சோர்வையே அள்ளிக் தெளிக்கும் மம்மல்.
மனிதர்களின் குரலில்லாத இடைவெளியை
வானொலி நிரப்புகிறது.
காலில் உரசிக்கொண்டிருந்த பூனையும்
வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த கறுப்பனும்
உலாப் போய் விட்டன.
புலுனிகள் மட்டும்
நாற்சார் முற்றத்தில் குதூகலமாய்.
உணர்வைத் தொலைத்துவிட்டு
மின்மினிகளின் பின்னால்
மனிதர்களும் சென்றுவிட்டார்கள்.
இருளும் ஒளியும் ஒன்றாகிய வாழ்வில்
கண்சிமிட்டும் வெளிச்சம்
அவளைத் தேற்றப்போவதில்லை.
பேர் சொல்லி அழைக்கும்
ஒரு குரலுக்காக…
அந்தக் கணங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன.
அழுக்கேறிப்போன மேசையில்
வலது கையூன்றி
இருட்டை வெறித்தபடி இருக்கிறாள்.
ஒரு காலடியோசை.
அவசரத்தில்
மூக்குக் கண்ணாடியை எடுத்துப் பொருத்துகிறாள்.
கைத்தடியைத் தேடி எடுக்கிறாள்.
தனிமை…
அவள் காலடியில் சுருண்டு கிடக்க,
காலம்,
தன் ரேகைகளை
அள்ளித் தெளித்துவிட்டுச்
சென்று கொண்டேயிருக்கிறது.
துவாரகன்