“பயணிகளின் கனிவான கவனத்திற்கு பூஜ்யம்.. ஆறு.. ஐந்து.. நான்கு.. மூன்று சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் தடம் ஒன்றில்… இன்னும் சற்று நேரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது…”
கோவை ரயில்வே ஜங்ஷனில் எப்போதும் போல கூட்டம் வழிந்தது.
தடம் ஒன்றில் ஸ்ரீனிவாசன் ரயில் வண்டியை எதிர்நோக்கி நின்றிருந்தான். வரிவரியாய் இருந்த ரயில் தண்டவாளம் மனதிற்குள் ஒரு வெறுமையை உண்டாக்கியது. பெரும்சத்தத்தை எழுப்பிக்கொண்டு ஒரு வண்டி தூரத்தில் ஊர்ந்து வந்தது. நெருங்க நெருங்க அவனிடத்தில் உள்ள வெற்று இடம் நிறைந்துக் கொண்டே வந்தது.
அவனுக்கான பெட்டி வந்ததும் தன் அலைபேசியில் இருந்த இ – டிக்கெட்டை சரிபார்த்துக் கொண்டு அவனுடைய இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.
அவனுக்கு வலதுபுறத்தில் வயதான தாத்தா அமர்ந்துகொண்டார். இடதுபுறத்தில் ஒரு திருமணமான பெண்மணி குழந்தையுடன் அமர்ந்துக் கொண்டாள். தனக்கு எதிரே வயதான கணவன் மனைவி, தங்கள் பொருட்களை இருக்கைக்கு அடியில் பதுக்கிக் கொண்டு ஜன்னல் ஒர கதவுகளை திறந்தவாறு அமர்ந்துக் கொண்டனர்.
ரயில் மெதுவாக நகர்ந்தது. வயிற்றில் எதோ ஒருவிதமான ரசாயணமாற்றம் நிகழ்வதில் உடல் சற்று நிதானத்தை இழந்துகொண்டு மறுசீரமைத்தது. எல்லோருடைய பார்வையையும் ஜன்னலுக்கு வெளியில் முன்னும் பின்னும் உருண்டோடும் காட்சிகள் கவர்ந்துகொள்கிறது.
விடுமுறைக்கு பின்னர் வீட்டை விட்டு கிளம்பும்போது ,தெரியாத மென்சோகம் இப்போது ரயிலின் அசைவுக்கேற்ப அவனுக்குள் படர்ந்துகொள்கிறது. வெளியில் ஓடும் காட்சிகள் மனதின் கனத்தை குறைந்துகொண்டே வந்தது .
ஈரோடு சந்திப்பை ரயில் அடைந்தவனுடன், கும்பல் கும்பலாக மக்கள் இறங்குவதும் போவதுமாய் இருந்தது. சுற்றி இருந்த இரைச்சல் காதுகளை அடைத்துக் கொண்டதால் கண்களை மூடி அமைதியை திறக்கலானான் ஸ்ரீனிவாசன்.
“சீனு…”
குரல் கேட்டதும் திடுக்கிட்டு முழித்துக்கொண்டான், நாடி ஏகபோகமாக துடித்துக் கொண்டது. இப்படி யாருமே இவனை அழைப்பதில்லை, அவனுக்கு எதிரே அமர்ந்துக் கொண்ட வித்யாவை தீவிர…
“வித்யா… நீ எங்க… எப்படி இருக்க…”
“நீ எப்படி இருக்க… வெள்ளமுடியெல்லாம் வந்துருச்சு… எங்க சென்னைக்கா…’
இந்தக் குரல் அவன் எதிர்பாராத குரல்… எங்கிருந்து துவங்குவது… எதை ஆரம்பிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
“நான் மும்பைல தான் ஒர்க் பண்ணறேன், இங்க பிலைட் கிடைக்கல அவசரமா போகவேண்டி இருந்தது… அதுதான் சென்னை வந்து பிளைட் பிடிக்கணும் “
அவளே பேசிக் கொண்டிருந்தாள், இவன் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு மும்மரமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
இவனுக்கு பிடித்த கருப்பு சுடிதார் அணிந்திருந்தாள், கல்யாணமாகிய உரு தெரிந்திருந்தாலும் அவள் கண்களில் ஒரு ஓரமாக முதல் சந்திப்பில் ஏற்பட்ட உயிர்ப்பு ஒட்டிக் கொண்டிருந்ததை கவனித்தான் ஸ்ரீனி…”
“உன் வைப் எப்படி இருக்காங்க சீனு… குட்டிஸ்…”
எதோ பேசவந்தவன் எல்லாம் மறந்துபோனான் .
“இருக்காங்க.. நல்ல இருக்காங்க…”
“நீ எப்படி இருக்க வித்யா…” என்று அவன் கேட்கும்போது கல்லூரிப் பருவம் அவனிடம் கவிந்துக் கொண்டது. அவனுடைய இந்தக் குரல் அருகில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்த்தது. இதை கவனித்தவன் பேசத் தயங்கினான்.
“நான் நல்ல இருக்கேன்… உன்ன பத்தி சொல்ல மாட்டேங்கிற”
“காபி… காபி…”
ஒரு காபி கொடுங்க என்றாள் வித்யா. “இந்த சீனு உனக்குத்தான் காபி புடிக்குமே…”
“வித்யா உனக்கு…”
“எனக்கு காபி புடிக்காதுனு உனக்கு தெரியாத…” என்றவளிடம் அந்த பழைய உரிமை ஒளிறிக் கொண்டது.
ரயில் வண்டியின் ஓட்டத்தில் இவனைக் கடந்து போன காட்சிகள் இவனையும் பின்னோக்கிக் கொண்டுசென்றது.
கல்லுரியில் இரண்டாண்டுகளில் வளர்த்துக் கொண்ட காதல் தொடரியாய் நிலைக்காமல், எதோ ஒரு வலுவான காரணத்தால் பிரிய நேர்ந்தது.
“என்ன சோகமா இருக்க எதாவது ப்ரோப்ளேமா…”
அவள் கேட்ட அந்த கேள்வியில் அவள் வாழ்கை சீரும் சிரிப்புமாக இருப்பதாக தோன்றியது. இவனும் தன்னுடைய வாழ்விலும் ஏற்றம் இருப்பதாக காட்டிக் கொண்டான்.
“ம்ம் ரொம்ப நல்ல இருக்கேன்…”
“வைப் நல்ல பார்த்துக்கறாங்களா…” என்று சற்று பூர்வம் உயர்த்தி கேட்டாள்.
“வை நாட்… ரொம்ப நல்ல பார்த்துக்கறாங்க… எனக்கு என்ன புடிக்கும் எப்படிப்பிட்டிக்கும்… நான் மூச்சுவிடறத வச்சு நான் என்ன யோசிக்கறேன்னு சொல்லிருவாங்க…” என்று ஸ்ரீனி முடித்ததும் தன் வலதுபக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தா தன் கண்ணாடியை தாண்டி அவனை பார்த்தார்.
தன்னுடைய மிகைப்படுத்தப்பட்ட வசங்கள் எல்லைமீறுவதை தாத்தாவைப் பார்த்து தெரிந்துக் கொண்டான்.
வித்யா எப்படியும் அவன் கணவனை பற்றி அதிகமாக விமர்சிப்பாள் என்பது போலத்தான் இருந்தது அவள் பேச்சும் அவள் செய்கையும்.
தீடிரென்று அவளுக்கு வந்த அலைபேசி அவர்கள் பேச்சை குறுக்கிட்டது.
அவள் பேசி வைக்கும் வரை… அவர்களுடைய பழைய ஞாபகங்களை கடத்திக் கொண்டிருந்தது ரயில் வண்டி.
சிலவற்றை பேசாமல் போனதற்கு காரணத்தை தேடிக்கொண்டிருந்தான் ஸ்ரீனி. பக்கத்தில் இருந்த குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தாள் வித்யா.
அவளிடம் அவள் குடும்பத்தை பற்றி பேச தோணவில்லை ஸ்ரீனிக்கு.
அவ்வப்போது அவளை பார்த்து சிரித்துக் கொண்டான், பதிலுக்கு அவளும் அதை செய்தாள். இப்படியே வண்டி எங்கும் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்று எண்ணினான்.
சென்ட்ரலை நெருங்கியது வண்டி…
ஆமா உன் ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு… நான் கேக்க மறந்துட்டேன்
அவள் லகேஜை சரிபார்த்தவள்…”அவரு இறந்து ரெண்டுவருசம் ஆகுது… சீனு… சரி ஸ்டாப்பிங் வந்துருச்சு நான் கிளம்பறேன்…”
அவன் கண்களிலிருந்து விழாமல் தேங்கிக் கொண்ட நீர் ரயில் புறப்படும் ஏற்பட்ட அதிர்வில் வழிந்துக் கொண்டது.
– சன்மது
நன்றி : கீற்று இணையம்