இப்படி நிலமை இறுகிக்கொண்டே வரும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஒவ்வொரு நாளும் பதட்டத்துடனும் திகிலுடனுமே கழிந்து போகிறது. மனதுக்குள் நிரம்பியிருக்கும்கேள்விகள் செல்வத்தை மிகவும் பயமுறுத்தின. முதுகை எரித்த சூட்டைக்கூட பொருட்படுத்தத்தோன்றவில்லை.
சூரியன் உச்சிக்கு ஏறியிருந்தது. வெயிலோ மழையோ வரிசையை விட்டு விலக முடியாது. இந்தஆனி மாதத்தில் வெய்யிலும் எறிக்கிறது, மழையும் பொழிகிறது. எது வந்தாலும் இதே இடத்தில்நிற்கவேண்டியதுதான். சுற்றுப்புறம் பல விதமான சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. வாகனங்களும் மனிதர்களுமாய் நீண்ட வரிசை…… கூடிக்கூடிப் பேசும் கவலை கொண்ட மனிதர்கள்.
சந்தியிலிருந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து எதிரே உள்ள வீதி தாண்டி திரும்பும் மற்றவீதி வரை வரிசை நீண்டு போயிருந்தது. திரும்பி நின்ற வீதியிலும் எத்தனை வாகனங்கள் நிற்கின்றனவோதெரியவில்லை. மூன்று நாட்களாக இங்கே காவல் இருக்கிறார்கள். இன்று எப்படியும் தந்துவிடுவார்கள்என்று ஒருவருக்கொருவர் பேசி மனதைத் தேற்றிக் கொண்டார்கள். ஓட்டோக்களுடன் நின்றமோட்டர்சைக்கிள்கள் அருகே பெண்களும் வரிசையில் நிற்பதைப் பார்க்க முடிந்தது. அவர்களில் ஒருநிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் நிற்பதைப் பார்க்க பாவமாக இருந்தது. வேர்த்த முகத்தைத்துடைத்துக்கொண்டு நின்றாள்.
வெள்ளவத்தைக்குள் ஓடித்திரிந்த ஓட்டோக்காரர் பலரை இங்கே பார்க்க முடிந்தது. அதைவிடவழக்கத்துக்கும் மாறாக இன்று அதிகமான பொலிஸ்காரர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அது வேறுபதட்டத்தைத் தந்தது.
செல்வத்தின் ஓட்டோவில் சுத்தமாய் பெற்றோல் இல்லை. ஹம்டன் வீதியிலிருந்து இங்குவரை ஓட்டோவை தள்ளிக்கொண்டுதான் வந்திருந்தான். இன்றைக்கு என்றாலும் பெற்றோல்கிடைத்துவிட வேண்டும். போனதடவை வரிசை நகர்ந்து அருகே போனபோது “இல்லை. அடுத்த தரம்வாருங்கள்” என்று கையை விரித்துவிட்டார்கள். நாலு நாளாய் காத்திருந்தது வீணாகப் போய்விட்டது. இன்றைக்கும் அப்படி நடந்துவிடுமோ என்று பயமாக இருந்தது.
இப்போது வீட்டு நிலைமையும் சரியில்லை. ஓட்டோ ஓடினால்தான் ஏதும் வருமானம் வரும். கஞ்சியென்றாலும் குடிக்க வழி கிடைக்கும். இல்லாவிட்டால் பட்டினிதான். போகிற போக்கைப்பார்த்தால்அந்த நிலை கூட வந்துவிடும் போலிருக்கிறது. வெள்ளவத்தையில் சந்தையோ வீதியோரக்கடைகளோநடக்கத்தான் செய்கின்றன. எல்லாமே நான்கு மடங்கு விலை. நூறு ரூபா விற்ற மரக்கறிவகைகள்நானூறு வரை விற்கின்றன.
அதை விடப் பெரும் கவலை அவன் மனதுக்குள் இருந்து வாட்டியது. அவன் முந்தநாள் இங்குவரும்போதே சுதாக்குட்டிக்கு மெல்லிய காய்ச்சல் இருந்தது. இன்று காலையில் அமுதா போன் பண்ணிசுதாவுக்கு காய்ச்சல் இன்னும் விடவில்லை என்று கூறியது மனதை வருத்திக்கொண்டே இருந்தது. வீட்டிலும் ஒரு பொருள் இல்லை. பெற்றோல் வாங்க காசும் வேணும். அமுதாவின் மூக்குத்தியை அடைவுவைத்து ஆயிரத்திநானூறு ரூபா வாங்கி அதில் பனடோலும் வாங்கி, முன்பு எண்பது ரூபா விற்ற பிஸ்கற்பெட்டியை இருநூற்று இருபது ரூபா கொடுத்து வாங்கியும் சுதாவுக்காக கொடுத்துவிட்டு வந்திருந்தான். ஐஞ்சு வயசுப்பிள்ளை கண்மூடிப் படித்திருந்த கோலம் நினைக்கும் தோறும் மனதை பதை பதைக்கவைத்தது.
செல்வம் நின்று எதிரே பார்த்தான். சனங்களின் தலைக்கு மேலாக தூர எரிபொருள் நிரப்பும்நிலையம் தெரிந்தது. அங்கே ஏதோ சத்தங்களும் கேட்டன. முன்புறம் தனது ஓட்டோவுடன் நின்றபியதாசவைப் பார்த்தான் செல்வம். பியதாசவும் வெள்ளவத்தையில்தான் இருக்கிறான். ஏற்கனவே பழக்கம்உண்டு.
“என்ன அங்க ஏதும் பிரச்சனையா?” சிங்களத்தில் கேட்டான்.
“அது சனங்கள் நெரிசலில தள்ளுப்பட்டதில பொலிஸ் வந்து இரண்டு மூன்று பேருக்குஅடிச்சுப்போட்டாங்களாம். அதுதான் சனங்கள் குவிஞ்சு நிண்டு கத்திக்கொண்டிருக்கிறாங்கள். “
“அட கடவுளே..”
அதற்குள் வரிசை குழம்பி சனங்கள் கூட்டமாய் நின்று எதிரே பார்த்துக்கொண்டு நின்றார்கள். செல்வம்அவர்களை விலக்கிக் கொஞ்சத்தூரம் போய்ப்பார்த்தான். சூழ்ந்து நின்ற ஆட்களின்பெருங்குரல்கள்…சிங்களத்தில் ஆவேசத்துடன் கத்துவது உச்ச சத்தத்தில் கேட்டது. எல்லாம் வயிற்றுக்கொதிப்பின் குரல்கள். பக்கங்களில்
நின்ற வாகனங்களிலிருந்து மேலதிக காவல்துறையினர் தொப் தொப்பென்று குதித்தார்கள். அதைப்பார்க்க ஏதும் பிரச்சனைகள் வந்து விடுமோ என்றும் பயமாய் இருந்தது. செல்வம் மிரண்டு போய் தன் இடத்துக்கு வந்தான்.
வேறு வேறு இடங்களில் இப்படி வரிசையில் நின்று நெரிபட்டு ஏழெட்டுப் பேர் இறந்து போனதுநினைவுக்கு வந்தது. அது போதாது என்று வரிசையில் நிற்பவர்களால் கூட பிரச்சனைகளும் வருவதைசெல்வம் கேள்விப்பட்டிருக்கிறான். காலிமுகத்திடலில் சனங்கள் சேர்ந்து போராட்டம் செய்கிறார்களாம்என்ற விஷயம் பற்றி வரிசையில் நிற்பவர்கள் கூடி நின்று கதைக்கும் வேளையில் களவாக அவர்களின்ஓட்டோவில் இருக்கும் பெற்ரோலை குழாய் வைத்து திருடிய சம்பவங்களும் வேறு வேறு இடங்களில்நடந்ததாக அறிந்திருக்கிறான். ஆனால் தன்னுடன் வரிசையில் நிற்கும் ஆட்கள் அப்படியான திருட்டுவேலை செய்பவர்களாக இருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது.
தூரத்தில் மறுபடி சனங்களின் கோபக்குரல்கள். சிங்களத்திலும் தமிழிலும் மூச்சு விடாமல் கத்தும்குரல்கள். இப்போது எதற்கு கத்துகிறார்களோ….
குழப்பமும் பதட்டமுமாக மறுபடி வரிசை கலைந்து கூட்டம் சேர்ந்தது.
“வரிசையில் நின்று பெற்றோலை வாங்கி அந்தப்பக்கம் போய் எடுத்து வைத்து விட்டு மறுபடி வந்துவரிசையில் நிற்கிறது. பிறகு அதை இரண்டாயிரம் மூவாயிரம் என்று கூடுதலாய் விற்கிறது. அந்த மாதிரிசெய்கின்ற ஆட்களைத்தான் பிடித்து வைத்துக்கொண்டு சனம் கத்துறாங்கள்.”
பியதாச எரிச்சலோடு சொன்னான்.
“சனங்களின்ர பயன்பாட்டுக்கெண்டுதான் பெற்றோலைத் தருகினம். அதை கொஞ்சப்பேர்வியாபாரமாக்கிப் போட்டாங்கள். இவங்களால எங்கள் எல்லாருக்கும்தான் கெட்ட பேர்”
செல்வம் நொந்த குரலில் சொன்னான்.
“இங்க நிற்கிறவங்களில நம்மை மாதிரியே உழைச்சு வாழ்றவங்கதான் அதிகம் பேரு. இதுக்குள்ளசுயநலமா யோசிக்கிற கொஞ்சப்பேரும் இருக்கத்தான் செய்யறாங்க. நாங்க என்னபண்ணலாம்…..விடுங்க.”
இன்றைக்கு என்ன நடக்கப்போகிறதோ….
மனம் கலவரப்பட்டது.
பூக்களின் வாசனை காற்றில் மிதந்து பரவியது. அவன் நின்ற இடத்துக்குப் பக்கத்தே வரிசையாகசின்னச் சின்னக் கடைகள். பக்கத்தில் கோவில் இருந்ததால் பூமாலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த பூக்கடைகள்……வாழைக்குலைகளுடன் கீழ்த் தட்டில் பழ வகைகள் பரவியிருந்தபழக்கடைகள் ….கண்ணாடிப்பெட்டிக்குள் சிறிய தொகையிலான வடைகள், வாய்ப்பன்கள், மிக்ஸர்பொதிகள் அடுக்கி வைக்கப்பட்ட சிறிய தேனீர்க்கடைகள்.
பசித்தாலும் வாய்ப்பனையோ வடையையோ சாப்பிட முடியாது. மூன்று மடங்கு விலை. பசித்தால் இரண்டுவாழைப்பழமும் தண்ணீரும்தான்.
திரும்பவும் எதிரே பார்வையை ஓடவிட்டான். இப்போது குரல்கள் அடங்கி கொஞ்சம் அமைதிதெரிந்தது. அங்கும் இங்குமாய் அலைந்துவிட்டு வந்த பியதாச
“நாலு மணிக்குத்தான் எண்ணை வாகனம் வருமாம். அதுக்குப் பிறகுதான் கொடுப்பார்களாம்.” என்றான்.
“அப்போதாவது வந்து விடுமா.. கட்டாயம் கொடுப்பார்களா.” செல்வம் யோசனையோடு கேட்டான். பியதாச கையை விரித்து தோளைக் குலுக்கினான்.
இன்றைக்கு பெற்றோல் கிடைத்தே தீரவேண்டும். வெளியே விற்கும் அதிக விலைக்கு ஒரு போதும் வாங்கமுடியாது. இங்கே மூன்று நாளாக கால் வீங்க நின்றது வீணாய் போய்விடுமா…
அம்மாளாச்சி…தாயே…
எதிர்ப்புறம் தெரிந்த கோவில் பார்த்து கும்பிட்டுக் கொண்டான்.
அவனுக்கு பின்புறம் ஓட்டோவில் சாய்ந்து நின்று கொண்டு யோசனையில் இருந்தவனைப் பார்த்து
“அண்ணை.. பெற்றோல் இண்டைக்கு கிடைக்குமா கிடைக்காதா எண்டு ஒரே கவலையாய் இருக்கு. இல்லை எண்டு கையை விரிச்சால் என்ன செய்யிறது.“ என்று ஆற்றாமையோடு கேட்டான்.
அவனுக்கு நாற்பது வயது இருக்கும். முன் நெற்றியில் லேசாய் நரை விழுந்திருந்தது. சிறிது பருமனானஉயரமான தோற்றம். பரந்த முகத்தில் அடர்த்தியான மீசை. அவன் அதிகம் யாருடனும் பேசுவதில்லை. எந்நேரமும் யோசனையும் விரக்தியுமாக இறுகிப்போன முகத்துடன் இருப்பான். அவனின் பெயர்தெய்வேந்திரன் என்றும் வெள்ளவத்தை மல்லிகா வீதியில் இருப்பவன் என்றும் நேற்றுத்தான் பேசும்போதுதெரிந்து கொண்டான். வெள்ளவத்தை வீதிகளில் எங்கேனும் அவனைப் பார்த்திருக்கக்கூடும். ஏதோபரிச்சயமான முகம் போலத்தான் இருந்தது.
“அவங்கள் தந்தால் சரி, இல்லாட்டி என்ன செய்யிறது…முன்னுக்கு கொஞ்ச சனம் பிரச்சனைப்பட்டுகத்துகினம்தானே. அப்பிடித்தான் எல்லாரும் கத்திற நிலை வரப் போகுது. நடக்கிறதைப் பார்க்கவேண்டியதுதான். “
இந்த நெருக்கடியில் யாரும் இப்படித்தான் பேசுவார்கள். ஆனாலும் அவனின் பேச்சில் அதிகம் விரக்திஇருப்பது போல் செல்வத்துக்குத் தோன்றியது. பாவம், வீட்டிலும் என்னென்னகஷ்டங்களோ….சீவியத்தைக் கொண்டு நடத்த தன்னை மாதிரியே அவனுக்கும் நிறைய பிரச்சனைகள்இருக்கக்கூடும் .
செல்வம் தனது ஓட்டோவுக்கு அருகில் வந்து நின்றுகொண்டான்.
இன்றைக்கு பெற்றோல் தந்தால் கொஞ்ச நாளைக்கு ஓட்டம் இருக்கும். கையில் காசு வரும். கணபதியண்ணையின் கடைக் கடனைக் கொடுத்து விட்டு ஏதேனும் பொருட்களைவாங்கிக்கொள்ளலாம்.
நல்ல சாப்பாடு என்று சாப்பிட்டு எத்தனை நாளாயிற்று.
செல்வத்துக்கு சுதாக்குட்டியின் நினைவு வந்தது.
இப்ப பிள்ளைக்கு எப்படி இருக்கோ….காய்ச்சல் விட்டதா இல்லையா…அமுதா ஏதும் சமைத்தாளா இல்லையா…
ஒருக்கா எடுத்து அமுதாவிடம் கேட்கலாமா என்று நினைத்தபோது கைபேசி ஒலித்தது. அமுதாதான்அழைக்கிறாள். பதட்டத்துடன் எடுத்து “அமுதா…” என்றான்.
மறு பக்கத்தில் அவளின் அழுகைக்குரல் கேட்டது.
“சுதாவுக்கு வலிப்பு வந்திட்டுது. சரியான காய்ச்சல். மேல் எல்லாம் கொதிக்குது. எனக்குப் பயமாய்இருக்கு. உடன வாங்கோ.“
“ஐயோ… என்ன சொல்லுறாய்.”
செல்வத்தின் கத்தல் கேட்டு பியதாசவும் தெய்வேந்திரனும் அருகே ஓடி வந்தார்கள்.
“ஐயோ..என்ர பிள்ளைக்கு காய்ச்சல் கூடி வலிப்பு வந்திட்டுதாம்.”
“சரி..சரி..உடன வாறன் எண்டு சொல்லு.” என்று சொன்ன தெய்வேந்திரனைப்பார்த்து
“நான் இப்ப என்னெண்டு போறது.” என்றான் குரல் அடைக்க.
“ஏன் ..”
“ஓட்டோவில ஒரு சொட்டு பெற்றோல் இல்லை அண்ணை. வீட்டில இருந்து ஓட்டோவை தள்ளிக்கொண்டுதான் இங்க வந்தனான். எப்பிடியும் பெற்றோல் தருவாங்கள் எண்ட நம்பிக்கையில நிற்கிறன். “
“சரி. உன்ர ஓட்டோ இங்க நிற்கட்டும். எங்க உன்ர வீடு?”
தெய்வேந்திரன் கேட்டான்.
“இங்கதான் ஹம்டன் லேன் கடந்து போக வரும்”
“சரி வா. என்ர ஓட்டோவில போகலாம் “
“பெற்றோல் இருக்கா உங்களிட்ட. இல்லாவிட்டால் நான் என்ர ஓட்டோவில கூட்டிப்போறேன்.” என்றான்பியதாச.
“பரவாயில்லை. ஓட்டோவில பெற்றோல் இருக்கு. நான் கூட்டிப்போறன். ஏறு கெதியாய் போவம். மெனக்கெடாத.”
செல்வம் தயங்கினான்.
“நீங்கள் இந்த அளவு கஷ்டப்பட்டு வரிசையில நிண்டு போட்டு வரப்போறீங்களே அண்ணை”
அதற்குள் அங்கு வந்து சூழ்ந்து நின்றவர்கள் “நீங்கள் கெதியாய்ப் போங்கோ..உங்கட இடத்தை நாங்கள்பார்த்துக் கொள்ளுறம்.”
என்றார்கள்.
செல்வம் தெய்வேந்திரனின் ஓட்டோவில் ஏறிக்கொள்ள ஓட்டோ சனங்களை விலத்தி பின்பக்கமாகவளைந்து திரும்பி வீதியில் சீறிக்கொண்டு ஓடியது.
“இந்தா வந்திட்டன் அமுதா.யோசிக்காத.உடன ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடலாம். பிள்ளையைப்பார்த்துக்கொள்.“
செல்வம் கைபேசியில் சொல்லிக்கொண்டே வந்தான்.
“கவலைப்படாத..போயிடலாம். எங்க கொண்டு போறது…”
“களுபோவில ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவம் அண்ணை. பிறைவேற்றாய் காட்ட வசதி இல்லை.“
“சரி ..சரி ..அங்கயே போகலாம். அவையளை ஆயத்தமாய் இருக்கச்சொல்லு“
“அமுதா…ஹலோ, அமுதா…அழாத.. இன்னும் பத்து நிமிஷத்தில வந்திடுவம். ஆயத்தமாய் இரு. உடனும்ஆஸ்பத்திரிக்குப் போயிடலாம். “ என்று கைபேசியை அணைத்தான்.
“அமுதா சரியாய் அழுகுது. எங்கட ஒரே பிள்ளை. கொஞ்ச நாளாய் ஆன சாப்பாடும் இல்லாமல் போச்சு. நான் என்ன செய்ய அண்ணை… இப்பிடியும் இந்த கடவுள் சோதிக்குதே.உழைப்பு பிழைப்பு இல்லாமல்எத்தினை நாளைக்கு இப்பிடி இருக்கிறது.” செல்வம் அழுகையில் குலுங்கினான்.
தெய்வேந்திரன் ஒரு தடவை திரும்பி அவனைப் பார்த்து விட்டு
“கவலைப்படாத.. டபிள்யூ. ஏ. டி. சில்வா மாவத்தை வந்தாச்சு. அந்த சந்தியில திரும்பினால் ஹம்டன்லேன்தானே.. இந்தா போயிடலாம். “
தெருக்கள் இந்த மத்தியானப் பொழுதில் வாகன ஓட்டம் அதிகமின்றி வெறிச்சிட்டுத்தான் கிடக்கின்றன. ஏதாவது ஒரு நேரத்தில்தான் காரோ,வானோ தென்படுகிறது. அவ்வப்போது ஓட்டோக்களும் கண்ணில்படுகின்றன. மற்றும்படி பேரூந்துகள்தான் ஆட்களை நிறைத்துக்கொண்டு ஓடித்திரிகிறது. மூச்சு முட்டஅடைந்து நின்று பிரயாணம் செய்யும் மனிதர்களைப் பார்க்க பகீரென்கிறது.
வீதியின் இரு பக்கங்களிலுமுள்ள கடைகளிலும் சரி தெருவோர மரக்கறிக்கடைகளிலும் சரிஆட்கள் நிறைந்து நிற்கத்தான் செய்கிறார்கள். கவலையோடும் விலையேற்றம் பற்றிய மலைப்புகளோடும்நடந்து நடந்தே அலுவல்களை முடித்துக்கொள்பவர்கள். வேறு பாடில்லாமல் எல்லா மனிதர்களையும்அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள். இதற்குள் வருத்தமும் வந்தால்….
ஹம்டன் வீதி நீளம் போய் ஒரு இறங்கு பாதையில் திரும்பியது ஓட்டோ.
“இதால நேர கொஞ்ச தூரம் போங்கோ“
அந்தப் பாதையில் ஒரு பக்கம் பாலமும் அதன் கீழே ஓடும் தண்ணீருமாய் காணப்பட மறுபக்கம்வரிசையாய் வெள்ளை நிற பச்சை நிற பூச்சுக்கள் பூசிய சின்னச் சின்ன ஒற்றை அறை வீடுகள். தெருவோரம் இருந்த குழாயில் குடம் வைத்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் பெண்கள்.
“அந்தா…அந்தப்பக்கம் பச்சை நிற பெயிண்ட் அடிச்ச வீடுதான் அண்ணை. “
ஓட்டோ போய் அந்த வீட்டு வாசலில் நின்றது.
மிகவும் சிறிய வீடு. ஒற்றை அறையின் முன்புறம் பலகையால் இழுத்து சதுர விறாந்தையாய்ஆக்கப்பட்டிருந்தது. வாசலில் கிடந்த மெலிந்த நாய் ஒன்று ஓட்டோ சத்தம் கேட்டு ஓடி வந்தது. முற்றத்தில் நாலைந்து பேர் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.
செல்வம் இறங்க சுதாவைத் தூக்கிக்கொண்டு அமுதா ஓடிவந்தாள்.
“வலிப்பு நிண்டிட்டுது, ஆனா வாயில நுரை வந்து கொண்டிருக்கு. பிள்ளை மயங்கிப் போச்சு. ..என்ரகடவுளே…”
அழுது கொண்டே வந்த அமுதாவிடமிருந்து செல்வம் குழந்தையை வாங்கிக்கொண்டான். பக்கத்து வீட்டுகண்மணி அக்கா ஒரு சாக்கு நிறப் பையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
“கெதியாய் ஏறுங்கோ…மெனக்கெட வேண்டாம்.” தெய்வேந்திரன் அவசரப் படுத்தினான்.
குழந்தையுடன் அவர்கள் ஏறியதும் ஓட்டோ களுபோவில நோக்கி ஓடியது. மடியில் துவண்டுகிடந்த மகளை பரிதவிப்போடு செல்வம் தடவிக் கொடுத்தான். வாயின் ஓரம் மெலிதான வெள்ளை நுரைஈரலிப்பாய் இருந்தது. அமுதா அழுது கொண்டே துணியால் துடைத்து விட்டாள்.
“ஒன்றும் ஆகாது. பயப்பட வேண்டாம். ஆஸ்பத்திரிக்கு இப்ப போயிடலாம்.“
தெய்வேந்திரன் ஆறுதலாக சொன்னாலும் அவன் குரலிலும் ஒரு பதட்டம் இருக்கத்தான் செய்தது.
இருபது நிமிஷத்தில் ஓட்டோ களுபோவில ஆஸ்பத்திரி வாசலில் நின்றது. அவசரமாகஇறங்கினார்கள்.
“நீங்கள் பிள்ளையைக் கொண்டு போங்கோ. ஓட்டோவை அங்க விட்டிட்டு நானும் வாறன். கெதியாய்ப்போங்கோ. “
அவர்கள் நிறைந்து போய் நின்ற ஆட்களுக்குள் வழிதேடி உள்ளே போனார்கள். விபரங்களைப் பதியும்நடைமுறைகளை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கிக் கிடந்த குழந்தையை தாதிகள் வந்துபொறுப்பெடுத்துக் கொண்டு உள்ளே போனார்கள்.
“அமுதா நீ அவையளோட போ. நான் இந்தா வாறன். “
என்று சொல்லி அமுதாவை அவர்களுடன் அனுப்பிவிட்டு வாசலுக்கு வந்தான். கையில் அவர்களின் பையைஎடுத்துக்கொண்டு உள்ளே வந்த தெய்வேந்திரனைக் கண்டு விட்டு ஆட்களை விலத்தி ஓடி வந்தான்.
பையை வாங்கிக்கொண்டு அவன் இரு கைகளையும் பிடித்து
“அண்ணை” என்றபோது கண்கள் நிரம்பி வழிந்தது.
“பயப்பிடாத. பிள்ளைக்கு சரியாகிவிடும்.“
“உங்களின்ர உதவியை எப்பவும் மறக்கமாட்டன். ஓட்டோக் காசு எவ்வளவு அண்ணை”
“இப்ப அதை ஆர் கேட்டது…நீ பெற்றோல் அடிக்க வைச்சிருக்கிற காசு. வைச்சுக்கொள். பிள்ளைக்குசுகம் வந்தால் போதும். “
சொன்னவனின் குரல் அடைத்துக் கொள்ள செல்வம் நிமிர்ந்து பார்த்தான்.
“அண்ணை…”
“ஒரு மாதத்துக்கு முந்தி பெற்றோலுக்காக நாலு நாளாய் நான் கியூவில நிண்டனான். வீட்டில என்ரபிள்ளைக்கு இழுப்பு வந்து மூச்சு எடுக்க ஏலாமல் கஷ்டப்பட மனிசி எனக்கு போன் பண்ணியிருக்கு. அந்தசன சந்தடியில உடன நான் கவனிக்கேலை. பிறகு பார்த்திட்டு ஓடிப்போய் பிள்ளையை ஆஸ்பத்திரிக்குக்கொண்டு போனம். பலனில்லாமல் போச்சு. கொஞ்சம் முதல் கொண்டு வந்திருந்தால்காப்பாற்றியிருக்கலாம். இவ்வளவு நேரமாய் என்ன செய்தனீங்கள் எண்டு டொக்டர் பேசிப்போட்டார். பத்து வயதுப் பிள்ளையை பறிகொடுத்திட்டு நிற்கிறன். உன்ர பிள்ளைக்கு வருத்தம் எண்ட உடனபதறிப்போயிட்டன். நீ பயப்பிடாத..போய் பிள்ளையை வடிவாய் கவனிச்சுக்கொள்ளு. காசு என்ன காசு…”
எப்போதும் இறுகிப் போயிருக்கும் தெய்வேந்திரன் முகத்தில் மெல்லிய நெகிழ்வு…..கண்களில் லேசாய்நீரின் திரை….குரலில் கொப்பளித்த துயர்….
தெய்வேந்திரன் வாசல் கடந்து வெளியே நடந்து போவதை செல்வம் விக்கித்துப் போய் பார்த்துக்கொண்டு நின்றான்.
நிறைவு…
தாமரைச்செல்வி
நன்றி : ஜீவநதி | ஓகஸ்ட் 2022