செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் விடியாபொழுது | சிறுகதை | சன்மது

விடியாபொழுது | சிறுகதை | சன்மது

4 minutes read

“இப்போ நம்ம எங்கோ போறோம் விஸ்வா…” பதற்றம் சற்றும் குறையாமல் அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்ட நேத்ரா.

“கொஞ்ச நேரம் அமைதியாய் வா…” வெகுநேரமாய் கேட்டுக் கொண்டு வந்த நேத்ராவுக்கு சலிக்காமல் இதே பதிலை கொடுத்துக் கொண்டு வந்தான் விஸ்வா.

“பஸ் கொஞ்ச நேரம் பை பாஸ்ஸுல நிக்கும் டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டுக்கலாம் இடையில பஸ் எங்கும் நிக்காது, அடுத்தது நேரா காட்பாடிதான்…” சொல்லிக் கொண்டே நடத்துனர் பேருந்தை விட்டு இறங்கினார்.

“உனக்கு பசிக்குதா…” இறைஞ்சிய கண்களில் கேட்டுக் கொண்டான் விஸ்வா.

“இல்ல…” என்று முகத்தை ஜன்னலோரமாக திருப்பிக் கொண்டாள் நேத்ரா.

சமாதானம் சொன்னாலும் கேட்பதாக இல்லை என்று சைகையில் புரிந்துக் கொண்ட விஸ்வா, கொண்டு வந்த நீளமான பயண பையை அணைத்த படி இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டான்.

பேருந்து நகர ஆரம்பித்தது, இரவு நேர பயணம் என்பதால் பேருந்தில் இருந்த விளக்கு அணைக்கப் பட்டது.

ஜன்னல் ஓரத்தில் தஞ்சம் புகுந்துக் கொண்டு தென்றல் சில்லென்று அடித்ததில் உறக்கம் சற்று நேத்ராவின் கண்களில் தங்கிப் போனது.

நேத்ரா பயமா இருக்கா… இன்ஸ்டா க்ராம்ல பிரென்ட் ஆனோம், அப்பறம் லவ் பண்ண ஆரம்பிச்சோம், உங்க வீட்டுல எப்படியும் சம்மதிக்க மாட்டாங்கன்னு நீ சொன்னதால தானே இன்னைக்கு இந்த முடிவுக்கு வந்தோம்… என்று அவள் முகம் பார்க்காமல் உடைந்து கொண்ட குரலில் பேசினான்.

வெகு நேரமாய் பேசாமல் இருந்த நேத்ராவின் கண்களில் அம்மாவின் பாச முகம் நிழலாடிப் போனது. குற்றவுணர்ச்சி முகத் தெரியாமல் குரல்வளை நெரித்தது. வடிந்துகொண்ட நீர் காற்றில் கறை படிந்தது.

என்ன நினைத்தாளோ தன் முகத்தை தீடிரென்று விஷ்வாவின் நெஞ்சில் புதைத்துக் கொண்டாள். சற்றும் எதிர்பாராத விஸ்வா ஏற்றுக் கொண்டதின் அடையாளமாய் அவள் தலையை நீவிய படி ஆசுவாசப் படுத்தினான்.

“நான் உன்ன ஏமாத்தீர மாட்டேன்…” என்று காதுபட சொல்லிக் கொண்டான்.

நள்ளிரவில் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது பேருந்து.

அவன் கை தவறி அவள் கன்னத்தில் விழுந்தது. எதோ அவனில் ஒரு உணர்ச்சி கிளைவிரித்துக் கொண்டது, ஒளிந்துக் கொண்ட சலனம் முழித்துக் கொண்டதில் தடுமாறிக் கொண்டவன் சற்று நிதானித்துக் கொண்டான்.

செய்வதறியாது அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் திரும்பவும் ஜன்னலோரம் அடைக்கலம் பெற்றாள். காட்பாடி இறங்கி இன்னோரு பேருந்து மாற்றிக் கொண்டார்கள்.

விடியற்காலை நான்கு, பதற்றம் குறையாமல் இருந்த அவள் முகம் சற்று தெளிந்திருந்தது. புதிய இடம் புது மக்கள், புது நம்பிக்கையை கொடுத்தது.

பசுமாத்தூர் வந்தவுடன் இருவரும் இறங்கினர். விஸ்வா யாரிடமோ விசாரித்ததில் அவர்கள் காட்டிய திசையில் நேத்ராவையும் அழைத்துக்கொண்டு நடந்தான்.

யாரு இவுங்க, என் பிரெண்டோட சொந்தக்காரங்க… எல்லாம் என் பிரென்ட் சொல்லிட்டான், அவுங்க நல்லா கொஞ்ச நாளைக்கு யாருக்கும் தெரியாம, நம்ம ரெஜிஸ்டரேஷன் பண்ணற வரைக்கும் பார்த்துக்குவாங்க என்று நேத்ராவிடம் விளக்கிக் கொண்டு வந்தான். தட்டப்பட்ட கதவு திறக்கப்பட்டது.

உள்ளே நடுத்தற வயது பெண்மணி கதவைத் திறந்தாள். விஸ்வா விவரம் சொன்னதும், அவர்கள் உள்ளே அழைத்து தங்க வைக்கப் பட்டார்கள். காலை பத்துமணிக்கு பதிவுத் திருமணம் செய்து வைப்பதாய் அந்த வீட்டு அம்மாளும் அவர் கணவரும் வாக்குறுதி அளித்தனர்.

நீண்ட சுமையை கிடத்தியவர்களாக காணப்பட்டார்கள்.

“என்னம்மா நல்ல தூங்கிட்டயா…”

களைப்பில் அசந்து தூங்கிப் போனவள் விழித்துக் கொண்டாள் .

“விஸ்வா எங்கே… நேத்ரா பதட்டத்தில் விஷ்வாவை தேடினாள்.

தம்பி பக்கத்துல போயிருக்கான்… வந்துருவான்…

உங்க அம்மா அப்பா உனக்கு நல்ல வாழ்க்கைத் தான் தேடித் தருவாங்க… என்று சொல்லிக் கொண்டே நேத்ராவை ஹாலுக்கு அழைத்து வந்த பெண்மணி ஒரு அதிர்ச்சியைக் காட்டினாள்.

“அப்பா…”

ஒன்னும் இல்லம்மா இந்த காலத்துலே தெரியாம செய்யற தப்பு தான். நான் உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன், இப்போதைக்கு இந்த கல்யாணம் வேண்டாம் நீங்க இன்னும் வளரனும்… அப்புறம் நானே உங்க ரெண்டு பேர சேர்த்தி வைக்கிறேன்…”

“அப்பா… விஸ்வா…”

“அவனை அவங்க வீட்டுக்கு அனுப்புச்சு வச்சுட்டேன்.. மா”

எப்படியும் சமாதானம் கொள்ளாதவளாய் காணப்பட்ட நேத்ரா பிரம்மை பற்றிக் கொண்டவளாய் காரில் அப்பாவுடன் பயணப்பட்டாள்.

வழியில் குளத்தங்கரை மேட்டில் கூட்டம் அலைமோதிக் கொண்டது.

அங்கு ஒரு வாலிபர் கழுத்தருந்த நிலையில் கிடந்தான்.

எட்டிப் பார்த்த நேத்ராவுக்கு ஒன்றும் தெரியவில்லை… புரிந்துக் கொண்ட அப்பா எதுவும் தெரியாமல் வேடிக்கைப் பார்த்தார். கார் குளத்து மேட்டை கடந்து சாலையில் பறந்தது.

– சன்மது

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More