தேவையான ஊட்டச்சத்தின் அளவு குறைவாக இருந்தாலே கண்ணிற்கு கீழே கருவளையம் தோன்றும். அதேபோல் உடலில் நீர்ச்சத்து குறைவு, தண்ணீரை குடிக்காமல் இருப்பது, மன அழுத்தம் போன்ற காரணங்களும் கருவளையம் தோன்ற காரணங்கள்.
சரியான முறையில் தூங்காமல் இருப்பது. இரவு நீண்ட நேரம் விழித்திருந்து படிப்பது, குழந்தை பெற்ற பெண்கள், கைக்குழந்தையால் சரியான தூக்கமின்றி சோர்வடைவது, இரவு நேர பணி செய்பவர்களுக்கும் தூக்கம் கெடுவதால் கருவளையம் தோன்றும். தொலைக்காட்சி, கணினி, கைபேசி போன்ற உபகரணங்களை தொடர்ந்து கண்களுக்கு அருகில் வைத்து பயன்படுத்துவதன் மூலமும் கண்கள் சோர்வடைந்து கருவளையம் தோன்றலாம்.
நமது உடலுக்கு எல்லா வகையான சத்துக்களும் சரிவிகிதத்தில் தேவை. ஒரே வகையான உணவை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால் ஒரே வகையான சத்து மட்டுமே நம் உடலுக்கு கிடைக்கிறது. சிலர் துரித உணவுகளான பீசா, பர்க்கர் போன்றவைகளை மட்டுமே உண்பார்கள். வேறு சிலர் ஓட்ஸ், கெலாக்ஸ் மட்டுமே சாப்பிடுவார்கள். காய்கறிகள், கீரை, பருப்பு போன்ற சரிவிகித உணவுகளை சரியான முறையில் எடுக்காதவர்கள், முறையான உணவுப் பழக்கவழக்கம் இல்லாதவர்களுக்கும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கருவளையம் உண்டாகிறது. ஓட்ஸ் போன்ற உணவுகளை தொடர்ந்து எடுப்பதால் பசி உணர்வும் எடுக்காது. உடல் எடை குறைந்து, சத்துக் குறைபாட்டில் கண்களைச் சுற்றி கருவளையம் விழும். உடலும் சோர்வடையத் தொடங்கும்.
ஒரு செடி வளர சூரிய ஒளி, காற்று, தண்ணீர், வளமான மண் போன்ற பல்வேறு ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுவதுபோல் மனித உடலுக்கும் விட்டமின் கே, சி, டி என எல்லாவிதமான சத்தும் தேவைப்படுகிறது. சத்தான உணவுகளை எடுப்பவர்கள், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்களின் கருவளையத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, தோல் மருத்துவரை அணுகினால் நீக்குவதற்கான வாய்ப்பு அதிகம். நமக்கு உடல் நிலை சரியில்லையெனில், மருத்துவர்கள் நம் கண்களின் கீழ் இமையை கீழ் நோக்கி இழுத்து சோதனை செய்வார்கள்.
காரணம், விழிகளின் கீழ்ப் பகுதி சிவப்பாக இருந்தால் ஹீமோகுளோபின் ரத்தத்தில் சரியான அளவில் உள்ளது என்று அர்த்தம். கீழ் விழி வெள்ளை நிறமாக இருந்தால் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு கட்டாயமாக கருவளையம் தோன்றும். சிலருக்கு கண்ணின் கீழ்ப் பகுதி சுருக்கமாக இருக்கும். அப்படி இருந்தாலே கருவளையம் கண்டிப்பாக வரும். ஒருசிலருக்கு கருவளையம் வருவதற்கு பரம்பரை(genetic) முக்கியக் காரணம்.
அம்மா, அப்பா, தாய் மாமா, அப்பாவுடன் பிறந்த அத்தை என வீட்டில் யாருக்காவது கண்ணில் கருவளையம் இருந்தால் தொடர்ச்சியாக குழந்தைக்கும் வரும். சத்துக் குறைபாட்டில் கருவளையம் வந்தால் நம்மால் சரிசெய்துவிட முடியும். பரம்பரை காரணமாக(genetic) வந்தால் சரிசெய்ய முடியாது. எந்தப் பிரச்சனையால் கருவளையம் வருகிறது என்பதை கண்டுபிடித்துவிட்டால் அதற்கான வழிமுறைகளைக் கையாண்டு கருவளையப் பிரச்சனையினை விரைவில் நிவர்த்தி செய்துவிடலாம்.
நமது சமையலறையில் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே கருவளையத்தை நிரந்தரமாக நீக்கித் தீர்வு காண முடியும்.
* உணவில் பயன்படுத்தும் வெந்தயத்தில் ஒருவிதமான கெமிக்கல் தன்மை இருக்கும். வெந்தயத்தை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து, கண்களை கழுவி சுத்தம் செய்தபின், கண்கள் மூடியநிலையில், இமைகளின்மேல் பேக் போட வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவி சுத்தம் செய்யலாம். இந்த முறையினை இரண்டு நாளைக்கு ஒருமுறை செய்தால் கருவளையம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கும்.
* அரைத்த வெந்தயத்தோடு கஸ்தூரி மஞ்சள் காய்ச்சாத பால் சேர்த்து கண்களில் பேக் போடலாம். அப்போது கண்களில் இருக்கும் சோர்வும் சேர்ந்தே குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
* ஆலோவேராவின் தோல் நீக்கி, சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து, அத்துடன் பொடி செய்த சர்க்கரை, தேன் சேர்த்து, கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதில் சர்க்கரை ஸ்க்ரப்பராக செயலாற்றி, முகத்தில் இருக்கும் டெட் செல்களை நீக்கும். தேன் கண்களுக்கு கீழிருக்கும் சுருக்கத்தைக் குறைக்கும்.
* கண் மற்றும் கழுத்தில் இருக்கும் கருவளையத்தை போக்கும் சக்தி உருளைக் கிழங்கில் நிறைந்துள்ளது. ஃப்ரெஸ் உருளைக்கிழங்கு, வெள்ளரி இவற்றை சிலைஸாக்கி கண்களைச் சுற்றிலும் தடவலாம். தக்காளியினை மசித்தும் கண்களைச் சுற்றிலும் பேக் போடலாம்.
* முகத்தை ஸ்டீம் செய்யும்போது, சருமத்தில் உள்ள கண்களுக்குப் புலப்படாத துளைகள் திறந்து கொள்ளும். பிறகு முகத்தில் ரோஸ் வாட்டர் அப்ளை செய்யலாம். பிறகு சாதிக் காயை பொடியாக்கி, சர்க்கிள் ஆன்டி சர்க்கிள் முறையில் இரண்டு விரல்களால் கண்களைச் சுற்றி மெதுவாக ஸ்க்ரப் செய்ய, கண்களின் கீழிருக்கும் கருவளையத்தின் டெட் செல்கள் மறையும். பிறகு வெள்ளரியினை அரைத்து தடவி கண்களைச் சுற்றி மசாஜ் கொடுத்தல் வேண்டும்.
* மூன்று ஊற வைத்த பாதாமை அரைத்து அத்துடன் எலுமிச்சைச் சாறு கலந்து, கண்களை டிஸ்யூ பேப்பர் கொண்டு மூடிவிட்டு, கண்ணைச் சுற்றி பேக் போட வேண்டும். 20 நிமிடம் கழித்து எடுத்துவிட்டால் கண்ணில் உள்ள கருவளையம் கட்டாயமாக நீங்கி இருக்கும்.
* தாமரை மலரின் இதழ் மற்றும் ஆலுவேரா ஜெல் இரண்டையும் எடுத்து நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து அந்தக் கலவையினை ப்ரீசர் பாக்ஸ் ஐஸ் டிரேயில் உறைய வைத்து, அதனை சிறிய துண்டில் வைத்து கட்டி கண்களைச் சுற்றி ஒத்தடம் கொடுத்தால் கருவளையம் மறைவதோடு, தாமரைமலர் பார்வைத் திறனை அதிகரிக்கும்.
இத்துடன்…
* ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். தாகம் எடுக்கும் உணர்வு தோன்றும்போது தண்ணீரைத் தவறாமல் பருக வேண்டும்.
* தோலுக்கு தேவையான விட்டமின் கே, சி, இ. நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் உணவாக எடுக்க வேண்டும்.
* சூரியஒளி காலை மாலை வேளைகளில் நமது தோல்களில் படும்படி செய்தல் வேண்டும்.
அழகு நிலையங்களில் பைட்டோ தெரஃபி (phytotheraphy) முறையில் கருவளையத்தை நீக்குவார்கள். இதில் அரோமா ஆயில் பயன்படுத்தப்படுகிறது. அரோமா ஆயில் என்பது மரிக்கொழுந்து, செம்பருத்தி பூ, வெந்தயம் இவற்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய். இதனை கண்களைச் சுற்றித் தடவி மசாஜ் கொடுப்பதால் 70 சதவிகிதம் கருவளையம் நீங்கிவிடும். இடைவெளிவிட்டு இந்த தெரஃபியினை இரண்டு முறை எடுத்துக் கொண்டால் கருவளையத்திற்கு குட்பை சொல்லலாம்.
நன்றி : தினகரன்