கவிதாவும் சங்கரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தைப்பூசத்திற்குச் சென்றனர்.
அங்கே முருகனுக்கு பூஜை செய்ய தேவையான பத்தி, சூடம், பூ மாலை, விபூதி, சந்தனம்,குங்குமம், பன்னீர் போன்ற பொருட்களையும் அபிஷேகத்திற்கு பாலையும் வாங்கிக் கொண்டு கோயிலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
கோயில் வாசலின் வெளியே சிலர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்கள்.
அதில் பெண் ஒருத்தி கிழிந்த சேலை, அழுக்கு மேனியுடன் கைக்குழந்தையை கையில் வைத்துக் கொண்டு,
“அம்மா ஏதாவது தர்மம் பண்ணுங்க அம்மா!
ஐயா சாமி! ஏதாவது கொடுத்துட்டு போங்க ஐயா!
குழந்தைக்கு பால் வாங்கணும்!
ஏதாவது தர்மம் பண்ணுங்க சாமி!”
என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.
அந்த பெண் அமர்ந்து இருந்த இடத்தில் இருவரும் செருப்பை கழற்றி விட்டு கண்டும் காணாமல் கோயில் உள்ளே சென்றார்கள்.
அந்த பெண்மணி மீண்டும் அவர்கள் வரும்போது ஏதாவது கொடுப்பார்களே என்று அவர்களுடைய செருப்பை பாதுகாத்தாள்.
வரிசையில் உள்ளே முருகன் சன்னதியை நோக்கி எல்லாரும் சென்று கொண்டிருந்தார்கள்.
“திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா”
“வள்ளி மணவாளனுக்கு அரோகரா”
“குன்றத்து குமரனுக்கு அரோகரா”
“செந்தில் வடிவேலனுக்கு அரோகரா”
“வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா”
என்று இருவரும் அரோகரா போட்டுக்கொண்டே சன்னதி அருகில் வரும்போது முருகனுக்கு பால் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.
பூஜை பொருட்களையும் பாலபிஷேகத்திற்கு கொண்டு வந்த பாலையும் 500 ரூபாய்க்கு அர்ச்சனை சீட்டையும் ஐயரிடம் கொடுத்தார்கள்.
ஐயரும் அந்தப் பொருட்களை பெற்றுக்கொண்டு அவர்கள் கொண்டு வந்த பாலை முருகனுக்கு அபிஷேகம் செய்தார்.
“ஐந்து வருடமாக தைப்பூசத்துக்கு உன்னை பார்க்க வாரோம் முருகா!
எனக்கு இந்த வருடமாவது குழந்தை வரம் கொடுக்கணும்!
உன்னையே நாங்கள் தஞ்சமென நம்பி வந்துருக்கோம் முருகா!
நீ தான் எங்களுக்கு துணை!”
என்று கவிதாவும் சங்கரும் வேண்டிக் கொண்டார்கள்.
பிரசாதத்தை கையில் வாங்கிக் கொண்டு இருவரும் வெளியே வந்து சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து தேங்காய் மற்றும் வாழைப்பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
நாய் ஒன்று பக்கத்தில் வந்து நின்றது. தேங்காய் ஓடை வைத்து அந்த நாயை சங்கர் எரிந்தான். அது ஓடிவிட்டது. கவிதாவிற்கு ஒரே சிரிப்பு.
பின்னர் செருப்பு இருக்கும் இடத்திற்குச் சென்று செருப்பை அணிந்து கொண்டு செல்லத் தயாரானார்கள்.
மீண்டும் அந்த பெண் யாசகம் கேட்டாள்.
“ஐயா சாமி! ஏதாவது கொடுத்துட்டு போங்க ஐயா! குழந்தைக்கு பால் வாங்கணும் ஏதாவது தர்மம் பண்ணுங்க சாமி!”
இருவரும் அதை காதில்கூட வாங்கவில்லை!
“இவங்களுக்கு வேற வேலையே இல்ல! இதே பொழப்புதான்!” என்று இருவரும் முணுமுணுத்துக் கொண்டே காரில் ஏறிச் சென்றார்கள்.
மனிதர்கள் வாழும் இந்த பூமியில் ஏதோ ஒரு மூலையில் குழந்தை பாலுக்காக அழுது கொண்டிருக்கின்ற வரை, நீங்கள் செய்யும் பாலபிஷேகம் இறைவனைச் சென்று சேராது! என்பதுதான் நிதர்சனமான உண்மை!
– பெ.சிவக்குமார்
நன்றி : சிறுகதைகள்.காம்