இன்று இளம் வயதினர் மற்றும் நடு வயதினரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற்றில் அமிலம் சுரத்தல் நோய் (Gastritis) காணப்படுகிறது.
தொண்டைக் களம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் கீறல்கள் மற்றும் புண் என்பனவும், முன் சிறுகுடல் என்பன இதற்கு காரணமாக அமைகின்றன. இந்தப் புண் பெப்டிக் அமில புண் (Pepiteutine Diseases) என்று அழைக்கப்படுகிறது.
இந்நோய் இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று பாக்டீரியா தாக்கத்தால் ஏற்படுவது. மற்றொன்று புகைப்பிடித்தல, மதுபானம் அருந்துதல், சில வலி நிவாரண மருந்துவகைகளை அதிகளவில் உட்கொள்ளல், மிளகாய் மற்றும் சரக்குப் பொருட்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளல், மன அழுத்தம், மன நோய், நீண்ட நாட்களாக இருக்கும் புண், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைதல் போன்ற காரணங்களால் வயிற்றில் மற்றும் சிறுகுடல் சுவர்களில் புண் ஏற்படலாம்.
காஸ்ரையிடிஸ் நோயின் அறிகுறிகள்:
~வயிற்றின் மேற்பகுதி அல்லது மார்பின் மத்தியில் ஏற்படும் எரிச்சல் அதனால் ஏற்படும் வலி.
~மார்பு அடைப்பது போன்ற வலி.
~ஒருநாளும் இல்லாதவகையில் வயிறு பொதும்பி உப்புதல்.
~உணவு ஜீரணிக்க முடியாமல் இருத்தல்.
~உணவு தொண்டைக்கு திரும்பவும் வருவது போன்ற உணர்வு.
~புளிப்பு, கசப்பு சுவைக் கொண்ட பதார்த்தம் தொண்டைக்கு வரல்.
~உணவு உட்கொள்ள முடியாமல் வாந்தி எடுத்தல்.
என்பனவும் வயிற்றில் பெருமளவு புண் காணப்படுமிடத்து இரத்த வாந்தி எடுத்தல் என்பனவும் நிகழ வாய்ப்புண்டு. சில நேரங்களில் மலம் கழிக்கும் போது கடும் நிறத்தில் மலம் வெளியேறக் கூடும்.
இந்நோயை அறிந்துகொள்ள “என்டொஸ்கோப்பி” பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். இந்தப் பரிசோதனை மூலம் அநேகமான சந்தர்ப்பங்களில் நோயிற்கான காரணத்தைக் கண்டு பிடித்து சிகிச்சை செய்வதன் மூலம் இலகுவாகக் குணமாக்க முடியும்.
சிலவேளைகளில் புண்களிலிருந்து அதிக இரத்தம் வெளியேறல் காரணமாக புண்ணுடன் கூடிய வயிற்றின் மற்றும் சிறு குடல் சுவர்கள் வெடித்தல் மற்றும் புண் காரணமாக உணவு செல்லும் பாதை மெல்லியதாக மாறும் சந்தர்ப்பங்களில் சத்திரசிகிச்சை மூலம் சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படும்.
ஆகவே சரியான உணவு பழக்க வழக்கங்கள், சுத்தத்தைப் பேணுதல், மன அழுத்தங்களைக் குறைத்தல் போன்றவை இந்நோய் வருவதைத் தடுக்கும்.
எனினும் நோய் ஏற்படுமிடத்து ஆரம்பத்திலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது.
– தமிழ் ப்ரியா
நன்றி : இது தமிழ்