முன்னுரை
கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு ஏரிக்கருகில் உள்ள ஆரையம்பதி ஊருக்கும், இந்திய கிழக்கு மாநிலம் ஒரிசா என்ற கலிங்க தேசத்துக்கும் உள்ள தொடர்பினை இந்த கதை வரலாற்று ரீதியாக எடுத்துச் சொல்கிறது.
****
அசோக சக்ரவர்த்தி கலிங்க தேசத்தோடு போர் புரிந்ததினால் இரு பக்கத்திலும் பலர் இறந்தனர். இந்து மதவாதியான அசோக சக்ரவர்த்தி போருக்குப் பின் தன் தவறை உணர்ந்து அஹிம்சையை நாடி புத்த மதத்தை தழுவினார். அதனால் இந்து மதம் நிலவி வந்த கலிங்கத்தில் புத்த மதம் ஊடுருவியது. பல இந்துக்களும் பௌத்தர்களும் கலிங்கத்தில் வாழ்ந்தனர். அந்த தேசத்தில் புத்த மதம் பரவத் தொடங்கியது புத்தர் இறந்து 800 ஆண்டுகளுக்குப் பிறகு.
கி பி. 4-ஆம் நூற்றாண்டில், புத்தரின் பல் கலிங்க மன்னர் குஹாசீவாவின் கை வசம் வந்தது. புத்தரின் புனித பல் நினைவுச் சின்னத்தை வைத்திருப்பவருக்கு அந்த நிலத்தை ஆள ஒரு தெய்வீக உரிமை உண்டு என்று ஒரு நம்பிக்கை வளர்ந்தது. நினைவுச்சின்னத்தை கைப்பற்ற போர்கள் நடந்தன.
கலிங்க மன்னர் குஹாசீவா ஒரு பௌத்தனாகி புனித பல் நினைவுச் சின்னத்தை வணங்கத் தொடங்கினார். அவரின் மகள் ஹேமலதாவும் அவளின் சகோதரன் தத்தாவும் தொடர்ந்து சிவனை வழிபட்டு வந்தனர். மன்னர் மதம் மாறியது இந்துகளான பெரும்பான்மை கலிங்க குடிமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அவர்கள் பாண்டு மன்னரிடம் சென்று குஹசீவா மன்னர் இந்து கடவுள்கள் நம்பிக்கை வைப்பதை நிறுத்தி விட்டதாகவும், அவர் ஒரு பல்லை வணங்கத் தொடங்கியதாகவும் முறையிட்டனர். ஆகவே பாண்டு மன்னர் குஹசீவா மீது படை எடுக்க திட்டம் இட்டார். இதை அறிந்த மன்னர் குஹசீவா புத்தரின் பல்லை பாதுகாத்து இலங்கைக்கு எடுத்து செல்ல தனது மகள் ஹேமலதா மகன் தத்தா என்பவளின் உதவியை நாடினார்.
அவர்கள் இருவரையும் அழைத்து “நீங்கள் இருவரும் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். செய்வீர்களா?” மன்னர் கேட்டார்.
“என்ன உதவி நாங்கள் இருவரும் செய்யவேண்டும் தந்தையே” ஹேமலதா கேட்டாள்,
“எனக்கு தெரியும் நீங்கள் இருவரும் சிவனை வழிபடுபவர்கள் என்று. நீங்கள் எனக்காக புத்த மதத்துக்கு மதம் மாற தேவையில்லை. ஆனால் நான் வழிபடும் புத்தரின் புனித பல் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தை ஆளும் என் பௌத்த நண்பன் கீர்த்திசிறி மேகவர்ணனிடம் இந்த பல் போய் சேரவேண்டும். என் நண்பனின் தந்தை மகாசெனா பல குளங்களையும் வாய்க்கால்களையும் வெட்டுவித்து விவசாயத்தை ஊக்குவித்தவன். தேராவத பொளத்தத்துக்கு எதிரானவன் பல தேராவத பொளத்த விஹரரகளை இடித்தவன். அவன் இறந்து விட்டான். இப்பொது ஆட்சியில் இருப்பது அவரின் மகன், என் நண்பன் கீர்த்திசிறி மேகவர்ண. அவன் தந்தை பௌத்ததுக்கு செய்த தீங்குகளை நிவர்த்தி செய்ய விரும்புகிறான். இந்த புனித பல்லை என் ஏதிரிகள் என்னிடம் இருந்து போர் புரிந்து கைப்பற்ற திட்டம் போடுகிறார்கள். அதற்குள் இந்த புனித பல் இலங்கை தீவை போய் சேர வேண்டும்”
“ஏன் தந்தையே உங்கள் நண்பனின் தந்தை மகாசேனா பௌத்தத்துக்கு எதிரானவர்” தத்தா கேட்டான்
“மகாசேனா, இலங்கையின் மன்னர், கி.பி 277 முதல் 304 வரை நாட்டை ஆண்டவர். அவர் இலங்கையில் பெரிய நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்கத் தொடங்கினார். அவர் பதினாறு குளங்களை கட்டினார். அவர் ராஜாவான பிறகு, நாட்டில் உள்ள தேராவத பௌத்ர்க்ளின் மீது பாகுபாடு காட்டினார், மேலும் அவரது முதலமைச்சர் தனது தவறுகளை உணர முன் மகாவிஹரா பிரதான தேரவாத விஹஹாராக்களை அழித்தார். ஜீதவான ஸ்தூபமும் மகாசனால் கட்டப்பட்டது.
கடல் போன்ற மின்னேரியா நீர்த்தேக்கத்தை கட்டிய பின்னர் அவரது நாட்டு மக்கள் அவரை ஒரு கடவுள் அல்லது தெய்வமாகக் கருதினர், மேலும் அவருக்கு மினெரியாவின் கடவுள் என்று பெயரிடப்பட்டது. மஹாசென் சங்கமித்த என்ற புத்த பிக்குவிடம் கல்வி கற்றார். மஹாயான பௌத்தத்துடன் தொடர்புடைய இந்த கோட்பாட்டை மகாசனும் பின்பற்றினார். தேரவாத பெளத்தம் பாரம்பரியமாக நாட்டின் உத்தியோகபூர்வ மதமாக இருந்தது.
இருப்பினும், மகாசென அரியணையை எறிய போது, நாட்டின் மிகப் பெரிய தேரவாத ஆலயமான மகாவிஹாராவின் பிக்குக்களுக்கு மகாயான போதனைகளை ஏற்கும்படி கட்டளையிட்டார். அவர்கள் மறுத்தபோது, மகாசென் தனது நாட்டு மக்களுக்கு தேரவாத பிக்குக்களுக்கு உணவு வழங்குவதை தடைசெய்தார். இதை மீறியதற்காக அபராதம் விதித்தார். இதன் விளைவாக, தேரவாத பிக்குகள் அனுராதபுரத்தை கைவிட்டு நாட்டின் தெற்கில் உள்ள ருஹுனா ஆட்சிக்குச் சென்றனர்.”
“இலங்ககைத் தீவை பற்றி என் தோழி சாருலதா சொல்லி கேள்விப்டிருக்கிறன் அத்தீவின் பெரும் பகுதி சோழர் ஆட்சியின் கீழ் ஒரு காலத்தில் இருந்ததாம், அத் தீவின் கரையோரத்தில் ஐந்து சிவஈஸ்வரங்கள் உண்டாம். அத் தீவின் பூர்வ குடி மக்கள் இந்துக்களாம். ஆகையால் பல சிவன் கோவில்கள் அங்கு உண்டாம். கி மு இரண்டாம் நூறாண்டில் யாரோ ஒரு சோழ மன்னன் எல்லாளன் என்பவன் 44 வருடங்கள் திறம்பட ஆட்சி செய்து இரு மதங்களுக்கும் நன்மைகள் பல செய்தானாம். அது உண்மையா தந்தையே” ஹெமலதா கேட்டாம்.
“ஹேமா நீ சொல்வது அனைத்தும் உண்மை. நீயும் உன் தம்பியும் அங்கு சென்று சசிவஸ்தலம் ஒன்றினை கட்டி வழிபட விரும்பவாய். இங்கருந்து சில இந்து குடிகளையும் நீ கூட்டி செல். உன் திட்டத்துக்கு என் நண்பன் இந்த புனித பல்லினை அவனிடம் கொடுத்தால் அவன் பிரதி உபகாரமாக சிவஸ்தலம் ஒன்றினை நீ அமைக்க, அவனின் மூதாதையர் சோழர் என்பதால் நிட்சயம் உதவுவான்”
“ஆகவே நாம் இருவரும் அத்தீவுக்கு போவதால் இரு திட்டங்னகளை செயல் படுத்த முடியும் அப்படி தானே தந்தையே அண்ணல் அந்த பெரிய தீவு எங்கள் இருவருக்கும் புதிது அங்கு எந்த இடத்தில் போய் நாம் இருவரும் சிவஸ்தலம் அமைத்து வாழ்வது “
“இது நல்ல கேள்வி ஹேமா. அந்த தீவின் வடக்கிலும் கிழக்கிலும் இந்து தமிழர்கள் அநேகர் வாழ்கிறார்கள். அதுவும் வடக்கு, கிழக்கு இலங்ககையுடன் வியாபர தொடர்பு உண்டு. வடக்கில் உள்ள மாந்தை, சம்புகோலம், கிழக்கிகில் திருகோணமலை சம்மாந்துறை போன்ற துறை முகங்களுக்கு எங்கள் வணிக கப்பல்கள் சென்று வரும். கிழக்கு பகுதியில் தம்புவில என்ற இடத்தில இருந்து ஒரு இந்து தமிழ் மன்னன் ஆட்சி செய்கிறான். அவன் என் நண்பனுக்கு நன்கு தெரிந்தவன். அந்த தம்புவில மன்னன் உங்களுக்கு உதவுவான்.
அப்பகுதி நல்ல நீர் வளம் உள்ள ஊராகா தேர்ந்து எடுத்து காடுகளை அழித்து சிவஸ்தலம் ஒன்றை கட்டி உங்களோடு வரும் குடிமக்களை குடி அமர்த்தி ஆட்சி செய்யலாம். கிழக்கு பிரதேச மன்னரினதும் என் நண்பன் அனுராதபுரத்தின் மன்னனிதும் ஆதரவு உங்களுக்கு கிட்டும். அந்த பகுதியில் முக்குவர் திமிலர் இனம் வாழ்கிறது என்று என் நண்பன் எனக்கு ஓலை மூலம் சொன்னான். இந்து கோவில்களும் உண்டு.ஆனால் அத்தீவின் தமிழர் வாழும் பகுதிக்கு போகும் போது உங்கள் இருவரின் பெயர்களை மாற்றிகொள்ளுங்கள்.”
“என்ன பெயர்களுடன் நாம் செல்வது “?
“ஹெமலதா உன் பெயர் உலகநாச்சியர். தத்தா உன் பெயர் உலகநாதன்”
“நல்ல பெயர்கள் தந்தையே” ஹெமலதா சொன்னாள்.
“நீங்கள் இருவரும் சில நாட்களில் நீங்கள் தேர்ந்தெடுத்த குடிமக்கள் கட்டிடக் கலை, தச்சு வேலை, சமையல் இசை கருவி வாசிப்போர், பூமாலை கட்டுபவர்கள், சிவிகை தூக்குபவர்கள், பூஜை செய்யும் பிரராமணர்கள், பாதை போடுபவர்கள் போன்ற தொழில்கள் செய்ய கூடிய முந்நூறு பேராய் தெரிந்தெடுங்கள். அவர்களின் குடும்பங்களையும் கூட்டி செல்லுங்கள். பெண்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
என் பெரிய பாய் மரக் கப்பல் சமுத்திர மோகினி சுமார் ஐநூறு பேரை ஏற்றி செல்லும். அது உங்களை காவேரிப்பூம் பட்டினம் வழியே வடக்கில் மாந்தை துறை முகத்துக்கு சில நாட்களில் அழைத்து செல்லும். கப்பலில தேவையான உணவுகள் இருக்கும் அந்த பாய் மரக் கப்பலில் வேலை செய்பவர்கள் அனுபவம் மிக்க மாலுமிகள். அதன் தலைவன் என் நம்பிக்கைக்கு பாத்திரமான பெருமாதித்தன்” ஹேமலதாவின் தந்தை சொன்னார்.” மாந்தை துறை முகத்தில் இருந்து உங்கள் நண்பரின் அரணமனைக்கு போகும் வழி எங்களுக்கு தெரியாதே”
“கவலை வேண்டாம். உங்களுடன் அங்கு ஒரு தடவை ஓலை எடுத்து சென்ற என் தூதுவன் உங்களுடன் வருவான்.
என் அநுராதபுர நண்பர் ரதம் சிவிகை உதவிக்கு வீரர்களை அனுப்புவார் மாந்தையில் இருந்து அருவி ஆறு கரையோரமாக அனுராதபுரத்துக்கு சில நாட்கள் பயணம். பல மிருகங்களை சந்திப்பீர்கள். பயப்பட வேண்டாம்”
“ஒரு நல்ல காரியத்துக்கு போகும் போது எங்களுக்கு என்ன பயம் தந்தையே அதோடு என் தம்பி உலகநாதன் ஓரு வீரன்” ஹேமலதா சொன்னாள்.
“பயணத்தின் போது புனித பல்லை எடுத்து செல்வதாக உங்கள் இருவரைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிய வேண்டாம். அதை ஹெமலதா உன் முடிக்குள் மறைத்து எடுத்து செல்”.
ஹேமலதா தனது தலைமுடி ஆபரணத்தில் புனித பல்லினை மறைத்து, கண்டுபிடிப்பைத் தவிர்ப்பதற்காக இருவரும் பிராமணர்களாக மாறுவேடமிட்டனர். அவர்கள் கங்கை நதியின் முகப்பில் உள்ள தமராலிப்டி என்ற துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இலங்கையில் மாந்தை துறைமுகத்தில் கலிங்க குடி மக்களுடன் இறங்கினர்
தன் நண்பணின் இரு பிள்ளைகள் குடிமக்களுடன் கலிங்க தேசத்தில் இருந்து வந்த செய்தியைக் கேட்டு அனுராதபுர மன்னர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அரச தம்பதியினரை அன்புடன் வரவேற்று, புனித பல் நினைவுச்சின்னத்தை மிகுந்த வணக்கத்துடன் பெற்றார். அவர் வாழ்ந்த வளாகத்திற்குள் ஒரு அழகான அரண்மனையை கட்டியெழுப்பினார்.
மேலும் அதில் நினைவுச்சின்னத்தை பொறித்தார். அதன்பிறகு, புனித நினைவுச்சின்னத்தின் நினைவாக வருடாந்திர பெரஹெரா நடத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
ஹேமலதா உஹல் இருவருக்கும் நான் ஈன உதவி செய்ய வேண்டும்” அனுராதபுர மன்னர் கேட்டார்.
“மன்னா நாம் இருவரும் கொண்டு வந்த ஈஸ்வரனின் சிலைக்கு கிழக்கில் அமைதியான இடத்தில் கோவில் கட்டி இந்த குடிமக்களை குடி அமர்த்த வேண்டும் {ஹேமலதா சொன்னாள். இனி என்னை உலக நாச்சியார் என்று அழையுங்கள். இவன் என் தம்பி உலகநாதன்”
“இருவருக்கும் இப்பகுதியை தம்புவில்லுவில் இருந்து ஆட்சி செய்யும் என் நண்பன் குணசிங்கனுக்கு உங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி நீங்கள் கேட்ட உதவிகளை செய்யும் படி ஒரு ஓலை தருகிறேன். என் வீரர்களோடு தம்புவில்லுக்கு செல்லுங்கள்”
“உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி மன்னா. விடைபெற்றார்கள் உலகநாச்சியாரும் உலகநாதனும். அவர்களோடு வந்தவர்களும்.
***
கி.மு 2 ஆம் நுாற்றாண்டுகளில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளன் தனது பாதுகாப்புக்காக மட்டக்களப்பு வாவியோரங்களில் ஆற்றுக்காவல் படையினராக நிறுத்தி வைத்திருந்தவர்கள், இங்கு பரம்பரை பரம்பரையாக தமிழர்களாக வாழத்தொடங்கியதாக சொல்லப்படுகிறது..
அலையன் குளம், ஆனைக் குளம், வண்ணான் குளம், வம்மிக் கேணி, திருநீற்றுக்கேணி, துரும்பன் கேணி, தோணாபால் வாத்த ஓடை ஆகியன இவ்வூருக்கு நீர்வளம் சேர்க்கின்றன.
குணசிங்கனிடம் அனுராபுர மன்னனால் அனுப்பப்பட்ட உலகநாச்சியார் உலக நாதன் அவர்களுடன் சென்ற குடிமக்கள் கலிங்க இளவரசி என்பதால் சந்ததி உரிமைகொண்டாடி மட்டக்களப்புக்கு (சம்மாந்துறை) வடபால் அம்பிலாந்துறைக்கப்பால் மண்முனைக்கு அவள் அனுப்பப்படுகின்றாள்.
மண்முனைக் குறுநிலத்தை அங்கு அரசியாற்றிய இளவரசி கொக்கட்டி மரங்கள் சோலையாக வளர்ந்திருந்த மண்திட்டுமுனையை நோக்கி நடந்து சேர்ந்து அங்கே ஒரு குடியேற்றத்தை நிறுவி ஆட்சிசெய்து வந்தாள்
உலகநாச்சியார் தேர்ந்து எடுத்த பகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே 4 மைல் தொலைவில் அமைந்துள்ள தமிழர் செறிந்துவாழும் ஓர் ஊர் ஆரையம்பதிக்கு எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும் தெற்கில் ஜந்தாம்கட்டை – மண்முனையும் – தாழங்குடாவும் தென்கிழக்கில் பாலமுனையும் தென் மேற்கில் மாவிலங்கைத் துறை – காங்கேயனோடையும் மேற்கில் மட்டக்களப்பு வாவியும் அமைந்துள்ளன. இவற்றுக்கிடையில் மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரையம்பதி அமைந்துள்ளது. ஆரையம்பதி கோவில்கள் நிறைந்த கிராமம்
ஆரம்பத்தில் காலத்திற்கு காலம் கரையூர், மண்முனை, ஆலஞ்சோலை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது. 16 அம் நுாற்றாண்டில் வாழ்ந்திருந்த வேடுவத்தலைவன் காத்தான் என்பவன் குடியிருந்தமையால் காத்தான்குடி என பெயரில் அறியப்பட்டது. காத்தான்குடி தமிழர்கள் வாழ்ந்த பகுதி ஆரைப்பற்றை எனவும் பிரிக்கபட்டதன் பின்னர் இக்கிராமம் “ஆரைப்பற்றை” எனும் பெயர் பெற்றது.
இக்கிராமத்தில் “ஆரைப்பற்றை தெரு” ப்பகுதியில் ஒடும் நீரோடைகளில் ஆரை எனப்படும் ஒரு வகை கீரை அதிகமாக வளர்ந்து காணப்பட்டதால் “ஆரைப்பற்றை“ என அழைக்கப்பட்டது. அரைக்கீரை அல்லது குப்பை கீரை என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. அரை காலப் போக்கில் ஆரையாயிற்று ”ஆரைப்பற்றை தெரு” என்னும் அத்தெருவின் பெயரே முழுக்கிராமத்திற்கும் பெயராக அமைந்தது.
******
ஆரைப்பற்றை என்ற பெயர் பற்றியும் பலவாறு வழங்குவர். ஆரை+பற்றை ஸ்ரீ ஆரைப்பற்றை. ஆரை என்பது நான்கு இலைகளைக் கொண்ட ஒரு செடி. இப்பகுதியில் இச்செடி பற்றை பற்றையாக வளர்வதால் ஆரைப்பற்றை என தாவரவியல் சார்ந்து தமிழ் மரபு பேணி இப்பெயர் ஏற்படலாயிற்று என்பார் ஒரு சாரார். ஆரை என்பது நீரோடையைக் குறிக்கும் என்றும் நீரோடைகள் இங்கு நிறையக் காணப்பட்டதால் இப்பெயர் வந்ததாக இன்னொரு சாரார் கூறுவர்.
கம்பருக்கும் ஒளவையாருக்கும் வித்துவப் போட்டி நிலைத்ததாக இங்கு கதையுண்டு. அவ்விரு புலவர் மேதைகளும் வித்துவச் செருக்கைக் காட்டுவதற்கு இந்த ஆரைச் செடியை துணைக்கு அழைப்பார்களாம்! ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் நடந்த போட்டியின் உச்சக்கட்டத்தில் கம்பர் ஏதோ சொல்ல, அதற்கு ஒளவை “ஆரையடா சொன்னாயடா” என்று சிலேடையில் பதிலடி கொடுத்தாராம்.
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
முட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேர்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயடா..
உலகநாச்சியார் குணசிங்கனின் சகோதரனான கிரசரன் என்பவனை மணந்து கனகசேனன் வள்ளி என இரண்டு மக்களைப் பெற்று வாழ்ந்து வந்தாள். தொடர்ந்து இந்தியாவிலிருந்து உலகநாச்சியின் அழைப்பின் பேரில் வந்தோர் வாவிக்குப் படுவான்கரையில் அமைந்த காணிகளிலும் குடியேறி விவசாய வாழ்க்கையை மேற்கொண்டனர்.
அவர்கள் தமது வழிபாட்டுக்காக கொக்கட்டிச்சோலையில் தான்தோன்றியீசுவரர் ஆலயத்தை நிறுவினர். இந்தக் கோயிலின் சிறப்பு தேரோட்டமாகும். பெரிய தேர் சித்திரைத் தேர் ஆகிய இத் தேர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறுவர். இந்தக் கோயிலின் தேர்த்திருவிழாவுடன் ஆரையம்பதி ஸ்ரீ முருகன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உறவு வரலாற்றுக் காலம் முதல் ஏற்பட்டுள்ளது.
****
உண்மையும் புனைவும் கலந்தது.
– பொன் குலேந்திரன் (கனடா)