செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தமிழ் அற இலக்கியங்களில் அரசியல்

தமிழ் அற இலக்கியங்களில் அரசியல்

10 minutes read

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய தொடர்ச்சியை உடைய தமிழிலக்கிய இலக்கண வரலாற்றில் இலக்கிய ஆய்வுகளின் தொடக்கப் புள்ளியை நம்மால் சரியாக வரையறுக்க முடியவில்லை என்றாலும் அதன் முதிர்நிலையைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் வழி அறிய முடிகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியலைத் தொல்காப்பியர் ஓர் இலக்கியவியல் கல்வியாகவே முன்வைக்கின்றார். கவிதைகளின் உள்ளடக்கம், வடிவம், உத்திகள், மெய்ப்பாடு முதலான இலக்கியக் கோட்பாடுகளைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் விரிவாகப் பேசுகிறது. பொருளதிகாரச் செய்யுளியலில் இடம்பெறும் நோக்கு என்ற உறுப்பு இன்றைய இலக்கியத் திறனாய்வின் அடிப்படையில் இயங்குவதே. ஆக இலக்கிய இலக்கணப் பழமை மட்டுமல்லாமல் இலக்கிய நுகர்ச்சி, திறனாய்வு, கோட்பாட்டு உருவாக்கம் முதலான இலக்கியவியலின் அனைத்து அம்சங்களிலும் நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பயிற்சி இருந்து வந்துள்ளது.

      ஐரோப்பியர் வருகை, மேற்கத்தியக் கல்வி, அச்சியந்திரப் பயன்பாடு முதலான காரணங்களால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அரசியல், கலை இலக்கிய சமூகப் பண்பாட்டு மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தை பெருமளவில் பாதித்துள்ளதைப் போலவே இலக்கியப் படைப்பு, நுகர்ச்சி, திறனாய்வு முதலான துறைகளிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன.

தொல்காப்பியம் தொடங்கிவைத்த இலக்கியவியல் கல்வி இடையில் எங்கோ அறுபட்டுத் தொடர்ச்சியற்று இருந்த சூழலில் மேற்கண்ட மாற்றங்கள் இலக்கியவியலில் புதிய மேற்கத்திய பாணியிலான அணுகுமுறைகளை நமக்கு அறிமுகப்படுத்தியது. பழைய தொல்காப்பிய இலக்கியவியலை முற்றிலும் தொலைத்து ஒழித்துவிட்ட தமிழ்க் கல்வியாளர்களுக்கு மேற்கத்திய இலக்கிய அணுகுமுறைகளும் ஆய்வு அணுகுமுறைகளும் புதிய பிரமிப்பை உருவாக்கின. தமிழ்க் கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் மேற்குலகம் தந்த கல்வியால், விழிப்புணர்வால் புத்தம்புது ஆய்வு அணுகுமுறைகளின் வெளிச்சத்தில் தமிழிலக்கியத்தை நுணுகிப் பார்க்கத் தொடங்கினார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு (1901-1925) தமிழிலக்கியப் பதிப்புகளின் காலமாய்க் கழிந்தது. ஏட்டிலிருந்த தமிழ் இலக்கியங்கள் இக்காலப் பகுதியில்தான் அச்சு வாகனம் ஏறிப் புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டன. அடுத்த கால் நூற்றாண்டு (1926-1950) தமிழிலக்கியங்களின் அறிமுகக் காலமாய் அமைந்தது. இக்காலப் பகுதியில்தான் தமிழ் இலக்கியங்கள் கல்விப் புலத்திலும் பொதுவாசிப்புக்கும் அறிமுகப் படுத்தப்பட்டன. விளக்கவுரைகள், நயம் பாராட்டல் என இந்தக் கால் நூற்றாண்டு தமிழ் மக்களுக்குத் தமிழிலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பணியைச் செய்தன. அடுத்த கால் நூற்றாண்டு (1951-1975) தமிழிலக்கியத் திறனாய்வுகளின் காலம். தேசிய, திராவிட, மார்க்சிய இயக்கங்களின் கருத்தியலுக்கு ஏற்பத் தமிழிலக்கியங்கள் வாசிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட காலம் இது. இருபதாம் நூற்றாண்டின் கடைசி கால் நூற்றாண்டு (1976-2000) தமிழிலக்கிய ஆய்வுகளின் காலம். கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும், கல்விப் புலத்திற்கு வெளியிலும் சமூகவியல் மானிடவியல், உளவியல், வரலாற்றியல், மொழியியல், அமைப்பியல் முதலான துறைகளோடு தமிழ் இலக்கியங்களை ஒத்தும் உறழ்ந்தும் ஆய்வுக்கு உட்படுத்திய காலமாக இந்த இருபத்தைந்து நூற்றாண்டுகள் கழிந்தன.

ஆகக் கடந்த இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியப் பதிப்பு, படைப்பு, வாசிப்பு, திறனாய்வு, ஆய்வு எனப் பரபரப்போடு இயங்கிய காலமாய்க் கழிந்தது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டு கணினி, இணையங்களின் துணையோடு எண்ம (Digital) உலகிற்குத் தமிழ் இலக்கியக் கல்வி, வாசிப்பு, ஆய்வு இவற்றை இடம்பெயர்த்ததோடு தமிழ் நிலத்திற்கு அப்பாலும் உலகு தழுவிய நிலையில் கீழ்த்திசை நாடுகள், மேற்குலக நாடுகள் எனத் தமிழ் இயங்கு தளத்தினை விரிவுபடுத்தின.

முனைவர் வா.வெ. கோவிந்தம்மாளின் “தமிழ் அற இலக்கியங்களில் அரசியல்” என்னும் இந்த ஆய்வுநூல் கல்விப்புலத்தில் நிகழ்த்தப்பட்ட முனைவர்ப் பட்ட ஆய்வின் நூல் வடிவமாகும். தமிழகக் கல்விப்புல ஆய்வுகளில் தமக்கென தனித்ததோர் இடத்தைப் பெற்றுள்ள இலக்கிய ஆய்வாளரும் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியருமான முனைவர் சிலம்பு நா.செல்வராசு அவர்களின் வழிகாட்டுதலில் உருவான ஆய்வு நூல் என்பது இந்நூலுக்குரிய சிறப்புகளில் ஒன்று. முனைவர் கோவிந்தம்மாள் கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ் இலக்கிய ஆய்வுக் கருத்தரங்குகளிலும் பயிலரங்குகளிலும் பங்கேற்று நல்ல பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருபவர், புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்,. தொடர்ச்சியான கல்விப்புலச் செயற்பாட்டாளர், விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் சிறந்த பேராசிரியருக்கான விருதினைத் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் (2012 முதல் 2015 வரை) பெற்ற சிறப்புக்குரியவர். அவரின் இரண்டாவது நூலாக இந்நூல் வெளிவருகின்றது.

அறம், தமிழிலக்கியங்களில் பக்திக்கு அடுத்த நிலையில் அதிகம் பேசப்பட்ட கருத்தாக்கம் அறமே!. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய நவீன இலக்கியங்கள் வரை எல்லா இலக்கியங்களும் அறத்தைப் பேசுகின்றன என்றாலும் அற இலக்கியங்கள் என்று தனித்துக் குறிப்பிடத்தக்க இலக்கியங்கள் தமிழில் மிகுதி. குறிப்பாகத் தமிழின் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற இலக்கியங்களே மிகுதி என்பதும் அந்நூல்கள் தோன்றிய காலப்பகுதியை அற இலக்கியக் காலம் என்று குறிப்பிடப் படுவதையும் அனைவரும் அறிவர். தமிழ் அற இலக்கியங்களின் மையம் திருக்குறளே!. திருக்குறளையே தமிழ் அற இலக்கியங்களின் தொடக்கப் புள்ளியாகக் கருதினாலும் பிழையில்லை.

தமிழ் இலக்கியங்கள் விதந்தோதும் அறங்களை நாம் இரண்டாகப் பகுத்துவிட முடியும். ஒன்று திருக்குறள் வழிப்பட்ட தமிழ் அறங்கள். இரண்டு ஆரிய வடமொழி மனு முதலான நூல்களின் வழிப்பட்ட அறங்கள். இந்த இரண்டு வகைப்பட்ட அறச் சிந்தனைகளையும் மிக எளிதாக நாம் வேறுபடுத்திப் பார்க்க முடியும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவம் தமிழ் அறத்தின் மையப்புள்ளி. வருணாசிரம தர்மத்தின் வழிப்பட்ட சாதிக்கொரு நீதி என்பது ஆரிய அறத்தின் மையப்புள்ளி.

இந்நூல் தனிமனித அறம், சமுதாய அறம், அரசியல் அறம் என்ற மூவகைப்பட்ட அறங்களில் அரசியல் அறத்தினை மட்டும் விரிவாக ஆய்வு செய்கின்றது. தமிழ் அற இலக்கியங்களில் அரசியல் என்ற இந்த ஆய்வுநூல் ஐந்து நோக்கங்களைக் கொண்டது என்று வரையறுக்கிறார் ஆய்வாளர். அவை பின்வருமாறு,

  1. அரசியல் விளக்கம், இலக்கணம், தோற்றம், கோட்பாடுகள், வகைப்பாடுகள், ஆட்சிவகைகள் ஆகியவற்றுக்குச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கமளிப்பது.
  2. அறம் விளக்கம், அற இலக்கியங்களின் காலம், வடிவம், தமிழில் அற இலக்கியங்கள், ஆய்வில் பயன்படுத்தப்படும் இருபது அற இலக்கியங்களின் ஆசிரியர், நூல், அமைப்பு, காலம் ஆகியவற்றைச் சுருக்கமாக விளக்குவது.
  3. தமிழ் அற இலக்கியங்கள் காட்டும் அரசியலில் அரசன், அரசாங்கம், குடிமக்கள், நிதி, நீதி, தண்டனை ஆகியவற்றைப் பற்றி விளக்குவது.
  4. தமிழக அரசியல், வடமொழி அரசியல் ஓர் ஒப்பீடு என்ற பகுதியில் தமிழ் அற இலக்கிய அரசியலும் கௌடலீயம், பொருணூல் அரசியலும் ஒப்பிட்டு விளக்குதல்
  5. அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பண்டைக்கால அரசியலைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவது.

நூலின் உள்ளடக்கம் இந்த ஐந்து நோக்கங்களில் தெளிவாக வரையறுத்துச் சுட்டப்படுவது தெளிவு.

இலக்கியங்கள் பேசும் அறங்களுக்கு உள்ளே இயங்கும் அரசியல் ஒன்றுண்டு. அது அதிகாரங்களைக் கட்டமைப்பதற்கான அரசியல். அறங்கள் அனைவருக்கும் பொது என்றாலும் அதிகாரம் செலுத்துபவனுக்கும் அதிகாரத்தால் நசுக்கப்படுகிறவனுக்கும் ஒரே நிலையில் அறத்தைப் போதிக்க முடியாது. அதிகாரத்தைச் செலுத்து என்று ஆள்பவனுக்கும், அதிகாரத்திற்குக் கட்டுப்படு என்று ஆளப்படுகிறவனுக்கும் இதமாகவும் பதமாகவும் எடுத்துரைப்பதுதான் அறத்தின் அரசியல். திருக்குறள் வழிப்பட்ட தமிழ் அறங்களுக்கும் இதுதான் பொதுவிதி என்றாலும் தமிழ் அறங்கள் வடமொழி அறங்களிலிருந்து வேறுபடுகின்றன. வடமொழி அறங்கள் அதிகாரத்தின் குரலாக ஒலிக்கின்ற போது திருக்குறள் வழிவரும் தமிழ் அறங்கள் மக்களின் குரலையும் பதிவுசெய்கின்றது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான் (குறள்: 1062)

என்று அரச (இறை) அதிகாரத்திற்கு எதிரான குரலைத் திருக்குறள் பதிவு செய்கிறது.

அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள், மன்னுயிர் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல் (மணிமேகலை)

என்று அறத்தின் நோக்கமும் தேவையும் அரசுக்கு உரியதாய் இல்லாமல் குடிமக்களுக்கு உரியதாய் இருத்தல் வேண்டுமென மொழிகிறது மணிமேகலை, இது திருக்குறள் வழிவந்த தமிழ் அறம்.

“தமிழ் அற இலக்கியங்களில் அரசியல்” என்னும் இந்த ஆய்வுநூல் நான்கு அடிப்படை அலகுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

அலகு-1 : அரசியல் ஓர் அறிமுகம்

அலகு-2 : தமிழ் அற இலக்கியங்கள் ஓர் அறிமுகம்

அலகு-3 : தமிழ் அற இலக்கியங்கள் காட்டும் அரசியல்

அலகு-4 : தமிழ் அற இலக்கிய அரசியல், வடமொழி அற இலக்கிய அரசியல் ஓர் ஒப்பீடு

நூலின் மூன்று, நான்காம் அலகுகள் நூலின் மையப்பொருளை விரித்துரைக்கும் போக்கில் விளக்கமுறை அணுகுமுறையோடும் வடமொழி அறநூல்களோடு தமிழ் அற இலக்கியங்களைப் பொருத்திப் பார்க்கும் நிலையில் இலக்கிய ஒப்பாய்வு அணுகுமுறையோடும் அமைக்கப் பட்டுள்ளன.

இந்நூலின் நிறைவுரைப் பகுதி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பகுதியினை நூலாசிரியர் மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளார்

  1. தமிழ் அற இலக்கியங்கள் காட்டும் அரசியல் மதிப்பீடு
  2. தமிழ் அற இலக்கியங்கள் காட்டும் அரசியல் : ஒப்பீடும் மதிப்பீடும்
  3. தமிழ் அற இலக்கிய அரசியல், வடமொழி அற இலக்கிய அரசியல் ஒப்பாய்வு

இந்த மூன்று பகுதிகளும் ஆய்வாளரின் அரிய உழைப்புக்குச் சான்று பகர்வனவாய் அமைந்துள்ளன. குறிப்பாக இப்பகுதியில் இடம்பெற்றுள்ள வரைபடங்களும் அட்டவணைகளும் நூல் நுதலிய பொருளை மிக எளிதாக வாசகர்களுக்கு விளங்க வைப்பதில் பெருந்துணை புரிகின்றன.

      ஆய்வின் முடிந்த முடிபுகளைப் பட்டியலிடும் பகுதியில் நூலாசிரியர் பல அரிய தகவல்களை ஆய்வுலகிற்கு இந்நூலின் வழி வழங்கியுள்ளார். அவற்றுள் சில பத்திகளை இங்கே எடுத்துரைப்பது இந்நூல்வழி வெளிப்படும் ஆய்வாளரின் ஆய்வுத்திறத்திற்குப் பெருமை சேர்க்கும் என நான் கருதுகிறேன்.

  1. காட்சிக்கு எளியவன், கடுஞ்சொல்லன் அல்லன், செவிகைப்பச் சொற் பொறுப்பவன் ஆகிய குணங்களைத் திருக்குறள் தவிர ஏனைய நூல்கள் எடுத்துரைக்கவில்லை. காட்சிக்கு எளிய பண்பும் கடுஞ்சொல் தவிர்த்தலும் செவிகைப்பக் கொடுஞ்சொற்களைப் பொறுத்தலும் குறிக்கோள் பண்புகளாக மட்டுமே கொள்ள முடியும். அதிகார மையத்தில் இயங்கும் மன்னன் பண்புகளுள் இவை நடைமுறைக்கு உதவாப் பண்புகள் என்ற நிலையில் பிற அற இலக்கியங்கள் இவற்றிற்கு முதன்மை கொடுக்கவில்லை என்று எண்ண வேண்டியுள்ளது.
  2. மன்னன் உயர்குடியில் பிறந்தவன் என்பதை மாற்றி, முதன்முதலில் திருவள்ளுவர் முடியாட்சியை மெல்ல மெல்லக் கட்டுடைப்பு செய்திருக்கிறார். இதையே அரசனின் பண்புகளும் கடமைகளும் உணர்த்துகின்றன. சர்வாதிகார (கொடுங்கோல்) ஆட்சியைக் கண்டித்து மக்கள் நலஆட்சி இங்கு வலியுறுத்தப் படுகின்றது.
  3. அரசாங்கத்திற்கு ஆறு உறுப்புகள் கூறப்பட்டாலும் பொருளே முதன்மையெனப் பெரும்பான்மையான அற இலக்கியங்கள் கூறியுள்ளன. நட்பு, அமைச்சு, நாடு, படை, அரண் என்பனவற்றுள் படையும் அரணும் பின்னுக்குத் தள்ளப்பட்டன. மக்கள் போரின் மீது கொண்ட வெறுப்பையே இது காட்டுகிறது. போரில்லாத நாட்டையே மக்கள் விரும்பினர் என்ற கருத்தும் பெறப்படு கின்றது. திருக்குறளைத் தவிர பிற அற இலக்கியங்கள் படைமறம் பற்றிப் பேசாததை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

ஆய்வாளர் தமிழ் அற இலக்கியங்கள் கூறும் அரசியல் சிந்தனைகளை நூல்களின் அடிப்படையிலும் கருத்துக்களின் அடிப்படையிலும் மிக அழகாகப் பட்டியலிட்டு ஒற்றுமை வேற்றுமைகளைத் தெளிவுபடுத்திக் காட்டியிருப்பது பாராட்டிற்குரியது. ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் நூலாசிரியர் எடுத்துக் கொண்ட கருப்பொருளை முறையாகப் பகுத்தும் தொகுத்தும் விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. எளிய, இனிய மொழிநடை இந்நூலுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

      பேராசிரியர் க.ப.அறவாணன் ஐயா தொகுத்து வழங்கிய “அற இலக்கியக் களஞ்சியத்தில்” இடம்பெற்றுள்ள இருபது அற நூல்களை அடிப்படை முதன்மை ஆதாரமாகக் கொண்டு இவ்வாய்வு நூல் உருவாகியுள்ளது என்றாலும் தேவைப்படும் இடங்களில் வடமொழி அற நூல்களையும் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் முதலான மேற்கத்திய அற நூல்களையும் ஒப்பிட்டு இந்நூலை உருவாக்கி உள்ள ஆசிரியரின் திறம் போற்றத்தக்கது. நூலாசிரியர் முனைவர் வா.வெ.கோவிந்தம்மாள் அவர்களுக்குப் பாராட்டும் வாழ்த்தும் உரித்தாகட்டும்.

– முனைவர் நா.இளங்கோ

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More