செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் சிறுகதை | தேடல் | கயல்விழி

சிறுகதை | தேடல் | கயல்விழி

5 minutes read

in1வீடு நிசப்தமாக இருந்தது. ஒரு வித வெறுப்போடு யன்னலூடாக வீதியை பார்த்துக் கொண்டிருந்தாள் தேவகி. வாகனங்களின் இரைச்சல்  மேலும் எரிச்சலைத் தந்தது.

அம்மா வேலை முடித்து வர இன்னும் அரை மணித்தியாலயமே இருக்கிறது என மனதினுள் ஆசையாய் நினைத்துக் கொண்டவளுக்கு அடுத்த வினாடி மனம் சோர்ந்து போனது. எத்தனை நாட்கள் தான் இந்த எதிர்பார்ப்பு பின்பு ஏமாற்றம், வேதனை.

அப்பா ஏழு நாட்களும் வேலைக்கு சென்று வருவதால் என்னுடன் கதைப்பதற்கோ என்னைக் கவனிப்பதற்கோ அவருக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது. அம்மா ஆறு நாட்கள் வேலைக்கு போய் வருவதால் ஞாயிற்றுக் கிழமை மட்டும் வீட்டில் நிற்பாள். அதனால் அந்த நாள் எப்ப வரும் என ஆவலாய் எதிர்பார்த்திருப்பாள் தேவகி. ஆவலாய் எதிர்பார்த்திருக்கும் அந்த நாளும் வீடு துப்பரவாக்கவும்  கடைகளுக்கு, உறவினர் வீடுகளுக்கு என்று சென்று வரவுமே போதுமானதாக இருந்தது. ஆசை தீர அம்மாவுடனும் அப்பாவுடனும் இருந்து கதைத்து, சிரித்து உணவு அருந்த முடியவில்லையே என அவள் பல தடவைகள் கவலைப்பட்டது உண்டு.

எனக்கென்று தம்பியோ தங்கையோ இருந்திருந்தால் பொழுதுகள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என மனம் ஏங்கியது. ஒரேயொரு மகளாக  பிறந்ததால் தனிமை எனக்கு சொந்தமாகி விட்டது. பாடசாலையில் இருந்து நாலு மணிக்கு வீட்டுக்கு வந்தால் சாப்பிட்டாயா என்று கேட்பதற்கும் மனம் விட்டு கதைப்பதற்கும் வீட்டில் யாருமே இல்லை.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள் தேவகி. வேலை செய்த களை முகத்தில் தெரிய ” தேவா……”  என கூப்பிட்டவாறே உள்ளே நுழைந்தாள் அம்மா.

“குளிரில கை காலெல்லாம் விறைச்சு போட்டுது. ஸ்கூலுக்கு போட்டு வாறது கவனம் தேவா.. பிறகு வருத்தம் வந்தால் அலைந்து திரிய இங்க நேரம் இல்லை”

கூறியபடியே தன் அறையினுள் நுழையும் அம்மாவை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள் தேவகி.

அம்மா வருவதை எவ்வளவு ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தேன். நீ எப்படி இருக்கிறாய் என அம்மா தன்னைக் கேட்கவில்லையே என்ற நினைப்பு அவளின் நெஞ்சில் லேசான வலியைக் கொடுத்தது.

சிறிது நேரத்தின் பின் குளித்து விட்டு திரும்பிய அம்மாவிடம் தான் தயாரித்த தேநீரைக் கொடுத்தாள் தேவகி. தேநீரை குடித்தவாறே,

” தேவா…. யாராவது எனக்கு தொலைபேசியில் அழைத்தவையே?” என கேட்டாள்.

“இல்லை. அம்மா…. இண்டைக்கு ஸ்கூல் முடிந்து வர பிந்தி…….” தேவகி கூறி முடிப் பதற்குள் அம்மா குறுக்கிட்டாள்.

“அப்பா வாற நேரமாச்சு தேவா. சமைக்க வேணும். பிறகு இருந்து கதைப்பமே….” அவசரமாக எழுந்து சமையல் அறைக்குள் நுழைந்தாள் அம்மா.

நான் கதைப்பதை கூட இருந்து கேட்க அம்மாக்கு நேரம் இல்லையா.. ஏன் வீட்டுக்கு வர பிந்தியது என கேட்கும் ஆர்வம் கொஞ்சமும் இல்லையா… கலங்கிய கண்களை மறைத்தவாறே தன் அறைக்குள் சென்றாள் தேவகி. அன்றைய வகுப்பு பாடங்களை படிப்பதற்காக கதிரையில் இருந்தவளுக்கு படிப்பில் கவனம் செல்லவில்லை. எழுத்துக்களை ஒரே பார்வையாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராஜனின் விஷயத்தை அம்மாக்கு சொல்ல வேணும். எப்படி சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்தவள் அம்மா அழைக்கும் சத்தம் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

“தேவா…. வந்து சாப்பிட்டு விட்டு இருந்து படி” என கூறிய தாயை பார்த்து,

“உங்களோட சேர்ந்து சாப்பிடுறனம்மா. எனக்கு இப்ப  பசிக்கேலை” என்றாள்.

“அப்பா வந்த உடனும் சாப்பிட மாட்டார். நீ ஏன் பசியோட இருக்கிறாய்… வா சாப்பிட.” என்றாள்.

“பரவாயில்லையம்மா. அதுவரைக்கும் நானும் இருக்கிறேனே” என்றாள் பிடிவாதமாக.

“தேவா …உனக்கு பதினெட்டு  வயசாகுது. இப்பவும் சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறாய். சாப்பிட்டு விட்டு கெதியில படு. விடிய ஸ்கூலுக்கு போக எழும்ப வேணும்” என்று அம்மா அவசரப் படுத்தினாள்.

in3

மறு பேச்சின்றி போய் சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிடும் போது அம்மாவை பக்கத்தில் இருக்கச் சொன்னாள் ராஜனை பற்றி மெதுவாய் கதை எடுப்பதற்காக. பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்த அம்மா,

“என்னம்மா தேவா…. அவசரமாய் ஒவ்வொரு வேலையாய் செய்து கொண்டிருக்கிறன். எல்லாம் முடித்து படுக்க நேரம் போகப் போகுது… நாளைக்கு வேலைக்கு வெள்ளன போக வேணும். ஏதாவது அவசரம் எண்டால் டக் கென்று சொல்லு” என்று சினந்த படி கதைக்கும் அம்மாவிடம் எதை சொல்வது எதை விடுவது.

ராஜனைப் பற்றி சொல்ல பல தடவை கள் முயன்றும் முடியாமல் இருக்கிறதே என மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

தன் அறைக்குள் திரும்பியவள் தன் வேலைகளை முடித்து கட்டிலில் சாய்ந்து கொண்டாள். ராஜன் மனதில் வந்து நின்றான். தன் மனச் சுமையை இறக்கி வைக்கும் அருமையான தோழன். அன்புக்காக ஏங்கி மனம் சோர்ந்த போதெல்லாம் தட்டிக் கொடுத்த அன்பான நண்பன். அதுவே பின்பு காதலாய் மாறி என் உணர்வுடன் கலந்து விட்ட இனிய துணைவன்.

சனிக்கிழமைகளில் பாடசாலை இல்லாததால் ராஜனுடன் மனம் விட்டு கதைத்து பொழுதை கழிப்பாள். அம்மா வேலையால் வந்து இன்று வீட்டில் இருந்து என்ன செய்தாய் என கேட்பதில்லை என்ற படியால் அவளுக்கு ராஜனுடன் இருந்து கதைப்பதற்கு எந்த தடங்கலும் இருந்ததில்லை. ஒவ்வொன்றாக நினைத்து பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து போனாள்.

மறு நாள் அம்மா தட்டி எழுப்பிய போது தான் திடுக்கிட்டு விழித்தாள். தன் வேலைகளை முடித்துக் கொண்டு பாடசாலை செல்ல ஆயத்தமானாள். அவளின் மதிய உணவுப் பெட்டியை ஆயத்தமாக மேசையில் வைத்து விட்டு அம்மாவும் அப்பாவும் வேலைக்கு முன்பே சென்று விட்டனர். வழமை போல் வீட்டைப் பூட்டிக் கொண்டு தேவகியும் பாடசாலைக்கு வெளிக்கிட்டாள்.

வேலை இடத்தில் அம்மாக்கு ஓய்வாக இருக்க கூட நேரம் இல்லாமல் வேலை அதிகமாக இருந்தது. தலையை லேசாக வலிப்பது போல் இருந்தது. நேரத்தை திரும்பி பார்த்தாள். இன்னும் பத்து நிமிடங்களே இருந்ததன வேலை நேரம் முடிவதற்கு. கைகளை கழுவி வீட்டுக்கு செல்ல ஆயத்தமானாள்.

வீட்டுக் கதவை திறந்து “தேவா……..” என அழைத்தவாறே நுழைந்தாள் அம்மா. எந்த சத்தமோ சலனமோ இல்லாமல் வீடு நிசப்தமாக  இருந்தது. பல முறை கூப்பிட்டும் தேவகி வரவில்லை. அறைக்குள் நித்திரையாக இருப்பாளோ என நினைத்தவள் அவளின் அறைக் கதவைத் திறந்தாள். அங்கும் இல்லை. ஏதோ ஒரு பயம் அடி வயிற்றை தாக்கியது . நான் வரும் போது ஒவ்வொரு நாளும் வாசலில் நிற்பாளே… இன்று என்ன நடந்தது…. என நினைத்தவாறு திரும்பியவளின் கண்களில் தேவகி படிக்கும் மேசையில் விரித்த படி ஒரு கடதாசி இருப்பதை கண்டு அவசரமாக அதை எடுத்துப் பார்த்தாள்.

“அன்பான அப்பாவுக்கும் அம்மாவுக்கும்..” என இருப்பதைக் கண்டதும் திகிலுடன் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினாள்.

in2-4உங்கள் மகள் எழுதுவது. நீங்கள் எதிர்பாராத விஷயம் தான். என்னை மன்னித்து விடுங்கள். வீட்டிலிருக்கும் போது எனக்கு எந்த குறையும் நீங்கள் வைக்கவில்லை. பாசத்தைத் தவிர. என்னிடம் எல்லாம் இருந்தது சந்தோஷத்தைத் தவிர. வாழ்க்கையில் எப்போதும் பாசமும் அதனால் ஏற்படுகின்ற சந்தோஷமும் முக்கியமாக எனக்குப்பட்டது.  நீங்கள் இருவரும்  விடிந்தால் இரவு வரைக்கும் வேலை வேலை என்று ஓடுகின் றீர்கள். என் மனசை மிகவும் ஒடுக்குகின்றீர்கள். நீங்கள் வேலையால் வந்ததும் உங்களுடன் ஆசையாய் இருந்து கதைக்கவோ மனம் விட்டு சிரிக்கவோ முடிவதில்லை. பாடசாலை விட்டால் வீடு என இருக்கும் எனக்கு வீட்டில் இருந்து கதைக்க உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள். தெரிந்ததெல்லாம் தனிமையும் வெறுமையும் தான். இந்த நாட்டில் உழைக்கத் தான் வேண்டும். அதுக்காக என்னை ஏங்க வைத்தோ அழ வைத்தோ இப்படி நீங்கள் உழைக்கத் தான் வேண்டுமா? அளவாய் உழைத்து ஏன் நாங்கள் சந்தோஷமாக இருக்க முடியாது.

நான் உங்களிடம் கேட்பது பணத்தை அல்ல பாசத்தை மட்டுமே. நான் எவ்வளவோ முயன்றும் அந்த பாசமும் சந்தோஷமும் உங்களிடம் இருந்து எனக்கு கிடைக்கவில்லை. இதை பல தடவைகள் உங்களுக்கு சொல்லி இருக்கிறேன். ஆனால் நீங்கள் இருவரும் மேன் மேலும் உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் என் சந்தோஷங்களை எல்லாம் புதைத்து விட்டீர்கள். பணத்துக்கு குடுக்கும் முக்கியத்துவம் எனக்கு தருவதில்லை. என்னுடன் இருந்து கதைக்கவே உங்களுக்கு நேரம் போதாமல் இருக்கையில் உங்களுக்கு சிரமம் தராமல் நானே என் வாழ்க்கையை தேடி கொள்கிறேன். நான் ராஜன் என்பவரை நேசிக்கிறேன். இதை உங்களுக்கு சொல்லத் தான் பல முறை முயன்றேன்.  ஆனால் முடியவில்லை. ராஜனோடு வாழும் போது நிச்சயமாக மனம் நிறைந்த சந்தோஷத்தோடு வாழ்வேன் என இது வரை அவருடன் பழகியதிலிருந்து அறிந்து கொண்டேன். எனவே என்னைத்தேடி அலைந்து திரிந்து உங்கள் வேலை நேரங்களை வீணடிக்க வேண்டாம். சென்று வருகிறேன். என் மனசை புரிந்து என்னை மன்னித்து விடுவீர்களானால் நிச்சயம் உங்களை வந்து சந்திப்பேன்.  இப்படிக்கு உங்கள் மகள் தேவகி.

கடிதம் கைகளிலிருந்து நழுவ இதயம் வெடித்துச் சிதற அதிர்ந்து போய் நின்றாள் அம்மா.

– கயல்விழி | கனடா –

ஓவியங்கள் : இந்து | கனடா 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More