புது வருசம் பிறந்ததும் … வீட்டில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பது பொங்கல் பண்டிகை தான்.
பெரியவர்கள் பொங்கலுக்கு வெள்ளை அடிக்கனும் , வீட்டை சுத்தம் செய்யனும் பேசிக் கொண்டிருக்க … எனக்கோ பொங்கல் இனிப்பு அப்படியே நாவில் சுவை வந்து போனது.
அதுவும் பாட்டி வீட்டில் பொங்கல் வைப்பது ஒர் பெரிய திருவிழா போல் இருக்கும். வீட்டை வெள்ளை அடித்து, எங்கும் புதிதாக தோரணம் கட்டி, மாவிலை பறித்து வாசலில் தொங்க விட்டு பாட்டியும் தாத்தாவும் உறவுகள் வருகைக்காக காத்திருப்பார்கள்.
நானோ … சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, அவர்களின் பிள்ளைகள் எல்லோரும் எப்போ வருவார்கள் என்று வாசலில் சத்தம் கேட்கும் போதெல்லாம் ஓடி ஓடி பார்ப்பதுமாக நாட்கள் ஓடும்…
ஒரு வழியாக பொங்கல் நாள் நெருங்கையில் ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பிப்பார்கள்.
அம்மா பொங்கல் பானை சுத்தம் செய்து அலங்காரம் பன்ன, சித்தயும் அத்தையும் சேர்ந்து புது நெல்லை உரலில் குத்தி அரிசி எடுக்கையில், அவர்கள் சிரித்து பல கதைகள் பேசுவதைக் கேட்பது மேலும் இனிமையாக இருக்கும்.
அப்பா, மாமா கடைக்கு போய் வெல்லம், கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள் வங்கி வருவதும், சத்தமாக அவர்கள் சேர்ந்து விவாதம் பன்னுவதும் கூட கேட்க நன்றாக இருக்கும்.
சிறுவர்கள் நாங்கள் சொப்பு சாமான் வைத்து கருவேல மரத்தின் இலை, பூ, காய் என்று அனைத்தையும் பறித்து, தேங்காய் சரட்டையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் கொடுத்து சிரித்து மகிழ்வோம்.
பொங்கல் நாளும் வந்தது…
விடியற்காலையில் தை திருநாளாம் பொங்கல் திருநாளில் வண்ண வண்ண கோலமிட்டு மகிழ்வோம்.
அனைவரும் நீராடி பின்பு சிறுவர்கள் நாங்கள் புத்தாடை உடத்தி இங்கும் அங்கும் ஓடி விளையாடுவோம்.
அம்மா, சித்தி, அத்தை அனைவரும் பாட்டி தாத்தா எடுத்து தந்த பட்டாடை உடுத்தி அழகு பார்ப்பதும்; அப்பா, சித்தப்பா, மாமா என்று அனைவரும் தமிழர் உடையான வேட்டி மற்றும் சட்டை அணிந்து வளம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
பின்பு அனைவரும் சேர்ந்து கரும்பு மற்றும் மஞ்சல் கொத்தை நிலப்படியில் கட்டுவார்கள். சிறுவர்கள் எங்களுக்கும் சாப்பிட சிறிய கரும்பு துண்டுகளையும் பெறுவோம். “உங்கள் ஆடையை அழுக்காக்காமல் சாப்பிடுங்கள்” அம்மா குரல் பின்னல் இருந்து ஒலிக்கும்.
பொங்கல் வைக்க நல்ல நேரம் தாத்தா பார்த்ததும், மணல், விறகு, செங்கல் என்று அப்பா, சித்தப்பா, மாமா எடுத்து வருவார்கள்.
பாட்டி வீட்டின் நடுவில் மணல் பரப்பி, செங்கல் வைத்து அடுக்கி, அடுப்பு செய்து, விறகு வைத்து சூடம் ஏற்றி அடுப்பை பத்த வைத்து, பொங்கல் பானை அடுப்பல் வைத்து, அரிசி அலசிய தண்ணீரை பானையில் ஊற்றி, பால் எப்போ பொங்கும் என்று காத்திருந்து, பால் பொங்கும் சமயத்தில், பாட்டி அந்த சங்கை யாராவது ஊதுங்க என்று சொல்ல, சிறுவர் முதல் பெரியவர் வரை சங்கை ஊத முடியாமல் தவிக்க, கடைசியில் பாட்டியே சங்கை வாங்கி ஊத “பொங்கலோ பொங்கல்” என்று அனைவரும் குலவையிட்டு ஒருவர் பின் ஒருவராக பானையில் அரிசி போட, நன்கு அரிசி வெந்ததும், வெல்லம் சுக்கு போட்டு கிளறி, நெய் ஊற்றி சாமிக்கு வைத்து படைத்து, அனைவருக்கும் பாட்டி மணக்க மணக்க பொங்கல் பரிமாறி அதை சாப்பிடும் பிள்ளைகளை கண்டு சந்தோசம் அடைவார்கள்.
எனக்கோ, இரண்டாவது பத்தியில் நான் சொன்னது போல், இனிமையாக நினைவுகூரப்பட்ட கரும்பினும் இனிய பாட்டியின் வீட்டு பொங்கலை சுவைப்பதில் பேரானந்தம்.
– மாணிக்க மீனாட்சி அன்பழகன்
நன்றி : muenchentamilsangam.org