எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ண் மாநிலத்திலுள்ள Neurum Creek என்னும் இடத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வந்த தனது அனுபவ உணர்வுகளை வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் பகிர்ந்து கொள்கின்றார்.
காடுகள் எப்போதுமே வசீகரமானவைதான். தனக்குள் எத்தனையோ அழகுகளையும் அதிசயங்களையும் பொதிந்து வைத்திருக்கும் இயற்கையின் வெளி அது. அதனை ரசிக்காதவர்கள் என்று எவருமே இருக்க மாட்டார்கள். அடர்ந்த மரங்களின் கீழே நின்று மூச்சு இழுத்து விட்டுக்கொண்டால் காடுகளின் வாசனை வந்து மனசுக்குள் நிரம்பிக்கொள்ளும். அது பச்சிலைகளின் பசிய வாசனை.
இம்முறை பிரிஸ்பேண் பாடசாலைகள் விடுமுறை விட்டதும் எங்காவது பிள்ளைகளைக்கூட்டிக் கொண்டு போய் வரலாம் என்ற விருப்பம் பெற்றோருக்கு வந்ததில் ஒரு நியாயம் இருந்தது. ஒன்றரை வருடத்துக்கும் மேலாக வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலமை. இப்போது பிரிஸ்பேணில் கொரோனா நோயின் தாக்கம் வெகுவாக குறைந்து விட்டதில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு விட்டது.
இந்த அவகாசத்தை பயன்படுத்தி உறவும் நட்புமாக எட்டு குடும்பங்கள் சேர்ந்து எங்காவது போய்விட்டு வரலாம் என்ற நினைப்பில் பயணம் திட்டமிடப்பட்டது.
Neurum Creek என்னும் இடத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு போய் வரலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள ஓர் இடத்தை பதிவு செய்து கொண்டு புறப்பட்டோம்.
நீண்ட வீதியில் கார் சீராக ஓடியது. கட்டடங்களையும் வீடுகளையும் பின்னே தள்ளிக் கொண்டு பகல் பதினொரு மணிக்கு காட்டுப்பகுதிக்குள் நுழைந்தது. வீதியின் இரு பக்கமும் அடர்ந்த பற்றைகள்… உயரமான மரங்கள்… இடை இடையே சிறு புல் பரப்புகள்.. என்று கண் எதிரே ஒரு பச்சை உலகம் விரிந்தது.
காடுகளின் தரிசனம் எனக்கு ஒன்றும் புதியதல்ல. வன்னியில் உள்ள காடுகளைப் பார்த்திருக்கிறேன். இங்கு உள்ள மரங்களையும் பற்றைகளையும் பார்க்கும் போது இடப்பெயர்வின் போது ஓடிப் போய் வன்னிக்காடுகள் மத்தியில் வாழ்ந்த நினைவு வந்தது.
பள பளத்த தார் வீதி மறைந்து சிறு கற்கள் பரவிய வீதி வளைந்து வளைந்து சென்றது. வெய்யில் பரவியிருக்க காற்றில் தூசு பறந்தது. கோடை கால ஆரம்ப நாட்கள் என்பதால் பகல் வெய்யில் சிறிது வெம்மையுடன் இருந்தது. குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் முன் புறம் இருந்த அலுவலகத்தில் எமது பதிவை உறுதிப்படுத்திய பின் கார் உட்பகுதிக்குள் சென்றது. இரண்டு வளைவுகள் போய் அடுத்த திருப்பத்தில் நின்ற பெரியதொரு மரத்தின் கீழ் கார் நின்றது.
நான்கு பேர் கை கோர்த்துக் கொண்டு நின்றாலும் கட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு பருமனான மரம். அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு கிளை பரப்பி விசாலித்து நின்றது. அம்மரத்தின் பெயர் என்னவென்று தெரியவில்லை. சிறு சிறு இலைகள் வன்னிக் காடுகளில் இருக்கும் மரங்களையே நினைவூட்டின. அந்த மரத்தின் கீழே கோப்பி விற்பனை செய்யும் சிவப்பு நிற வான் ஒன்று நின்றது. மரத்து நிழலில் ஐந்தாறு மர மேசைகள், மர இருக்கைகள் இருந்தன. அந்த மரத்தின் சுற்றாடலில்தான் எம்முடன் வந்த எட்டுக் குடும்பங்களுக்கும் இடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது மற்றவர்களும் ஒவ்வொருவராக வந்து இறங்கினார்கள்.
மூன்று குடும்பங்களுக்கு பதிவு செய்யப்பட்ட கரவான்கள் வந்து நின்றன. மற்றவர்கள் கூடாரம் அமைக்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஏற்கனவே அந்த சுற்றாடலில் பல கார்கள், கரவான்கள் நின்றிருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிறிதும் பெரிதுமாய் பல வண்ணங்களில் கூடாரங்கள் தென்பட்டன. அதன் வாசலில் அமைதியாக அமர்ந்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்த வெள்ளைக்கார மனிதர்களையும் பார்க்க முடிந்தது.
அந்த முன்றலில் நின்றபடி நாலாதிசையும் பார்த்தால் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் அத்தனை அழகு. உயரமான மரங்கள், நடுவே சிறு சிறு புற்கள் படர்ந்த நிலம், மரங்களின் விசாலித்த கிளைகளுக்குப் பின்னால் தூரத்தெரிந்த பச்சை ஆடை போர்த்தியிருந்த மலைச்சரிவுகள். அதன் பின்னால் தெளிந்த நீலத்தில் வானம். அந்த இடத்தின் ஒரு பக்கமாக புதர்களின் ஆழத்தில் சிறு நீரோடை வளைந்து சென்றது.
கூடாரம் அமைக்கும் வேலை ஒருபுறம் நடக்க நாங்கள் குழந்தைகளுடன் அந்த நீரோடையின் கரையோரமாக சிறிது தூரம் நடந்தோம். நீரோடை சென்று ஓர் இடத்தில் ஏரியாக தேங்கி நின்றது. அதில் சிறிதளவு தண்ணீரே இருந்தது. வழக்கமாக குழந்தைகள் படகு விட்டு விளையாடும் ஏரிதான். இம்முறை தண்ணீர் போதிய அளவு இல்லாததால் படகு விடுவதற்கு அனுமதி தரவில்லை. குழந்தைகளுக்கு பெரிதும் ஏமாற்றம். ஏக்கத்தோடு ஏரியை சுற்றிச்சுற்றி வந்தார்கள். ஏரிக்கு அருகாக மண்வீதி. அதனோடு சேர்ந்து நீண்டிருக்கும் மரப்பாலம். பாலத்தின் மரச்சட்டங்களில் கறுப்பும் வெள்ளையும் கலந்த இறகுகளை அடித்தபடி சின்ன சின்ன பறவைகள் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. கற்கள் நெருடிய மண்வீதியில் சிறிது தூரம் நடந்து பார்த்தோம். மனிதர்களற்ற பிரதேசமாய் காட்டு மரங்களே தென்பட திரும்பி வந்தோம்.
அன்றைக்கு என்னமோ வெய்யில் அதிக வெம்மையைத் தந்தது. காற்றில் புழுதி வாசனை. சிறுவர்கள் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் சைக்கிள் ஓடினார்கள். கால்பந்து விளையாடினார்கள். குழந்தைகள் விளையாடுவதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இவர்கள் எல்லோரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான். வயது வேறுபாடு இன்றி நட்போடு இருப்பவர்கள். எனினும் இங்கு வந்து ஒன்றாக இருப்பதனால் இன்னும் நெருக்கமாய் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்டார்கள்.
நாம் எல்லோருமே அங்கு உணவு சமைத்து சாப்பிடும் ஆயத்தங்களோடுதான் போயிருந்தோம். அங்கே நின்ற மூன்று நாட்களும் சமையல்தான். காலை உணவாக பாண், பட்டர், ஜாம், பருப்புக்கறி, சம்பல்,. மதியப்பொழுதில் அந்த பெரு மரம் தாராளமான நிழலைத் தந்து கொண்டிருந்தது. மரத்தின் கீழே அது தந்த நிழலில் பெரிய பாத்திரம் வைத்து மதிய உணவை தயார் செய்து கொண்டோம். சமையலை பெண்கள் செய்ய ஆண்கள் தண்ணீர் எடுத்து வருவதும் பாத்திரங்களைக் கழுவித் தருவதுமாக உதவிக்கு கூடவே நின்றார்கள். சில வேலைகளை ஆண்கள் தமக்கானதாகவே எடுத்துக்கொண்டார்கள். அந்த வெய்யில் நேரத்துக்கு ஏற்றவாறு வெங்காயம் மிளகாய் வெட்டி கொத்தமல்லித்தழைபோட்டு மோர் கரைத்து பகிர்ந்து தந்தார்கள். மதிய உணவை தட்டுக்களில் போட்டு மரநிழலில் இருந்த மர இருக்கைகளில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அதுவே தனி சுவையாக இருந்தது.
உணவு நேரங்களில் காட்டு வான் கோழிகள் வந்து உலவித்திரியும். அந்த இடங்களில்தொடர்ந்து ஆட்கள் வந்து தங்கிச்செல்வதனால் அவைகளுக்கும் பழக்கமான சூழலாக இருந்தது. அதனால் பயமற்று உலவித் திரிந்தன. அவை அசைந்து அசைந்து நடப்பதைப் பார்த்து சிறுவர்கள் உற்சாகத்தோடு அவைகளின் பின்னாலேயே ஓடித்திரிந்தார்கள். அதே போல் பெரிய உடும்பு ஒன்றும் அவ்வப்போது வந்து போனது. ஏதோ தன் வீட்டில் இருப்பதைப் போல் மரத்தைச் சுற்றி உலாவியது.
மத்தியானத்துக்குப் பின் ஒரு ஐஸ்கிரீம் வான் வந்து நிற்கும். அவ்வளவுதான் அந்த சுற்றாடலில் உள்ள சிறுவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்து விடுவார்கள். நீளமான வரிசை உருவாகிவிடும். சிறுவர்களுடன் பெரியவர்களும் வரிசையில் இணைந்து கொள்வார்கள். ஏற்கனவே மர நிழலில் நிறுத்தி வைக்கப்பட்ட கோப்பி வான் காலை மாலை என்று இரண்டு நேரமும் களை கட்டும். தூக்கிக் கட்டிய செம்பட்டை முடியுடன் ஒரு வெள்ளைக்கார பெண் வந்து வானுக்குள் இருந்து கோப்பி தயாரிப்பாள். அதற்கும் காலை மாலை நீண்ட வரிசை இருக்கும். கோப்பி வாசனை எங்களையும் ஈர்க்கும்.
மூன்று மணியளவில் வெய்யில் மறையத்தொடங்கிவிடும். நான்கு மணிக்கு லேசாய் குளிர்காற்று எங்கும் பரவத்தொடங்கும். இரவில் குளிர் முதுகுத்தண்டை சிலிர்க்க வைக்கும். இரவுகளில் நெருப்பு மூட்டிக்கொள்ள அங்கங்கு வட்டமாய் பெரும் கற்களை அடுக்கி வைத்திருந்தார்கள். அதில் மரத்துண்டுகளைப் போட்டு நெருப்பை எரித்து சுற்றிலும் அமர்ந்து கொண்டோம். நெருப்பு விசிறி எரிவதை குழந்தைகளும் ஆனந்தமாய் பார்த்தார்கள். தம் பங்குக்கு சிறு சிறு மரத்துண்டுகளை நெருப்புக்குள் போட்டுக்கொண்டிருந்தார்கள். நீளக்குச்சிகளில் மாஷ்மலோஸ் செருகி நெருப்பில் பிடித்து வாட்டி சாப்பிட்டார்கள்.
இரவு நெருப்பைச்சுற்றி பெண்களும் குழந்தைகளும் அமர்ந்திருக்க ஆண்கள் உணவு தயார் செய்து பரிமாறினார்கள். அந்த முற்றத்திலேயே திரை கட்டி சிறுவர்களுக்கு விருப்பமான படம் போட பன்னிரண்டு மணிவரை இருந்து பார்த்தார்கள்.
அந்த சுற்றுப்புறம் மெல்லிய இருட்டாகவே இருந்தது. தூரத்துக்கொரு மின் விளக்குகளையே பொருத்தியிருந்தார்கள். ஆனால் நாம் நின்ற நாட்களில் வானில் நிலவு வட்டமாய் பிரகாசித்திருந்தது. அந்த வெளிச்சம் மென்மையாய் எங்கும் பரவியிருந்தது.
வெளிநாட்டு வாழ்வென்பது யந்திரமயமானது. ஆறுதலாக அமர்ந்திருக்க இயலாத அளவுக்கு நெருக்கடி தருவது. ஓடி ஓடி உழைப்பது… பிள்ளைகளை மாறி மாறி ஒவ்வொரு வகுப்புகளுக்கும் ஏற்றி இறக்குவது…. என்று பரபரத்த வாழ்வின் நடுவே இப்படியான ஓர் அமைதியும் ஆறுதலும் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. எல்லா அழுத்தங்களிலிருந்தும் விடுபட்டு மூச்சு இழுத்துவிட்டு நிதானப்படுத்த தேவைப்படும் அமைதி. அந்த அமைதியையும் ஆறுதலையும் இந்த வனப்பகுதி அனைவருக்கும் தந்தது. அதிகாலை நேரங்களில் குழந்தைகளை நாம் பார்த்துக்கொள்ள மற்றவர்கள் காடுகளுக்கு உட்புறமாகவோ மலைச்சரிவுகளின் பாதைகளிலோ நடந்து விட்டு வருவார்கள். உட்புறத்து அழகுகளையெல்லாம் புகைப்படமாக பதிவு செய்து கொண்டுவந்து காட்டுவார்கள். இயற்கையின் அழகு கொட்டிக்கிடக்கும் பகுதி அது. மரத்தின் கீழ் சமைப்பதும், சாப்பிடுவதும், நிலத்தில் தரைவிரிப்புகளை விரித்து ஒன்றாய் அமர்ந்து பேசுவதும், குழந்தைகள் விளையாடுவதைப் பார்ப்பதுமாக பொழுது கலகலப்பாக நகர்ந்தது.
இரவு படுத்துக்கொண்டபோது காற்று என்னவோ இதமாகத்தான் வீசியது. குளிரும் அளவாகத்தான் இருந்தது. சுற்றிலும் நின்ற மரங்களின் இலைகளில் காற்று மோதும் சிறு சர சர ஓசை தவிர எங்கும் அமைதியாகத்தான் இருந்தது.ஆயினும் உறக்கம் மட்டும் தூர விலகிப் போனது.
இப்படித்தானே அன்றொரு காலம் காடுகளிலும் காட்டோரக் கிராமங்களிலும் கூடாரங்களின் கீழே படுத்துக்கிடந்தோம். இரவுகளில் விழித்திருந்தோம். காற்று உரசும் இலைகளின் அசைவின் சிறு ஒலிகளைக் கேட்டிருந்தோம். ஆனால் இன்று போல் மனம் அன்று அமைதி கொண்டிருக்கவில்லை. எந்த நேரம் எது நடக்குமோ என்ற அச்சத்தில் உறைந்து போய் விழித்துக்கொண்டே இரவுகளைக் கடந்திருந்த காலங்கள் அவை.
83 ம் ஆண்டிலிருந்தே வீடு வாசல் விட்டு அகதியாக ஓட ஆரம்பித்துவிட்டோம். ஆனையிறவு முகாமிலிருந்து இராணுவம் முன்னேறி வர குண்டு வீச்சுக்களை தாள முடியாமல் வீடு வாசல் விட்டு தூர இடங்களுக்கு ஓடுவதும் சத்தங்கள் அடங்கியதும் வீடுகளுக்கு திரும்புவதுமான வாழ்க்கை அது. 1996 ம் ஆண்டு யூலை மாதம் 26 ம் திகதி கிளிநொச்சி நகரமே அதிரத் தொடங்கியது. நீண்டதொரு இடப்பெயர்வு ஆரம்பமான நாள் அது.
வன்னியின் வடக்கு மற்றும் தெற்கு வாசல்கள் அடைக்கப்பட்டு எமது பிரதேசம் சுற்றி வளைக்கப்பட்டது. ஆனையிறவிலிருந்து தாக்குதலை மேற்கொண்டு இராணுவம் நகர்ந்த போது கிளிநொச்சி மக்கள் பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் கிழக்கு மேற்காக பிரிந்து உட்புறமாக தூர இடங்களுக்கு ஓடினார்கள். மாற்று உடைகள் கூட எடுத்துக்கொள்ள அவகாசமற்று அந்த நேரம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள காடுகளையும் காட்டோரக் கிராமங்களையும் நோக்கி ஓடிய ஓட்டம் அது. கிளிநொச்சி நகரமே துடைத்து அழிக்கப்பட்டது. நாம் குஞ்சுப்பரந்தன், உருத்திரபுரம், முறிப்பு, கோணாவில், கடந்து அக்கராயன் நோக்கிக் போனோம். ஸ்கந்தபுரத்தில் நம் உறவினர் வீட்டு முற்றத்தில் தஞ்சமடைந்தோம். எமக்கென்று கொட்டில் ஒன்று போடும் வரை மரத்தின் கீழேயே அடுப்பு மூட்டி சமையல் செய்தோம். வேலியோர பூவரசின் இலை எடுத்து சோற்றுக் குழையலை வைத்து சாப்பிட்டோம். மண் தரையில் உரப்பைகளை விரித்து படுத்துக் கொண்டு வான் நட்சத்திரங்களைப் பார்த்திருந்தோம்.
அந்தந்த ஊர்களில் தெரிந்தவர்கள் இல்லாத பலருக்கு அருகிலிருந்த காடுகளே அடைக்கலம் கொடுத்தன. அக்கராயன் சந்தியிலிருந்து மேற்காக எட்டாம் கட்டை, ஐயனார்புரம், வன்னேரிக்குளம், ஊடாக ஜெயபுரம் போகும் வீதியிலும் தெற்காக அம்பலப்பெருமாள்குளம், கோட்டைகட்டியகுளம், உயிலங்குளம் ஊடாக துணுக்காய், மல்லாவி போகும் வீதியிலும் இடை இடையே அடர்ந்த காடுகள் இருந்தன. வீதியின் இருபக்கமும் உள்ள காடுகளை குடைந்து மக்கள் குடிசைகளை அமைத்துக்கொண்டார்கள். மேலே காட்டுத்தடிகள் போட்டு தறப்பாள்களினால் கூடாரம் அமைத்து தங்கினார்கள். மரக்கிளைகளில் சேலைகளினால் கட்டப்பட்ட ஏணைகளில் குழந்தைகள் உறங்கின. மரங்களின் மறைவில் நின்று பெண்கள் உடை மாற்றிக்கொண்டார்கள்.
மரங்களின் கீழேயே அடுப்பு மூட்டி சமைத்தார்கள். மரங்களின் அடிவேர்களில் அமர்ந்து சாப்பிட்டார்கள். வளைந்து ஓடும் வாய்க்கால் தண்ணீரில் கூட்டமாய் நின்று குளித்தார்கள். காடுகளுக்குள் சென்று விறகு சேகரித்து கொண்டு வந்து கிராமங்களில் உள்ளவர்களுக்கு விற்று தங்களுக்கான வருமானங்களையும் பலர் தேடிக்கொண்டார்கள். எல்லாம் இழந்து நிர்க்கதியாய் நின்ற அந்த சந்தர்ப்பத்தில் பலருக்கான வாழ்வாதாரத்தையும் காடு வழங்கி நின்றது.
அந்த நாட்களில் வழமையாய் ஒரு லீற்றர் முப்பது ரூபாய் விற்கும் மண்ணெண்ணெய் இருநூற்றைம்பது ரூபா விற்றது. அந்த விலைக்கு வாங்கி விளக்கு எரிக்க பலரிடம் வசதி இருந்ததில்லை. காட்டுத்தடிகளை சேகரித்து முற்றத்தில் கற்களை வட்டமாய் அடுக்கி அதற்குள் போட்டு நெருப்பு எரித்தார்கள். அந்த வெளிச்சத்திலேயே எல்லா அலுவல்களையும் செய்து கொண்டார்கள். நிலவெறிக்கும் நாட்களுக்காய் காத்திருந்த காலங்கள் அவை. பல வருடங்களாகவே எங்கள் பிரதேசத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது.
சைக்கிள் டைனமோ சுற்றித் தான் வானொலி செய்திகளை கூட்டமாய் இருந்து கேட்டிருக்கிறோம். வெரித்தாஸ் தமிழ்ப்பணி, பி பி ஸி தமிழோசை நிகழ்ச்சிகள் தவற விடுவதில்லை. நிர்க்கதியாய் நின்ற எமது நிலை பற்றிய அவர்களின் செய்திகளையும் ஆய்வுகளையும் கேட்டுக்கொள்வதில் ஒரு ஆறுதல் கிடைத்தது.
அந்த நேர உயிர்ப்பயம் மத்தியிலும் பல விதமான நெருக்கடிகளின் மத்தியிலும் எம் வாழ்வும் இயல்பாகவே நகர்ந்து போனது. அன்றய சூழலிலும் இலக்கிய நிகழ்வுகள், வீதி நாடகங்கள், கலைவிழாக்கள், எல்லாமே நடந்தன. அந்த நாட்களில்தான் ஸ்கந்தபுரத்தில் எனது ஒரு மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, சிறுகதைத்தொகுதிகளின் வெளியீட்டு விழா நீளக் கொட்டில் ஒன்றில் நடந்தன.
கிடுகுகளினால் வேயப்பட்ட கூரையின் கீழே, சுற்றி அடைக்கப்பட்ட கொட்டிலுக்குள் மின் பிறப்பாக்கியின் உதவியோடு சத்தியஜித்ரேயின் படங்கள் பார்த்தோம். அகிராகுரேசேவாவின் குறும்படங்கள் பார்த்தோம். ‘பாரதி’ பார்த்தோம்.
அந்த நாட்களில் பல சிரமங்களுக்கு மத்தியில் காலச்சுவடு, சரிநிகர், மூன்றாவது மனிதன் உட்பட பல பத்திரிகைகள் சஞ்சிகைகளை வன்னிக்குள் வரவழைத்துக் கொண்டோம். ஆளுக்கொன்றாய் வாங்கி ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாசித்தோம். இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து முற்றத்து மாமரங்களின் கீழ் அமர்ந்து எங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம்.
வீடு வாசல் இழந்து சொத்து சுகம் இழந்து உறவுகளை இழந்து அன்று வெறும் மனிதராய் ஓடிப்போன எங்களுக்கு அடைக்கலம் தந்தது அந்த காடுகள்தான். அடைக்கலம் தந்து அரவணைத்து தலை தடவி ஆறுதல் சொல்லி மீள எம் ஊருக்கு வழியனுப்பி வைத்ததும் அந்தக் காடுகள்தான். இன்றய நிலையில் யோசிக்கும் போதும் காடுகள் மீதான நேசிப்பு என் மனதுக்குள் எப்போதும் இருப்பதை என்னால் உணரமுடிகிறது. ஆறுதல் தேடிப்போகும் மனிதருக்கு அமைதி தந்து விடை தருகின்ற அற்புத உணர்வை காடுகள் கொண்டிருப்பது உண்மையே.
வன்னிக்காடுகள் என்றால் என்ன பிரிஸ்பேண் காடுகள் என்றால் என்ன காடுகள் காடுகள்தான். கிளைகளின் அசைவும் இலைகளின் சிறு ஒலிகளும் கூட ஒன்றுதான். அவைகள் வெளிப்படுத்தும் வாஞ்சையும் ஒன்றுதான். இங்கே பறவைகளின் ஒலியில் புதியதொரு பொழுது அமைதியாக விடிந்தது. அங்கே பறவைகளின் ஒலி கேட்டு விழித்துக்கொள்ளும் போதே கூடவே குண்டு வீச்சு விமானங்களின் பேரிரைச்சலும் கேட்கத்தொடங்கி விடும். அந்த பதட்டமான வாழ்க்கையைக்கூட எமது இயல்பான வாழ்க்கையாக ஏற்றுக்கொள்ளுமளவுக்கு காடுகள் எமக்கு அரணாக இருந்தன. நாம் அழுததையும் சிரித்ததையும் மௌனமாய் பார்த்திருந்தன. ஊருக்கு திரும்பி போக முடியாமல் ஆறு வருடங்கள் அங்கேதான் வாழ்ந்தோம்.
இப்போது நாம் காடுகளுக்கு கை அசைத்து விடைபெற்று புறப்பட ஆயத்தமானோம். வாகனங்களை வரிசையாய் நிறுத்தி வைத்து முன்னால் எல்லோரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். குழந்தைகள் ஒருவரை ஒருவர் தோளணைத்து பிரிய மனமின்றி விடை பெற்றுக் கொண்டனர். காரில் ஏறினோம்.
கார் அடர்ந்த மரங்களையும் சிறு பற்றைகளையும் புல்வெளிகளையும் பின்னே தள்ளி நகரப் பகுதிக்குள் நுழைந்தது. இதே போல் அன்றும் கானகத்திற்கு கையசைத்து நாம் ஊருக்கு திரும்பிய நாட்களை நினைத்துப் பார்த்தேன். அப்போதிருந்த மன உணர்வை ‘‘விடை கொடுக்கும் வனங்களும் வீடு திரும்பும் மனிதர்களும்“ என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். அது 2003 ம் ஆண்டு ஜனவரி மல்லிகையின் 38 வது ஆண்டு மலரில் வெளி வந்திருந்தது.
மறக்க முடியாத நினைவுகள் என்று எம் வாழ்வில் எத்தனையோ இருக்கும். உலகின் எந்த திசைக்குப் போனாலும் ஏதாவது ஒரு தருணத்தில் அவை வந்து எம் மனதை அசைத்துச் செல்லும். அப்படித்தான் இன்று இந்த காடுகளுக்குள் இருந்த கணம் அந்த ஆறு வருஷ வாழ்க்கை நினைவுக்கு வந்து போனது. எமக்கு அடைக்கலம் தந்து அரவணைத்துக் கொண்ட கானகத்தின் குரல் இன்றுவரை கேட்கத்தான் செய்கிறது. இனி வரும் நாட்களில் கூட அந்தக் குரலை மறக்க முடியும் என்று தோன்றவில்லை.
.
நிறைவு..
.
.
.
.
தாமரைச்செல்வி | அவுஸ்திரேலியா