செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்..

இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்..

2 minutes read

உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

முதுமை தெரியாத அளவுக்கு இளமையோடு வாழவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே வெகுகாலமாக இளமையுடன் தோன்றுகிறார்கள். பலர் இளம் வயதிலேயே முதிய தோற்றத்துடன் வலம் வருவதையும் காணமுடிகிறது. உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

சமச்சீரான சத்துணவை போதுமான அளவில் தினமும் உட்கொண்டால் இளமையை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது, ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். அப்போது நோய்கள் ஏற்படாது. உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது இளமையின் முதல் படி என்பதை உணரவேண்டும்.

ஒருவர் இளமையோடு இருக்கிறார் என்பதை அவரது சருமம்தான் முதலில் அடையாளம் காட்டுகிறது. சருமத்தில் இளமையை பொலிவூட்டவேண்டும் என்றால் சிலவகை உணவுகளை தவிர்க்கவேண்டும். குளிர்பானத்தை அறவே தவிர்த்திடுங்கள். காபி, டீ பருகுவதை குறைத்திடுங்கள். மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சரும அழகின் எதிரிகள் என்பதை உணர்ந்திடுங்கள். பழங்களை சாப்பிடலாம். பால், சர்க்கரை போன்றவை சேர்க்காத கிரீன் டீ பருகுவதையும் பழக்கத்தில் கொண்டுவரலாம்.

உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் உங்கள் உடலை இளமை ததும்பச் செய்ய முடியாது. உடல் இயக்கத்தை சீராக்கி, சிறப்பாக்க தினமும் 45 நிமிட இலகுவான உடற்பயிற்சி அவசியம். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்றவை எலும்பு, மூட்டுகளின் இயக்கத்திற்கு சிறந்த பயிற்சிகள் என்றாலும், இவைகளில் எதையும் செய்ய முடியாவிட்டாலும் தினமும் முக்கால் மணிநேரம் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியையாவது செய்யுங்கள். வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை நம்பியிருக்காமல் நீங்களே செய்யுங்கள். வீட்டிலே சிறிதாக ஒரு தோட்டத்தை உருவாக்கி பராமரியுங்கள். சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு வீட்டு மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். உடலுக்கு ஏதாவது ஒருவகையில் வேலைகொடுங்கள்.

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, அதில் உங்கள் இளமைக்கு எதிராக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். கண்களில் கருவளையம் இருந்தால் பளிச்சென்று மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். கண்களை சுற்றியுள்ள சருமத்தில் இருக்கும் ஹுமோகுளோபினை சில என்சைம்கள் சிதைக்கும்போது, அது கருவளையமாக தென்படும். இதற்கு சரும டாக்டர்களிடம் இருந்து ‘ஜெல்’ வாங்கி பூசலாம் என்றாலும், இயற்கையான சிறந்த மருந்து ஆழ்ந்த உறக்கம்தான். தினமும் எட்டு மணிநேரம் நன்றாக தூங்கி எழுந்தால் கருவளையம் அகலும். தினமும் போதுமான அளவு தண்ணீரும் பருகவேண்டும்.

சிலரது முகத்தில் இளமை கொலுவிருக்கும். ஆனால் அவர்களது கையின் புறப்பகுதியில் சரும சுருக்கங்கள் ஏற்பட்டு, முதுமையை பறைசாற்றிவிடும். நடுத்தர வயதை கடக்கும்போது உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய தொடங்கும். அப்போது கோலாஜென், எலாஸ்டின் போன்றவை தளர்ச்சியடையும். அதனால்தான் சரும சுருக்கம் தோன்றுகிறது. இதற்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழம், காய்கறி, பழம் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம்.

சிறிதளவு சர்க்கரையை ஆலிவ் எண்ணெய்யில் கலந்து குழைத்து சருமத்தில் பூசும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் இறந்த செல்கள் அகன்று சருமம் புதுப்பொலிவுபெறும். சருமத்தின் அழகுக்கு வெளியே எத்தனை வேலைப்பாடுகள் செய்தாலும், உடலுக்கு உள்ளே அதற்கான சரியான மாற்றங்கள் உருவாகவேண்டும். உள்ளே ஏற்படும் இயக்கங்களில் குறிப்பிடத்தக்கது, சீரான ரத்த ஓட்டம். ரத்தத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தால்தான் ரத்த ஓட்டம் துரிதப்படும். கூடுதல் ஆக்சிஜன் கிடைக்க நன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

எவ்வளவு இளமையோடு நீங்கள் ஜொலித்தாலும், அதற்கு புன்னகைதான் கிரீடம் சூட்டும். அதனால் சிரிப்பை எல்லா நேரங்களிலும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சிரிக்கும்போது முகத்திற்கு கூடுதல் ரத்த ஓட்டம் செல்லும். ஏராளமான தசைகள் செயல்பட்டு முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்கும். இளமை கொலுவிருக்க இதழ்விரித்து சிரியுங்கள்!

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More