“எத்தனை தடவை சொல்லீட்டன் நீ அங்க போறது எனக்குப் பிடிக்கேலை… வேண்டாம்”
கணவனின் குரல் கேட்டுத் திரும்பினாள் நித்தியா.
“அதுதானே. இப்ப உனக்கு என்ன குறைச்சல். ஜெகன் சொல்லுறதைக் கேளு. எங்களுக்கெண்டொரு கௌரவம் இருக்கு. அடிக்கடி அங்க போறது… பாக்கிறது… எனக்கும் பிடிக்கேலை” அவளின் மாமியும் சொன்னா.
“கலியாணம் நடந்து அஞ்சு வருசமாச்சு. சாவகச்சேரியில இருந்த நாலு வருசமும் எங்கட மனம் கோணாமல் நடந்தாய். அம்மாவுக்காக வேலையை விட்டாய். வதனாவுக்கு துணையாய் இருந்தாய். பரந்தனுக்கு வந்த பிறகுதான் சொல்லுக் கேளாமல் பிடிவாதம் பிடிக்கிறாய்”
ஜெகன் சொன்னதைக் கேட்டதும் நித்தியாவால் தாங்க முடியவில்லை. திருமணமாகிவிட்டால் கணவன் மாமியார் விருப்பப்படிதான் இருக்கவேண்டுமா. எங்களுக்கென்று விருப்பங்கள் கடமைகள் இருக்கக் கூடாதா… மனதில் தோன்றினாலும் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.
அவள் பிறந்து வளர்ந்த இடம் பரந்தன். சின்னவயதில் அப்பாவை இழந்து அம்மாவுடன் வறுமையோடு வளர்ந்தவள். பதினேழு வயதில் அம்மாவையும் இழந்து சித்தியோடு சாவகச்சேரிக்குப் போனபோது ஏ.எல் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். படித்து உழைத்து அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற கனவு. அம்மா போனதும் தாங்க முடியாமல் உடைந்து போனாள்.
“அம்மா ஆசைப்பட்டபடி படிச்சு ஒரு வேலையை எடுத்திடு நித்தியா” சித்தி சொன்னதால் படிப்பைத் தொடர்ந்து வேலையும் எடுத்தாள். ஒவ்வொரு முறையும் சம்பளத்தை கையில் வாங்கும்போது அம்மாவை நினைத்து கண் கலங்குவாள். கூடவே பானுமதியம்மாவின் முகமும் நினைவுக்கு வரும். அவள் வாழ்வில் மறக்கமுடியாத முகம்.
அம்மாவிடம் கொடுக்க ஆசைப்பட்ட சம்பளக் காசை சித்தியிடம் கொடுத்தாள்.
“என்னட்ட ஏன் தாறாய் உன்ர செலவுக்கு வைச்சிரு. மிச்சத்தை பாங்கில போடு”
“நானும் அம்மாவும் நிரந்தர வருமானமில்லாமல் கஷ்டப்பட்டம். சின்னவயசில இருந்து பசியோட வளர்ந்தன். உங்களிட்ட வந்த பிறகு சாப்பாட்டுக்கு குறையில்லை சித்தி. இப்ப உழைச்ச காசு கையில இருக்கு அதை அம்மாவோட அனுபவிக்க அதிஷ்டமில்லாமல் போச்சே”
“அந்த நேரம் உன்ர அப்பா பொறுப்பில்லாமல் திரிஞ்சார். அம்மாதான் வயல்வேலைக்குப் போய் கஷ்டப்படுவாள். தாங்கேலாமல் அப்பாவைத் திட்டினோம். அந்தக் கோவத்தை அம்மாட்டக் காட்ட அம்மாவுக்கு எங்களில கோவம். கதைக்கிறதில்லை. உதவி செய்தாலும் வாங்க மாட்டாள். நீ வந்து என்னோட இப்ப இருக்கிறது ஆறுதலாயிருக்கு”
சாவகச்சேரியில் சித்தியோடு எட்டு வருடங்கள் இருந்தாள். ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை சித்தியிடம் கொடுத்து விடுவாள். அவள் செலவுகளுக்கு சித்தியே பணம் கொடுப்பாள்.
நித்தியாவுக்கு திருமணம் சரி வந்ததும் அவர்களைப்பற்றி நன்றாக விசாரித்தாள் சித்தி.
“நல்ல சனங்கள். சாவகச்சேரியில இருந்தாலும் அவையளுக்கு பரந்தனில காணியிருக்காம் அதில வீடு கட்டிப் போற ஐடியாவாம். பரந்தனுக்குப் போறது உனக்குச் சந்தோஷம்தானே”
பரந்தன் என்றதும் அவளுக்கு அம்மாவோடு வாழ்ந்த வாழ்க்கையும் பானுமதியம்மா, ஐயாவின் உதவிகளும் எப்போதும்போல் நினைவுக்கு வந்தது. சின்னவயதில் பசி பட்டினியோடு அலைந்த நினைவும் வந்து நெஞ்சை அடைத்தது. கொடுமையான நாட்கள். அம்மா வயல்வேலைக்குப் போனால் அன்று அடுப்பெரியும் இல்லையென்றால் பட்டினியில் துடித்துப் போவாள். பானுமதியம்மாவிடம் வீட்டுவேலைக்குப் போனபிறகுதான் அவர்களுக்கு விடியல் வந்தது. அவர்களின் கஷ்டம் உணர்ந்து அடிக்கடி கூப்பிட்டு வேலைகள் கொடுப்பார். நித்தியாவும் அம்மாவோடு போவாள்.
“அங்க வந்து பசியெண்டு கேட்கக் கூடாது பெரியம்மா தாற நேரம்தான் சாப்பிடவேணும்” சரி என்று தலையாட்டினாலும் பசியில் பானுமதியம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
“அம்மா வேலையை முடிச்சிட்டுத்தான் சாப்பிடுவாள். நீ சாப்பிட்டிட்டு விளையாடு” வீடு திரும்பும் போது அவளின் வயிறும் மனசும் நிறைஞ்சிருக்கும்.
பானுமதியம்மாவையும் ஐயாவையும் ஊரிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். அன்பும் இரக்கமும் கொண்டவர்கள். அவர்களின் பிள்ளைகள் இருவரும் லண்டனில் இருக்கிறார்கள். பிள்ளைகள் மூலமும் லண்டனில் இருந்து உதவி செய்ய விரும்பும் தமிழ் குடும்பங்கள் மூலமும் வறுமையிலுள்ள பிள்ளைகளின் படிப்புக்கும் வாழ்க்கைத்துணை இழந்து வருமானமில்லாமல் கஷ்டப்படும் பெண்களுக்கு சுய தொழில் செய்வதற்கும் உதவி செய்கிறார்கள். அவர்களின் இந்த உதவியால் பல குடும்பங்கள் ஆடு மாடு கோழிகள் வளர்த்தும் சிறு கடைகள் வைத்தும் கஷ்டப்பட்டு உழைத்து தங்கள் குடும்பத்தைப் பார்க்கிறார்கள்.
சொந்தக்காணியில்லாமல் அவதிப்பட்ட காமாட்சிக்கு இரக்கப்பட்டு தங்கள் காணியில் குடிசையைப் போட்டு இருக்க அனுமதித்தவர்கள் தோட்டம் செய்யவோ ஆடு மாடு கோழி வளர்க்கவோ அனுமதிக்கவில்லை. அதனால் காமாட்சி பானுமதியம்மாவின் வீட்டிலும் அவர்களின் தோட்டத்திலும் வேலை செய்தாள். வேலை செய்த பணத்தோடு தோட்டத்து மரக்கறிகளையும் கொடுப்பார்கள்.
ஒருமுறை பானுமதியம்மாவின் பிள்ளைகள் லண்டனிலிருந்து வந்தபோது காமாட்சியை வரச்சொன்னார். நித்தியாவும் கூடவே போயிருந்தாள்.
“வந்த பிள்ளையளுக்கு வடிவாய் சமைச்சுக் குடுக்கவேணும். நான் தனிய சமாளிக்க மாட்டன். நீயும் உதவிக்கு வரவேணும்”
“நீங்கள் பிள்ளைகளோட இருங்கோம்மா. நான் சமையலைப் பாக்கிறன்”
“இந்தா நித்தியா. அக்கா உனக்காக கொண்டு வந்தது” ஒரு பையை நித்தியாவிடம் கொடுத்தார். பை நிறைய இனிப்புகளும் உடுப்புகளும் இருந்தன.
“இவ்வளவும் எனக்கா பெரியம்மா” அவளால் நம்ப முடியவில்லை. விதம் விதமான இனிப்புகளையும் பல நிற உடுப்புகளையும் ஒன்றாகப் பார்த்ததேயில்லை. பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
“இதுவும் உனக்குத்தான். புத்தகப்பைக்குள்ள கொப்பி பென்சில் கலர்பென்சில் எல்லாம் இருக்கு. இனி அம்மாவுக்குப் பின்னால திரியாமல் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காய் போய்படி. அக்கா உனக்கு எல்லா உதவியும் செய்வாள். வளர சைக்கிளும் வாங்கித் தருவாள்”
தோளில் மாட்டும் புத்தகப்பையைக் கண்டதும் அவளால் சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை. மற்றவர்கள் வைத்திருப்பதைப் பார்த்து எத்தனை நாள் ஏங்கியிருக்கிறாள்.
பிள்ளைகள் போகும்வரை பானுமதியம்மாவை சமையலறைப் பக்கமே விடவில்லை காமாட்சி. சொன்னதுபோலவே பானுமதியம்மா அவள் படிப்புக்கு உதவி செய்தார். படிப்பில் கவனம் குறையும்போது கண்டிக்கவும் செய்தார். ரியூசனுக்குப் போக சைக்கிளும் வாங்கிக் கொடுத்து மாதா மாதம் பணமும் கொடுத்தார்.
“கவனமாய் படி நித்தியா. அம்மாவைப் போல நீயும் கஷ்டப்படாத. படிச்சு வேலை எடுத்து அம்மாவை நீதான் சந்தோஷமாய் வைச்சிருக்கவேணும்” எதிர்பார்ப்போடு படித்துக் கொண்டிருந்தவளுக்கு அம்மா போனது தாங்கமுடியவில்லை. சித்தியோடு வந்தபின் அம்மா இல்லாத ஊருக்குப் போக மனமில்லை. இன்று பரந்தன் என்றதும் பானுமதியம்மாவைக் காணும் ஆர்வம் அவள் மனதில் தோன்றியது.
சித்தியோடு வரும்போது சந்தோஷமாயிரு என்று மனதார வாழ்த்தி அனுப்பியதும் நினைவுக்கு வந்தது.
திருமணத்தின் போது சித்தி நகைக்கடைக்கு அழைத்துப்போய் அவளுக்குப் பிடித்த நகைகள் வாங்கிக் கொடுத்தாள். போட்டு அழகு பார்த்துக் கொண்டிருந்தபோது
“உன்ர உழைப்பில வாங்கினதால இன்னும் அழகாய் இருக்கு இல்லையா” என்றாள்.
கொடுத்த சம்பளப் பணத்தை சித்தி சேர்த்து வைத்திருந்தாள் என்று அன்றுதான் தெரிந்தது. திருமணத்திலும் குறையொன்றும் வைக்கவில்லை. வந்து வாழ்த்தியவர்கள் தந்த பணத்தோடு தானும் போட்டு பணப் புத்தகத்தைக் கையில் தந்தபோது திகைத்து விட்டாள்.
“வேண்டாம் சித்தி. உங்கட பிள்ளையாய் நினைச்சு கலியாணமும் செய்து வைச்சிருக்கிறீங்கள். எனக்கு வேற ஒண்டும் வேண்டாம்”
“என்ர பிள்ளை எண்டு சொல்லீட்டாய். என்ர பிள்ளைக்கு செய்யமாட்டேனா. நீ போற இடத்தில சந்தோஷமாய் இருக்கவேணும்”
சித்தியைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
நித்தியாவிற்கு ஜெகன் வீட்டிலும் வசதிக்கு குறையில்லை. மாமி, ஜெகன், வதனா எல்லோரும் அவளிடம் அன்பாகவே இருந்தார்கள். அவள் வேலை செய்யும் இடமும் நடந்து போற தூரம்தான். ஜெகன் வேலைக்கு பஸ்ஸில் போவதால் விடிய எழுந்து சமைத்து சாப்பாடு கட்டி கொடுப்பாள். பிறகு அவள் போவாள். வேலை முடிந்து அவனுக்கு முன்பே வந்துவிடுவாள். சந்தோஷமாகவே வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.
ஒரு வருடம் கழிந்த ஒருநாள்.
வீதியைக் கடந்து மறுபக்கம் போக முயன்றபோது ஜெகனின் அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டு கால் எலும்பு இரண்டு இடத்தில் சின்னதாய் முறிந்து இருந்தது. வேலைக்கு லீவு போட்டு ஜெகனும் நித்தியாவும் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள். யூனிவர்சிட்டியில் எக்ஸாம் நடந்ததால் வதனா வந்து அம்மாவுடன் ஒரு கிழமை நின்றுவிட்டுப் போனாள். இரண்டு தடவை அறுவைசிகிச்சை செய்தும் எலும்புகள் பொருந்தவில்லை. வீட்டுக்கு அழைத்து வந்து படுக்கையில் வைத்துப் பார்த்தார்கள்.
“தொடர்ந்து லீவு எடுக்கேலாது. நாங்கள் வேலைக்குப் போற நேரம் மட்டும் பார்க்கிறதுக்கு ஆரையாவது ஒழுங்கு செய்வமா” ஜெகனிடம் கேட்டாள் நித்தியா.
“வெளியாக்கள் வந்து என்னைப் பாக்க வேண்டாம். வீட்டு வருமானமே செலவுக்குப் போதும். நீங்களும் உழைக்கிறீங்கள். காசை வைச்சு என்ன செய்யிறது. வீட்டில இருக்கிறவைக்கு என்னைப் பாக்க கஷ்டமாய் இருக்கோ” ஜெகனைப் பார்த்து சிடுசிடுத்தாள் அம்மா.
ஜெகனாலும் வதனாவாலும் வீட்டில் நின்று பார்க்கமுடியவில்லை. எலும்பு பொருந்தி எழுந்து நடக்க ஒரு வருடமோ இரண்டு வருடமோ செல்லும் என்று யோசித்து விட்டு
“மாமியையும் கவனிச்சு வீட்டுவேலையளையும் பார்க்க வேணும். நான் நிக்கிறன்”
வேலையில் இருந்து விலகி வீட்டைக் கவனித்துக் கொண்டாள் நித்தியா.
அன்பு பாசமாய் இருந்ததனால் நித்தியாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது. வதனா லீவில் வந்து நிற்கும்போது அண்ணியோடுதான் அவள் பொழுது போகும். தன் விருப்பு வெறுப்புகளை அவள் மூலமே நிறைவேற்றுவாள். தன் மனதிலுள்ளதையும் அண்ணியோடு பகிர்ந்து கொள்ளுவாள். நாலாவது வருடம் வதனாவின் படிப்பு முடிந்தது. திருமணம் பேசத் தொடங்கினார்கள்.
“என்னோட படிச்ச பார்த்திபனை விரும்பிறன் அண்ணி. அவனைத்தான் செய்வன். அண்ணாவோட கதையுங்கோ”
ஜெகனோடும் மாமியோடும் கதைத்து அவர்களைச் சம்மதிக்க வைத்தாள். பார்த்திபனின் வீட்டில் கதைத்தபோது சீதனம் அதிகமாகவே கேட்டார்கள்.
“இரண்டுபேரும் விரும்பிறீங்கள். பிறகு ஏன் காசு கேட்கினம்” வதனாவுக்கு போதுமான நகைகளையும் பணத்தையும் சேர்த்த பின்தான் ஜெகன் திருமணப் பேச்சையே ஆரம்பித்தான். நினைத்ததை விட அதிகமாகக் கேட்டதால் கோபம் வந்துவிட்டது.
“இருக்கிற காசில அவளுக்கு நகையும் செய்து அவளின்ர பெயரில காசும் போட்டிட்டு பரந்தன் வீடு கட்டி முடிய கடனும் வந்திட்டுது. இனி கலியாணச் செலவும் இருக்கு. இன்னும் வேணுமெண்டால் நான் எங்க போறது”
“அவள் சந்தோஷமாய் போகவேணும். என்னட்ட இருக்கிறதில குடுக்கிறன்” வேண்டாம் என்ற ஜெகனை சமாதானப்படுத்தி அவர்கள் மேலதிகமாக கேட்ட நகைக்கு தன் நகையில் இரண்டைக் கொடுத்து தன் வைப்பகத்திலுள்ள பணத்தையும் வதனாவின் பெயரில் மாற்றி விட்டாள். வீடு வதனாவின் பெயரில் இருந்தது. அவர்கள் கேட்டதைக் கொடுத்ததால் திருமணம் நல்லபடி நடந்தது. இரண்டு மாதத்தில் அவர்களுக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டு ஜெகன் நித்தியாவோடும் அம்மாவோடும் பரந்தன் புதுவீட்டுக்கு வந்து விட்டான்.
பரந்தனுக்கு வந்ததும் நித்தியாவுக்கு அம்மாவின் நினைவு மனதை வாட்டியது. பானுமதியம்மாவையும் ஐயாவையும் காண கால்கள் பரபரத்தன. போனாள். உடல் தளர்ந்து வயதின் மூப்பு இருவர் முகங்களிலும் தெரிந்தது. பானுமதியம்மாவைக் கண்டதும் அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“எப்பிடி இருக்கிறீங்களம்மா. என்ர கலியாண நேரம் லண்டனுக்கு போயிட்டீங்கள். அக்காவையள் எப்பிடியிருக்கினம். வீடு கட்டுற நேரம் மாமியை தனிய விட்டிட்டு வரேலாமல் போச்சு. இப்ப வசதியாய் இருக்கிறன் பெரியம்மா. உங்களுக்கு உதவிக்கு யார் இருக்கினம்”
“கோகிலா வாறவள். இப்ப அவளின்ர மகளுக்கு சுகமில்லை பேரப்பிள்ளைகளை பாக்கவேணும் எண்டாள். போய் பாத்திட்டு ஆறுதலாய் வா எண்டு அனுப்பிட்டன். மெல்ல மெல்ல எங்கட வேலையளைச் செய்து கொண்டிருக்கிறம். இனி லண்டனுக்குப் போக எங்களால ஏலாது. பிள்ளையள் மாறி மாறி வந்து பாத்திட்டுப் போயினம். உன்னைப் பாக்க சந்தோஷமாயிருக்கு. அம்மாதான் கஷ்டத்தை அனுபவிச்சுக் கொண்டே போய்ச் சேந்திட்டாள். நீங்கள் எல்லாரும் ஒரு நாளைக்கு வாங்கோ”
அதன்பிறகு பானுமதியம்மாவிடம் அடிக்கடி போவாள். தனிய இருக்கும் இருவருக்கும் தேவையானதைப் பார்த்துப் பார்த்து செய்வாள். பானுமதியம்மாவுக்கு காய்ச்சல் வந்தபோது பக்கத்தில் இருந்து வாய்க்கு ருசியாய் சமைத்துக் கொடுத்தாள். நித்தியாவால் அவர்களுக்கு உதவ முடிந்ததை சந்தோஷத்துடன் வீட்டிலும் கதைத்தாள். முதலில் கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் பிறகு தங்கள் அதிருப்தியைக் காட்டத் தொடங்கினார்கள். அவள் கண்டு கொள்ளவில்லை. கோகிலா வேலைக்கு வந்த பின்பும் அங்கு போய் தன்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருந்தாள். இவள் வருகை அவர்களுக்கும் சந்தோஷத்தைத் தந்தது.
அன்று வீட்டில் அதிக வேலையிருந்ததால் பானுமதியம்மாவிடம் போக முடியவில்லை. அன்றிரவு ஐயாவிடமிருந்து போன் வந்தது.
“அம்மா திடீரெண்டு மயங்கி விழுந்திட்டா. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக மறிச்சுப் போட்டினம் பிள்ளை. நான் நிக்கேலாது வந்திட்டன் அம்மா தனிய இருக்கிறா”
கேட்டதும் பதறிப் போனாள்.
“தெரிஞ்சிருந்தால் பெரியம்மாவோட வந்திருப்பன். நீங்கள் கவலைப் படாதேங்கோ ஐயா. நான் போய் இரவு பெரியம்மாவோட நிற்கிறன்” வேலைகளை அவசரமாய் முடித்து விட்டு நித்தியா ஆஸ்பத்திரிக்குப் போக ஆயத்தமான போதுதான் வேண்டாம் என்று ஜெகனும் மாமியும் சொன்னார்கள்.
“ஏன் பேசாமல் இருக்கிறாய். போய் பாத்திட்டு வா. இருந்து கவனிக்க சொந்தக்காரர் இல்லையெண்டால் காசு குடுத்து ஆக்களை வைச்சுப் பாக்கட்டும். எப்பவோ கஷ்டத்தில உதவினது எண்டு நெடுகவும் நீ போய் வேலை செய்ய வேண்டாம். செய்ததெல்லாம் போதும்” என்றான் ஜெகன்.
“என்னால போகாமல் இருக்கேலாது. நான் பெரியம்மாவைப் பாக்கவேணும்”
“சின்னனில கஷ்டப்பட்டதுக்கு இப்ப வசதியாய் இருக்கிறாய். பிறகேன் போறாய். வேண்டாம்.” என்று கொஞ்சம் தடித்த குரலில் கத்தினான் ஜெகன்
“பட்டினி கிடந்ததை என்னால மறக்கேலாது. பசிக்கொடுமை எப்பிடியிருக்கும் எண்டு உங்களுக்குத் தெரியாது. அம்மாட்ட சாப்பிட்டதை விட பெரியம்மாட்ட சாப்பிட்டதுதான் அதிகம். பசி அறிஞ்சு சோறு போட்ட கையைத் தடவி ஆறுதல் சொல்ல எனக்கொரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. கௌரவக் குறைச்சல் எண்டு நீங்கள் நினைக்கிறதை எனக்கு கிடைச்ச வரமாய் நினைக்கிறன். நான் போகவேணும்”
“போகவேண்டாம் எண்டு அவன் சொல்லுறான் பிடிவாதம் பிடிக்கிறாய். அங்க எங்கட மனம் அறிஞ்சு நடந்த உனக்கு ஊருக்கு வந்த திமிர். சம்பளமில்லாத வேலைக்காரியாய் போய் இரவு முழுக்க நிக்கவேண்டாம்”
கோபத்துடன் மாமி சொன்னதைக் கேட்டதும் நொருங்கிப் போனாள்.
“வேலைக்கா நான் போறன். செய்த வேலையை… காசை… வசதியை பெரிசாய் நினைச்சனானே?. மற்றவையளின்ர மனம் நோகக்கூடாது எண்டு பாத்து பாத்து செய்யிற நான் பெரியம்மா கஷ்டப்படேக்க போய்ப் பாக்காமல் எப்பிடியிருப்பன். இங்க வராமலே இருந்திருக்கலாம். ஏன் வந்தன். கண்ணுக்கு முன்னால கஷ்டப்படுறதை என்னால தாங்கேலாது. தாங்கிற சக்தியும் எனக்கில்லை. நான் என்ன செய்வன் அம்மா… “
அவளின் குமுறல் ஜெகனின் ஆழ்மனதை அசைக்க தவிப்போடு எழுந்தான். எவ்வளவு வலியிருந்தால் இப்படிக் கதறுவாள். மற்றவர்களின் சந்தோஷத்துக்காக ஓடி ஓடி உழைத்தவள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் எங்களுக்கு கை கொடுத்து உதவியவள்.. இன்று வசதியாக இருந்தாலும் சின்னவயதில் அனுபவித்த வலி ஆறாத ரணமாய் அவள் ஆழ்மனதில் பதிந்திருக்கிறது. அதை நாம் வார்த்தைகளால் குத்திக் கிளறி அதிகமாக்கி விட்டோமே… தாங்கமுடியாத வேதனையோடு அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்.
அம்மாவும் அதை உணர்ந்தது போல் அவளின் கண்களும் கலங்கியிருந்தது.
“அழாத நித்தியா. நீ போம்மா. போய் கூட இருந்து பாத்திட்டு வா”
அவளைப் பார்த்து ஆதரவாகச் சொன்னாள் அம்மா.
“அம்மா நானும் கூடப்போய் இவளை விட்டிட்டு பெரியம்மாவைப் பாத்திட்டு வாறன்” என்று சொல்லியபடி நித்தியாவிடம் திரும்பினான் ஜெகன்.
“வா போவம். பெரியம்மாவைப் பாத்திட்டு வந்து நான் ஐயாவையும் பாத்து ஆறுதல் சொல்லுறன். நீ கவலைப்படாத…”
.
நிறைவு..
.
.
.
.
விமல் பரம்
.
நன்றி – தாய்வீடு சஞ்சிகை | மாசி 2021