விழிகளில் தீயையும் கனல் நீரையும்
சுமந்த சனங்களிடையே
உன்னை கண்டேன்
கறுப்பு தலைப்பட்டியாலும்
மறைக்க இயலாது
நெற்றியில் ஒரு தழும்பு
கேசங்களில் அலைச்சலின் பாடல்
போர் ஊழியில் திருகப்பட்ட குடும்பத்தின்
நீதிக்காய் நெஞ்சுருக
குரலிட்ட தருணத்தில்
எனக்கொரு புன்னகையை தந்தாய்
தீரா இழப்பை தணிக்க முற்பட்ட
உன் மௌனமும்
ஓரிரு வார்த்தைகளும்
நினைவேந்தல் பாடல்களில் கலந்துபோயின
மாய்க்கப்பட்டவர்களின் சிதை நிலத்தில்
பூக்களையும்
தின் பண்டங்களையும் விட்டுவந்த வேளையில்
கனத்தவென் இதயத்தையும்
கறுப்புச் சட்டையுடன்
நீ ஏற்றிய
விளக்கருகே வைத்துத் திரும்பினேன்
தகிக்கும் வெண்மணலில்
சூரியன் உறிஞ்சிய நெய்ப்பந்தமாய்
உருகிக்கிடந்தேன்
தீராத் தாகம் ததும்ப
வாழ்வின் பேரவா
உன் கண்களில்
நதியென ஊற்றெடுக்கக் கண்டேன்
இவ் ஆண்டு நினைவேந்தல் நாளில்
இரு மலர் கொத்துக்களுடன் வருவேன்
ஒன்று
கொல்லப்பட்டவர்களை
நினைவுகூர
மற்றையது
உன் கரங்களில் தந்துவிட.
தீபச்செல்வன்
நன்றி – ஆனந்த விகடன்
15