அவளை ஏதோ ஒரு விதமான உணர்வு பாதித்திருந்தது.
அன்றைய தினம் அவள் மனதை சோகம் பரவியிருந்தது.
தன் அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடாத குறையாக வேகமாக வந்தாள்.
ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.
அவள் வீடு அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் என்பதால் நடந்தே செல்வாள் வழக்கமாக.
இன்றைய இரவு அதிக நேரமாகியது போல் ஒரு உணர்வு இருந்தது.
சிறிது தூரம் சென்றிருந்தாள்.
யாரோ பின்தொடர்வதை போன்ற உணர்வு ஏற்பட்டது
திரும்பி பார்த்தாள்.
யாரும் தென்படவில்லை.
” என்ன இது! என்றுமில்லா உணர்வு. “,என்று எண்ணியவள் எட்டி நடந்தாள்.
மீண்டும் அதே உணர்வு ஏற்பட திரும்பிப் பார்த்தாள்.
நடப்பதும் உள்ளுணர்வால் திரும்பி பார்ப்பதும் தொடர ஒரு கணத்தில், ” யாரது? “,என்று பயம் தொற்ற மெதுவாகக் கேட்டாள்.
” ஹாஹா. “,என்ற ஒரு சிறுவனின் சிரிப்புச் சத்தம்.
கைப்பேசியை எடுத்து பார்க்க மணி பனிரெண்டைத் தாண்டிக் கொண்டிருந்தது.
பய உணர்வில் அவள் ஆழ்மன சோகம் தற்காலிக விடுதலை அளித்தது.
மெல்லிய தெரு வெளிச்சத்தில் தன் வாலை நிமிர்த்தி குரைத்துக் கொண்டே ஒடிவந்த தெருநாய் திடீரென வாலைச் சுருட்டிக் கொண்டு திரும்பி ஓடியது.
இதனால் மேலும் பய உணர்வு அவளை ஆட்கொண்டது.
கால்களை எட்டி வைத்து நடந்தாள்.
அவள் நடையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பின்னால் வந்தது அந்த காலடிச் சத்தம்.
நின்றவள் காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினாள்.
பின்னால் எதுவும் அவள் கண்களுக்கு தென்படவில்லை.
ஆனால்,
ஒரு குரல் கேட்டது.
” பயப்படாதீங்க அக்கா. நான் உங்கள ஒன்னும் பண்ண மாட்டேன்.
உங்களுக்கு துணையாகத் தான் வாரேன். “,என்றொலித்தது.
” யாரது? குரல் மட்டும் வருது. நீ எங்க ஒளிஞ்சுட்டு இருக்க? “,என்றாள் அவள்.
” ஹாஹா. உங்க முன்னாடியே தான் நிற்கிறேன். “,என்றது,
வெள்ளொளி வெளிச்சத்தில் நிழல் போன்று சிறுவன் அவன் தென்பட்டான்.
” ரொம்ப சின்ன பையனா இருக்கியே. இந்த நேரம் நீ இங்க என்ன பண்ற? வீட்டுக்குப் போகலையா? உனக்கு பயமா இல்லையா? “,என்றாள் சாதாரண சிறுவன் என்று எண்ணி.
” நான் அங்கே மரத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன்.
அப்போ நீங்க ரொம்ப சோகமா தனியா வந்தீங்க. அதான் பாதுகாப்பாக வந்தேன் மாலா அக்கா. “,என்றான் நிழல் சிறுவன்.
” என் பெயர் மாலா என்று உனக்கு எப்படி தெரியும்? இச்சிறுவயதில் மரத்திலா தூங்குவது? “,என்றாள் மாலா.
நடந்து கொண்டே பேசலாமென்றான் அச்சிறுவன்.
” நான் கேட்டதுக்கு பதில் சொல். “,என்றாள் நடந்தவாறே பயம் நீங்கிய மாலா.
” உங்க ஐடி கார்டில் உங்கள் பெயர் இருந்தது.
அதை இன்னும் கழற்றாமலே அணிந்துள்ளீர்களே!. “,என்றான்.
ஐடி கார்டை பார்த்தவள், ” சரி, உன் பெயரென்ன? உன் வீடு எங்கே உள்ளது? “,என்று சிபிஐ போல் விசாரிக்க, ” என்னைப் பற்றிய விவரமெல்லாம் பிறகு சொல்கிறேன். உங்கள் சோகத்திற்கு காரணம் என்ன? “,என்றான்.
முதலில் தயங்கியவள், பிறகு, ” நான் பணிபுரியும் இடத்தில் ஒருவன் இன்று என்னிடம் ஒருவன் தவறாக நடந்துகொள்ள பார்த்தான்.
நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். “,என்றாள் மாலா.
” அவனைப் பற்றி புகார் செய்ய வேண்டியதானே!. “,என்றான் சிறுவன்.
” புகார் கொடுக்கச் சென்றால் இவனைவிட பெரிய அயோக்கியனிடம் மாட்டிக்கொள்ள வேண்டியது வருமே என்ற பயத்தில் புகார் செய்யாமல் ஓடி வந்துவிட்டேன். இந்த பூமியில் பெண்ணாக பிறந்தது என் பாவம். “,என்று தன் தலையெழுத்தை நொந்து கொண்டாள் மாலா.
” பெண்களை தெய்வமாக வழிபடும் பூமியில் பிறந்த நீங்க கண் கலங்கலாமா?
கணக்கிலா ஆயுதங்களை கைகளில் ஏந்திய காளியின் வடிவான நீங்க கோபமாய் பார்த்தால் அந்த அயோக்கியன் பொசுங்கிட மாட்டானோ? “,என்றான் சிறுவன்.
” நீ எளிதாக சொல்லிவிட்டாய். பலவீனமான பெண்ணிற்கேது அவ்வளவு பலம்? “,என்று மாலா கூறிட,
கேட்டு சிரித்த சிறுவன், ” பலம், சக்தி என்பதெல்லாம் உடலைச் சார்ந்தது அல்ல. ஆண் பெண் இனத்திற்கேற்ப வேறுபட்டதல்ல.
அது மனம் சார்ந்தது.
மனம் மேற்கொள்ளும் தீர்க்கமான சங்கல்பத்தைச் சார்ந்தது. “,என்றான் சிறுவன்.
மாலா அமைதியாயிருக்க, மேலும் பேசிய சிறுவன், ” உங்களை பலவீனம் செய்வது உங்களுடைய பயமும், உங்கள் மேல் உங்களுக்குள்ள நம்பிக்கையின்மையும் தான்.
தைரியத்தை வளர்க்க வேண்டும்.
தன் உயிரையும் துச்சமாக எண்ணித் துணிய வேண்டும். “, என்ற அச்சிறுவன் தன் கையை நீட்டி விரல்களை ஒவ்வொன்றாக நீட்டினான்.
அவன் உள்ளங்கை ஒளிர்ந்தது.
மாலா தன் கையை அந்த உள்ளங்கைமேல் வைத்தாள்.
மறுகணம் தான் தன் படுக்கையில் இருப்பதை உணர்ந்தாள்.
அவளது அம்மா டீ கொண்டு வைத்துவிட்டு, ” Good Morning. Get ready to your office. “, என்று கூறிவிட்டு சென்றார்.
டீயை குடித்துவிட்டு ஆபிஸிற்குத் தயாரானாள்.
காலை சிற்றுண்டி முடித்து அலுவலகத்திற்கு நடந்து சென்றாள்.
அன்றைய தினம் அவள் புத்துயிர் பெற்றிருந்தாள்.
அவளிடம் வம்பு செய்தவன் மீண்டும் அவளை நெருங்கிய போது கண்களால் எரிப்பதாய் முறைத்தாள்.
வேகமாக அவன் கன்னங்களில் அறைந்து கீழே தள்ளினாள்.
” இனி எந்த பெண்ணிடமாவது வாலாட்டுவியா டா? “,என்றவாறு அக்கயவனின் அடிவயிற்றிலேயே எட்டி எட்டி உதைத்தாள்.
உதை தாங்காமல் கையெடுத்து கூம்பிட்டவன், எழுந்து ஓடிவிட்டான்.
இரவு வேலை முடித்துத் திரும்பியவள் அச்சிறுவனைத் தேடினாள்.
அவன் அவள் கண்களில் தென்படவே இல்லை.
” யாரந்த சிறுவன்? “,என்ற கேள்வி மட்டுமே அவள் மனதில் விடை காணப்படாமல் இருந்தது.
அசைக்க முடியாத தன்னம்பிக்கைக்கு சொந்தக்காரியாகி பல சாதனைகள் சாதித்தாள்.
பேரும் புகழும் கிடைத்தாலும் அவள் பெரியதாக நினைத்தவை நன்றியைக் கூட எதிர்பாராத அச்சிறுவனின் வார்த்தைகள்.
அவற்றையே அவள் உயர்ந்த பொக்கிஷமாக எண்ணினாள்.
தன் வாழ்க்கை முடிந்து உயிர் போகும் தருவாயில் அவளுடைய மனதில் இருந்த கேள்வி, ” யாரந்த சிறுவன்? “,என்பதே.
அன்புடன் மித்திரன்
நன்றி : எழுத்து.காம்