செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மகன் | சிறுகதை | ஜீவன்

மகன் | சிறுகதை | ஜீவன்

4 minutes read

“வாங்கம்மா வாங்க. எப்படி இருக்கீங்க?”
“நான் நல்லா இருக்கேன் டாக்டர். நீங்க எப்படி இருக்கீங்க? .நீங்க உங்க பிள்ள குட்டிகளோடரொம்ப நாளைக்கு சந்தோஷமா இருக்கனும் டாக்டர். அப்பத்தான் நாங்க சொகமா இருக்க முடியும். நீங்க இல்லைனா நாங்க எங்கப் போவோம் டாக்டர்? எங்க வியாதி மருந்தால நல்லாவுதோ இல்லையோ எங்களுக்கு தெரியாது ஆனா உங்ககிட்ட வந்துட்டு போனாலே போதும் எங்களுக்கு குணமாயிடும். மொகசுதிக்காக சொல்லல டாக்டர். உங்ககிட்ட பேசிட்டு போனாலே போதும்…எல்லாம் சரியாயிடும்.”
” என்னம்மா இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க…?”
” ஆமா டாக்டர். அதுக்குத்தானே இவ்வளவு காலையில வந்தேன். உண்மையிலே நான் சந்தோஷமாத்தான் இருக்கேன் டாக்டர். என் மகன் இன்னைக்கு சாயந்தரம் வந்து என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறான் டாக்டர். கூட என் மருமகளும் பேர பிள்ளைகளும் வரப்போறாங்க. ரெண்டு மாசத்துக்கு நான் ஹோம்ல இருக்கப்போறதில்ல. அதனால என்னை தரவா செக் பண்ணி ரெண்டு மூணு மாசத்துக்கு மருந்துகளை கொடுத்துடுங்க டாக்டர்”.
” ரொம்ப சந்தோஷம்மா. வாங்க. இப்படி வந்து உட்காருங்க . BP பாத்துடலாம். ஆமா இப்படி ஒரு மகன் இருக்கையில நீங்க ஏம்மா இந்த ஓல்ட் ஏஜ் ஹோம்க்கு வந்தீங்க ?”
” என் மவன் ஆட்டோ ஓட்டுறான். தனியா இருந்தவரை நானும் அவன்கூடத்தான் இருந்தேன்.
அவனுக்கு எப்படியோ வாய கட்டி வவுத்த கட்டி ஒரு கல்யாணத்த கட்டி வெச்சேன். அவனே ஆட்டோ ஓட்டுறான். அவனுக்குன்னு ஒரு குடும்பம் வந்திருச்சு. நாம ஏன் பாரமா இருக்குனும்னுதான் நான் ஒதுங்கி வந்துவிட்டேன். அவனும் அவன் குடும்பமும் நல்ல இருந்தா சரி.

 

இப்போ அவனுக்கு குழந்தைங்க வேற பொறந்திடிச்சு. நெறைய சொத்துப்பத்து, சம்பாத்தியம் இருக்கறவங்க கூட வாழ்க்கையை நடத்தறதுக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. எங்கள போல இருக்கும் ஏழை பாழைங்க என்ன செய்வோம். அவனுக்கு நானும் ஒரு பாரமா இருக்க கூடாதுன்னுதான் நான் இந்த ஹோமுக்கு வந்துட்டேன்.”
” விடுங்கம்மா. இப்பவாது உங்க மகன் வரானே. சந்தோஷம்மா. BP மாத்திரைகளை மட்டும் ஒழுங்கா விடாம….மறக்காம சாப்பிடுங்கம்மா. மூணு மாசம் சந்தோஷமா இருந்துட்டு வாங்கம்மா”
“ஆமா டாக்டர். சாயந்தரமா வரேன்னுட்டு சொல்லி அனுப்பினான். நான் போய் துணியெல்லாம் துவைக்கணும். அப்புறமா குளிச்சிட்டு ரெடியாகணும். மூணு மாசம் கழிச்சி பார்க்கலாம். இந்த சந்தோஷத்தை உங்ககிட்ட சொல்லலாமுன்னுதான் ஓடியாந்தேன். வரேன் டாக்டர். எனக்காக வேண்டிக்கோங்க டாக்டர்.”
அந்த அம்மா போயிட்டாங்க. நானும் கொஞ்சம் பிசி ஆயிட்டேன். அந்த அம்மாவை கொஞ்சம் மறந்துதான் போயிட்டேன். சாயந்தரம் அந்த ஹோம் கேர் டேக்கர் அவசரம் அவசரமாய் என் க்ளினிக்குள் நுழைந்தார். “டாக்டர்…டாக்டர்…கொஞ்சம் எங்க ஹோமுக்கு வாங்க டாக்டர். அங்க ஒரு அம்மா கொஞ்சம் சீரியஸா இருக்காங்க.” என்று என்னை அவசர படுத்தினார். நானும் வேகமாய் அந்த ஹோமை அடைந்தேன்.
” இதோ இந்த அம்மாதான். பாருங்க டாக்டர். உயிரோடத்தானே இருக்காங்க”.
நான் அந்த அம்மாவைப் பார்த்தேன். தலை முழுகி, நடு வகிடெடுத்து படிய தலை வாரி, மஞ்சள் பூசிய நெற்றியில் சிகப்பாய் குங்குமம் வைத்து.,மடித்த சேலையை பாங்காய் கட்டி..முகம் நிறைந்த
புன்சிரிப்போடும்.. பொங்கி வழிந்த சந்தோஷத்தோடும்…இன்னும் உயிர்ப்போடும் இருந்த அந்த அம்மாவைப் பார்த்தபோது…எவ்வளவு உறுதியோடு மனதை கட்டுப் படுத்தினாலும் கண்கள் குளமாயின. ” வாங்க டாக்டர்…வாங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் என் மகன் வந்திடுவான். நீங்க பார்த்ததில்லையே. இன்னைக்கு பாருங்க. சும்மா ராசா கணக்கா இருப்பான். என் பேர பிள்ளைங்க ரெண்டும் அப்படி துறுதுறுன்னு இருப்பானுங்க. சேர்ல உக்காருங்க டாக்டர்.” என்று சொல்வதுபோல் இருந்தது. என் இதயம் கனத்தது.
“டாக்டர் …ரெண்டு நாளா என் பையன் வருவான்.என் பையன் வருவான். என்னை கூட்டிக்கொண்டு போவான். எனக்கு ரெண்டு பேர பிள்ளைகள். அவங்களும் நாளைக்கு வந்து என்னை கூட்டிட்டு போவாங்கன்னு எவ்வளவு சந்தோஷமா எல்லார்த்துக்கிட்டேயும் சொல்லிக்கிட்டே இருந்தாங்க.இன்னைக்கி காலையிலிருந்தே பரபரப்பா இருந்தாங்க.அங்க… அந்த பையில அவங்க துணிகளையெல்லாம் மடிச்சு வெச்சிருக்காங்க பாருங்க. குளிச்சிட்டு வந்தவங்க … டயார்டா இருக்கு. கொஞ்ச நேரம் படுக்கிறேன்னு சொல்லிட்டு படுத்தாங்க.அவ்வளவுதான்.” என்று உடன் வசித்தவர்கள் சொல்லி…சொல்லி…மாய்ந்து போனார்கள்.
அன்று சாயந்தரம் 5 மணி இருக்கும். மறுபடியும் அந்த ஹோம் கேர் டேக்கர் ஓடி வந்தார். ” டாக்டர்… டாக்டர்…புது பிரச்சனை ஒன்னு கிளம்பி இருக்கிறது.” என்றார்.
நானோ…” வாங்க சார்…என்ன அந்த அம்மாவின் பையன் வந்தானா? அவங்க பாடியை கொண்டு போய்ட்டாங்களா? காலையில்தான் வந்து இன்னைக்கு மகன் வர்றான்.வந்து கூட்டிட்டு போறான். எனக்கு மூணு மாசத்துக்கு மருந்து கொடுங்கன்னு வாங்கிட்டு போனாங்க. எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க தெரியுமா? டாக்டரான என்னாலையே அவங்க இறப்பை தாங்கிக்க முடியல.ஆனா ஒன்னு சார்..அவங்க ஆசிர்வதிக்கப்பட்ட ஆத்துமா. அதனாலதான் இப்படி ஒரு நிம்மதியான … சந்தோஷமான சாவு. யாருக்கிங்க கிடைக்கும். எல்லோரும் அதுக்காகத்தானே அலையறோம்.”
” டாக்டர்…நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா இப்போ பிரச்சனை என்னன்னா…அவங்க பையன் பொண்டாட்டி புள்ளைங்களோடு வந்தான். கேட்லேயே நம்ம வாட்ச்மேன் விஷயத்தை சொல்ல…
அப்படியே திரும்பி போய்ட்டான். அவன் பொண்டாட்டிகூட ஒரு வார்த்தை சொல்லல. நான் ஓடிப்போய் அவன் கிட்ட கேட்டப்போ..சார் நான் கூட்டிட்டு போலாம்தான் வந்தேன். ஆனா இப்படி ஆயிப்போச்சி. உயிரோடு இருந்தாக்க எதோ வீட்ல ஒத்தாசையா இருப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா இப்ப இவங்கள வெச்சிக்கிட்டு நான் என்ன செய்யறது? அது மட்டுமில்ல சாவு, கருமாதி செலவுக்கெல்லாம் என்கிட்டே ஒத்த பைசா கூட இல்ல. இங்கதான செத்துச்சு…எங்க வீட்டுக்கு கொண்டுபோகக் கூட என்கிட்டே காசு இல்ல. நீங்களே எல்லா காரியத்தையும் செஞ்சிடுங்க. எனக்கும் இவங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லன்னுட்டு…போய்கிட்டே இருந்துட்டான் சார்.
கொடுமை என்னான்னா உள்ள வந்து அந்த தாய் மொகத்தகூட பாக்காம போய்ட்டான்.

அதான் சார் எங்களால தாங்க முடியல.”
“சார்…கேட்பதற்கே ஷாக்கா இருக்கு. உலகம் எங்க போயிட்டு இருக்கின்னே தெரியல? இப்படியும் ஒரு மகன் இருப்பானா என்ன? பாவம் அந்த அம்மா. நல்லபடியா போய் சேந்துட்டாங்க. உயிரோடு இருந்திருந்து அவன் வீட்டுக்கு போயிருந்தால்…எத்தனை கொடுமைகளை …எத்தனை அவமானங்களை பட்டிருப்பாங்க. நல்லவேளை மகன் வந்து கூட்டிட்டு போகப்போகிறாங்கிற சந்தோஷத்தோட போய்டாங்க. இருந்திருந்து அவங்க மகனோட கோர மொகத்தை பார்த்திருந்தா அவங்க சந்தோசம்..அவங்க நம்பிக்கை எல்லாம் என்ன ஆயிருக்கும்?”
“டாக்டர்…நான் இப்போ வந்தது. அவங்க பாடியை என்ன செய்வது?.இறுதி மரியாதையை எப்படி செய்வது? நாளைக்கு சட்ட சிக்கல்கள் வராதா சார்?”
” சார் எனக்கும் இது புது அனுபவம்தான். என்னை பொறுத்தவரை நீங்க போலீசுக்கு தெரியப்படுத்தி டுங்க. அப்பத்தான் சட்ட சிக்கல் எதுவும் வராது.”
“சரிங்க சார். எங்களால் முடிஞ்சவரை பார்க்கிறோம் சார்.”
அடுத்த நாள் போலீஸ் வந்து, கதையை கேட்டிட்டு போஸ்ட்மார்ட்டம் கூட செய்யாமல் பெரிய மனதுடன் அவர்களை அடக்கம் செய்ய அனுமதித்தார்களாம்…என் காதில் விழுந்த செய்தி.ஆனால் பல வருடங்கள் கழிந்தபின்பும் அந்த தாயின் சிரித்த முகமும்…அவர்களின் பாசமும் …அவர்களின் நம்பிக்கையும் இன்னமும் என்னை என்னவோ செய்து கொண்டுதானிருக்கிறது.

 

நன்றி : ஜீவன் (மகேந்திரன்) | எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More