செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஒரு நாலு முழ வேட்டியும் தோளில் ஒரு சால்வையும் | கவிதை | பத்மநாபன் மகாலிங்கம்

ஒரு நாலு முழ வேட்டியும் தோளில் ஒரு சால்வையும் | கவிதை | பத்மநாபன் மகாலிங்கம்

1 minutes read

விருந்தினர்  வீடு போக
இடுப்பில் ஒரு நாலு முழம்
தோளில் ஒரு சால்வை
கையில் ஒரு பன் பை

பன் பையில் நாலு மாம்பழம்
வாழைப் பழம் ஒரு சீப்பு
தோடம் பழம் இரண்டு மூன்று
வெத்திலைச் சரை ஒன்று

பிரதான வீதியில் — தட்டி
வான் பயணம் . உள் வீதியிலே
துரித நடை செருப்பின்றி
சால்வை தலைப்பா ஆகும்

போய்ச்சேர இரவாகும்
வாசல் வந்து வரவேற்பு
கை கால் கழுவி விட்டு
மதிய உணவைப் பகிர்ந்துண்பர்

சாணியால் மெழுகிய தரை
பனை ஓலைப் பாய் விரித்து
தலையணையாய் மடித்த சாக்கு
சால்வை இப்போ போர்வை ஆகும்

பிரயாணக் களை போக
நிம்மதியாய் அயர்ந்த தூக்கம்
மடியில் கனமில்லை
கள்வர் பயமில்லை

சேவல் கூவ எழுந்து வந்து
விருந்தினரின் முத்தம்
செருக்கி அள்ளி
விறகும் கொத்தி வைப்பார்

சுள்ளென்று வெய்யில் அடிக்க
விரைந்து குளிக்கச் செல்வார்
சால்வையை இடுப்பில் கட்டி
நாலு முழம் தோய்த்து  உலர விட்டு

நாலு முழம் உலரும் வரை
நீர் அள்ளிக் குளித்திடுவார்
பின் நாலு முழம் உடுத்திச்
சால்வையைத் தோய்த்திடுவார்

சால்வையால் மேல் உணர்த்தி
மண் பானையில் நீர் நிரப்பி
விருந்தினர் வீடு செல்வார்
சால்வையைக் காய வைப்பார்

விருந்தினர் மனைவி
பழஞ்சோற்றில் மோர் விட்டுப்
பதமாகக் கலக்கிவிட
வட்டமாயிருந்து சிரட்டையில் குடித்திடுவார்

விருந்தினருக்கு இணையாக
வயல் வேலை செய்திடுவார்
மதியம் நல்ல சோறு கறி
உண்ட களை தீர சிறியதொரு உறக்கம்

மாலையும் வயல் வேலை
தன் வேலை போல் செய்வார்
இவ்வாறு அவர் அங்கு
பல வாரம் தங்கிடுவார்

அவரால் ஒரு சுமையும்
விருந்தினருக்கு இல்லை
ஒரு மாதம் நின்றாலும்
நாலு முழமும் சால்வையும் போதும்

அலங்கார உடையில்லை
ஆடம்பர வாழ்க்கையில்லை
சந்தோசமாய் விடை பெற்றுத்
தன் வீடு போய்ச் சேர்வார்

 

– பத்மநாபன் மகாலிங்கம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More