செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் தொலைந்து போனவன் | சிறுகதை | ஜெகன்ஜி

தொலைந்து போனவன் | சிறுகதை | ஜெகன்ஜி

6 minutes read

“ஏப்பா சண்முகம்! பாத்து போ, உன் கால் வேற சரியில்ல. முன்ன மாதிரி உன்னால மீனெல்லாம் புடிக்க முடியாது. அதனால கடலுக்கு எல்லாம் போகாத..” அக்கறையுடன் கூறிய ரஹீம் பாயை பார்த்து சரியென்று தலை ஆட்டினான்.

“நான் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு தான் கீரப்பாக்கத்துல இருந்து கிளம்பறேன். ஏதாவதுன்னா வந்து பாரு” என்றார் பாய்.

“கண்டிப்பா காலைல என் குடும்பத்தோட வந்து உங்கள வழியனுப்புவேன் பாய்” என்று நம்பிக்கையுடன் கூறி விட்டுக் கிளம்பினான் சண்முகம்”. பஸ் பிடித்து ஊர் வந்து சேர்வதற்கு மாலை ஆறு மணிக்கு மேல் ஆகி விட்டது. காரகுப்பம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமம். கீரப்பாக்கம் டவுனில் இருந்து ஒரு மணி நேரம் பஸ்ஸில் போக வேண்டும். 2017 புயலிற்குப் பின் நிறைய மாறியிருந்தது. பெரும்பாலான மண் குடிசைகள், ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்த சிமெண்ட் வீடுகளாக மாறி விட்டன. “அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் கட்டி குடுத்திருப்பாங்க..” என்று நினைத்துக் கொண்டான். தெரிந்த பாதையில் முடிந்தவரை வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

நான்கு ஆண்டுகளுக்கு முன், கடலுக்குள் கூட்டாளிகளுடன் மீன் பிடிக்கச் சென்றனர் சண்முகமும், அவனது தம்பி துரையும். படகு பழுதடைந்து உதவிக்கு ஆட்களை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அதற்குள் புயல் வந்து படகை திருப்பிப் போட்டு விட்டது. “ஐயோ! அண்ணே அண்ணே..” என்று துரை கதறியது இன்றும் நினைவில் இருக்கிறது. சண்முகம் கண் விழித்த போது ஆந்திரா மருத்துவமனையில் இருந்தான். இரண்டு ஆண்டுகள் நடை பிணம் போல் கிடந்ததாகச் சொன்னார்கள். நினைவு வேறு அடிக்கடி தவறிக் கொண்டே இருந்தது. ஊர், உறவு எதுவும் பிடிபடவில்லை. அதற்குப் பிறகு ஒரு இஸ்லாமிய அறக்கட்டளையின் உதவியால், ரஹீம் பாய் பொறுப்பிலிருந்த மருத்துவக் காப்பகத்தில் தங்கியிருந்தான். தூக்கத்தில் அடிக்கடி சொர்ணம், தேவின்னு உளறிக் கொண்டே இருந்ததாகச் சொல்வார்கள். மூன்று மாதத்திற்கு முன்னால் தான் முழுவதுமாக குணமடைந்திருந்தான். கீரப்பாக்கத்திற்கு திருமண நிகழ்ச்சிக்காக வந்த பாயுடன் சேர்ந்து வந்திருந்தான்.

அனைவரும் இப்போது எப்படி இருப்பார்களோ? இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாதே. “ச்சே..இல்ல, அவங்களுக்கு ஒன்னும் ஆயிருக்காது. அதான் புயலுக்கு முன்னாடியே மண்டபத்துக்கு கூட்டிக்கிட்டு போயிடுறாங்களே. ” சொர்ணம் (சண்முகத்தின் மனைவி), மச்சான்.. மச்சான்னு பின்னாடியே சுத்துவா.. உயிரோடு இருப்பாளா? இல்லாட்டி இப்படியே கடல்ல இறங்கிட வேண்டியது தான். நினைக்கும் போதே நடுக்கமாக இருந்தது சண்முகத்திற்கு. “தேவி ஆறு மாதக் குழந்தை அப்போது, துரையும் என்ன ஆனான்னு தெரியல” யோசித்துக் கொண்டே நடந்தான். பிறந்த ஊர் தான் என்றாலும், புயலுக்குப் பின் அனைத்துமே மாறியிருந்தது.

“இதோ ராமர் தெரு வந்து விட்டது. இதற்கு அடுத்தது செம்பன் தெரு, அதற்குப் பிறகு கடல் மணல் ஆரம்பித்து விடும், கரை முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக நூறு குடிசைகளுக்கும் மேல் இருக்கும். இப்போது இருக்கிறதா தெரியவில்லை”. செம்பன் தெருவைக் கடந்ததும் அவன் நினைத்த மாதிரியே ஒரு குடிசையையும் காணோம். அருகில் இருந்தவர்களை விசாரித்தான். எல்லோருக்கும் சவுக்குத் தோப்பு அருகில் வீடு கட்டி கொடுத்ததாக சொன்னார்கள். சவுக்குத் தோப்பை நோக்கி நடந்தான். மணலில் காலை இழுத்து இழுத்து நடப்பது கஷ்டமாக இருந்தது, சவுக்குத் தோப்பின் அருகில் சென்றபோது நிறைய வீடுகள் வரிசையாக இருந்தன. சிறிது சிறிதாக சில கடைகள் இருந்தன. மின்சார வசதி இன்னும் முழுமையாக செய்து தரப்படவில்லை, வீடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. கடைகளில் பெட்ரோமாக்ஸ், லாந்தர் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒரு சிறிய மளிகைக் கடைக்கு அருகில் போய் நின்றான். “ஏங்க..செம்பன் தெருகிட்ட இருந்து இவங்க எல்லாம் எப்ப வந்தாங்க?”

“அது ஆச்சு மூணு வருஷம். நான் இங்க கடை போட்டு ரெண்டு வருஷம் ஆகுது. நீங்க யாரு? உங்க குரல் புடிபடலயே… ஊருக்குப் புதுசா?”

“ஆமாங்க, நான் ராமாயி மகன். என் பேரு சண்முகம்.”

“எனக்கு ராமாயி யாருன்னு தெரியல..”

“துரைன்னு யாராவது இருக்காங்களா?”

“அவரு தான் இந்த குப்பத்தோட துணைத் தலைவர். எல்லாம் குடும்பமா அந்த கடைசி வரிசையில குடி இருக்காங்க.”

“சொர்ணம்னு…”

“ஆமா, எல்லாரும் அந்த வீட்டுல தான் இருக்காங்க…”

சந்தோஷம் பீறிட்டது மனதிற்குள். “தேவியைத் தூக்கி ஆசை தீர கொஞ்ச வேண்டும். அப்படியே சொர்ணத்தை..” நினைக்கும் போதே மனைவியின் ஸ்பரிசத்தை உணர்ந்தான், உடல் சூடாகியது. ‘ம்ஹூம்..விஷயம் தெரிந்து அங்காளி பங்காளிகள் வந்தால், இன்னும் ஒரு வாரத்திற்கு என்னை தனியே விட மாட்டார்கள்’, சிரித்துக் கொண்டான்.

“ஏதாவது தின்பண்டம் வாங்கலாமா?” என்று யோசித்தான். மூன்று பிஸ்கட் பாக்கெட்டுகளும், கை நிறைய மிட்டாய்களும் வாங்கினான். பாக்கெட் அல்வா ஒன்றை வாங்கிக் கொண்டான். பணத்தைக் கொடுத்து விட்டு, வாங்கியதை பையில் போட்டுக் கொண்டான்.

‘தேவி பாப்பா நல்லா வளர்ந்திருக்கும். நான் போன உடனே முழிக்கும் பாவம். சொர்ணம் என்ன பண்ணுவாளோ… கட்டிப்புடிச்சி அழுவாளா… இல்ல மயங்கிடுவாளா? என்ன பெருசா ஆயிடும், அதான் நான் வந்துட்டேனே. கிழவி கத்தி ஊரையே கூட்டிடும், துரை அழுதிடுவான்’. நினைக்கும்போதே அழுகையும் சிரிப்பும் வந்தது. துரைக்கு கல்யாணம் ஆச்சோ என்னமோ? இல்லாட்டி உடனே பண்ணிப்புடனும். பாவம் நல்ல பய… எதானாலும் அண்ணன கேட்டுக்கோன்னு சொல்லுவான். மனதிற்குள் பழைய நினைவுகள் நிழலாடியது.

எல்லோரிடமும் எதைச் சொல்வது, எதை விடுவது? யோசித்துக் கொண்டே நடந்து கடைசி வீட்டிற்கு வந்தான். மெதுவாக ஜன்னலின் அருகில் சென்று எட்டிப் பார்த்தான். சுவற்றில் ராமாயினுடைய சிறிய படத்திற்கு பிளாஸ்டிக் பூ மாலை போட்டிருந்தது. “கிழவி போயிட்டியா?” மனது கனத்தது. அப்படியே வீடு முழுவதும் பார்வையால் தேடினான். இவன் படம் எதுவும் காணவில்லை.

“ஏய் தேவி… தம்பி வெளிய போறான் பாரு. போய் புடி” சொர்ணாவின் குரல் கேட்டது.

“சொர்ணம்… இங்க பாரு, ரெண்டும் சண்டை போடுதுங்க…” என்றவாறே உள்ளே நுழைந்தான் துரை.

“ஏய்… அப்பா கூப்பிடறாரு பாருங்க, ரெண்டு பேரும் உள்ளே வாங்க…”

சொர்ணமா இது? உடம்பு சற்று குண்டாகியிருந்தது. நெற்றியில் பொட்டும், தலையில் பூவுடன், சண்முகத்தால் நம்ப முடியவில்லை. தேவி உள்ளே ஓடி வந்தாள். நேராக துரையிடம் வந்து “அப்பா… பாருப்பா. முடியப் பிடிச்சி இழுக்கிறான்”

“அப்படியே அப்பாவைப் போல” என்று கூறிய சொர்ணத்தின் தலை முடியைப் பிடித்து செல்லமாக இழுத்தான் துரை. “ஆ… வலிக்கிது” என்று சிணுங்கினாள் சொர்ணம்.

வெடித்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கடலை நோக்கி ஓடினான் சண்முகம். மண்ணில் விழுந்து கதறினான். ‘என் சண்முகம் மச்சான தான் கட்டிக்குவேன், இல்லேன்னா செத்துடுவேன்னு சண்டை போட்டுக்கிட்டு வந்தவளா இப்படி? அண்ணி அண்ணின்னு வாய் நிறைய அழைப்பானே இந்த துரை’. ஐயோ! நான் நினைவு திரும்பாமலே இருந்திருக்கலாமே… அரற்றினான். இனி வாழ்வதில் பயனில்லை என்று நினைத்தவன், கடலுக்குள் இறங்கினான். சில்லென்று கடல் நீர் முழங்காலுக்கு மேல் ஏறியது.

‘நீயா இருந்தா என்ன செய்திருப்ப?’ உள்மனம் சண்முகத்தைக் கேட்டது. “அப்பவே செத்து போயிருப்பேன்…” கடல் நீர் இப்போது இடுப்பைத் தாண்டியிருந்தது.

“தேவியை என்ன செஞ்சிருப்ப…?” அடுத்த கேள்வியால் சட்டென்று சுதாரித்தான். கழுத்திற்கு மேல் வந்துவிட்ட கடல் நீரில் போராடி கரைக்கு வந்து மணலில் உட்கார்ந்தான்.

ஆண் துணையில்லாமல் பெண் என்ன செய்ய முடியும்? வீட்டை நாய்கள் சுற்றுமே, என்ன செய்வாள்? துணைக்கு மாமியாரும் இல்லாதபோது, விவரம் அறியாத பச்சிளம் குழந்தையுடன் எப்படி போராடுவாள்? இருந்தாலும் என் தம்பியுடனா சேர்வது? மனது வலித்தது. அவனுள் உன்னைக் கண்டாளோ என்னமோ? உள் மனம் வாதாடியது. நீ இங்கு இறந்து கரை ஒதுங்கி என்ன சாதிக்கப் போகிறாய்? ஊரார் உன் மனைவியையும் தம்பியையும் பழி கூறவா? நீண்ட நேரம் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். உப்புக் காற்றும் ஈர வாடையும் சேர்ந்து அடித்தது. கண்களில் கண்ணீர் காய்ந்திருந்தது. நிதானமாக எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

“எல்லாரும் ஏறியாச்சா? மொத்தம் முப்பத்தி எட்டு பேரு… நல்லா எண்ணிக்கோங்க”. ரஹீம் பாய் கணக்கெடுத்துக் கொண்டிருந்தார்.

“பாய்…” சண்முகத்தின் குரல் கேட்டு திரும்பினார். “வாப்பா…” என்று கூறியபடி அவன் பின்னால் பார்த்தார்.

யாரையும் காணோமே என்று யோசித்தவரிடம், “எல்லாம் புயல்ல தொலைஞ்சி போய்ட்டாங்க” என்றான் சலனில்லாமல்.

“யா அல்லா..சரி வா, வந்து வண்டில ஏறு…” என்றார் ரஹீம் பாய்.

– ஜெகன்ஜி

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More