செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் எழுத்தூழியம் | எழுத்தாளர் தாமரைச் செல்வி

ஐங்கரன் விக்கினேஸ்வராவின் எழுத்தூழியம் | எழுத்தாளர் தாமரைச் செல்வி

4 minutes read

சமகால வாழ்வின் தரிசனங்கள்.. இன்றைய காலத்தின் வெட்டுமுகம்..

அரசியல் என்பது படித்தவர் முதல் பாமரர் வரை அனைவர் வாழ்விலும் ஊடுருவி நிற்பது. அதன் விளைவுகள் மனிதர் வாழ்வை அசைத்துப் பார்க்கும் சக்தி கொண்டவை.

சமுதாயத்துக்கான ஒரு படைப்பாளி :

அவற்றை எழுத்தில் கொண்டு வருவது என்பது இச்சமுதாயத்துக்கு ஒரு படைப்பாளி செய்யும் மகத்தான பணியாகும். இவற்றை ஆவணப் படுத்துவதும் காலத்தின் தேவையாகும்.

சமகாலத்தில் நடப்பவைகளின் பதிவுகள் எதிர்காலச் சந்ததியினருக்கு பெறுமதி வாய்ந்த ஆவணங்களாக கை மாற்றப்படுகிறது. அது சிறுகதை , நாவல், கவிதை, கட்டுரை என்று எந்த வடிவமாகவும் இருக்கலாம். கட்டுரை என்றாலும் அதற்கும் ஒரு இலக்கிய வடிவம் உண்டு.

திரு ஐங்கரன் அவர்கள் ஒரு சமுதாயப் பணியை அமைதியான முறையில் பொறுப்போடு செய்து வருகிறார். காலையில் வரும் பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றில் ஐங்கரனின் கட்டுரைகள் பிரசுரமாகி இருக்கும். இப்படி தொடர்ச்சியாக எழுத எப்படி இவருக்கு நேரம் கிடைக்கிறது என்று யோசிக்கத் தோன்றும்.

சமூக நேசிப்பும் அயராத முயற்சியும்:

திரு ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் மூன்று நூல்கள் சமீபத்தில் வெளியாகியிருக்கின்றன. “ இலங்கை இதழியலில் சிவகுருநாதன்”, “ பாலஸ்தீனம் எரியும் தேசம்”, “ ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்” ஆகிய நூல்களே அவை. அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களிலும் இந்நூல்கள் அறிமுகம் செய்து வைக்கப் பட்டிருக்கின்றன. இந்நூல்களின் பேசு பொருள் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன.

இலங்கை இதழியல் துறையில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருந்தவர் திரு. சிவகுருநாதன் அவர்கள். அவரைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள “ இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூல் நமக்கு உதவுகிறது. ஒரு நாட்டின் தேசியப் பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் சுமார் நாற்பது வருட காலம் பணியாற்றியமை என்பது சாதனைக்குரியது. இலங்கை தமிழ் இலக்கியத்தின் உருவாக்கத்திலும் , வளர்ச்சியிலும் தினகரன் மூலம் பெரும் பங்காற்றியவர் இவர். அவருக்கான கௌரவத்தை ஐங்கரனின் இத்தொகுப்பு வழங்கியிருக்கிறது எனலாம்.

மற்ற இரு நூல்களும் அரசியல் சார்ந்தவை. எம்மோடும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவை. பல்லாயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தேசங்களில் நடைபெறும் நிகழ்வுகள் நாம் ஈழத்தில் அனுபவித்த துயரங்களையும் தொட்டுச் செல்வதை வலியோடு எம்மால் உணர முடிகிறது.

அவருக்குள் இருக்கும் சமூக நேசிப்பும் அதனது எழுத்து இந்த சமூகத்துக்கான பதிவாக இருக்க வேண்டும் என்ற உந்துதலும்தான் அவரது அயராத முயற்சிக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்ற புரிதலும் எமக்கு ஏற்படுகிறது.

தொடர்ச்சியான இவரது எழுத்துக்கு இவரது மாணவப் பருவத்திலேயே பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது. சிறு வயதிலிருந்தே தனக்குள் இருக்கும் எழுத்துத் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

சிறுவர் இலக்கிய ஆய்வாளர் :

1990 ம் ஆண்டு இவருக்கு எத்தனை வயது இருக்கும்? அந்த வயதிலேயே சிறுவர் இலக்கியம் பற்றிய நாற்பது தொடர் கட்டுரைகளை தினகரன் பத்திரிகையில் எழுதியிருக்கிறார். இளம் வயதிலேயே சிறுவர் பத்திரிகைகள், இலக்கிய நூல்கள், ஈழத்து சிறுவர் இலக்கியம் பற்றிய ஆய்வையும் மேற் கொண்டவர்.

இதுவரை இவர் பன்னிரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். அணையாத அறிவாலயம், விடியலின் கானம், இன்னும் இருட்டினில், உறக்கம் தேடும் உலகிற்காய், வெண்பனிச் சுவடுகள், காற்றோடு பேசுதல், அக்கினிப் பிரவேசம், உள்மன யாத்திரை போன்ற புதுக் கவிதைத் தொகுதிகளையும் உனக்குள்ளேயே உள்ளிருப்பு, இழப்புக்களை இழப்போம், கல்லறைக்குள் கதிரவன் ஆகிய ஹைக்கூ கவிதைத் தொகுதிகளையும் படைத்துள்ளார். இவரின் நூல்களின் தலைப்புக்களே வித்தியாசமானவையாகவும் நயம் மிகுந்தவையாகவும் இருப்பதைக் காணலாம்.

இவை தவிர அடுத்தவர்கள் பற்றிய தொகுப்புக்களையும் முன்நின்று வெளியீடு செய்திருக்கிறார். வடமராட்சி ஒபரேஷன் லிபரேஷன் படுகொலைகள் எம் மண்ணின் வரலாற்றில் பதியப் பட்ட துயர வரலாறு. உலகையே அதிர வைத்த படுகொலைகளின் களம் அது. அக்கொலைகளை நினைவு கூரும் வகையில் எட்டு இளம் கவிஞர்களின் “கல்லறை மேலான காற்று “ எனும் கவிதைத் தொகுதியினை 1988 ம் ஆண்டு தொகுத்தளித்தவரும் இவரே. அது தவிர ஈழப்போரின் வலியைச் சுமந்த அகிலன் திருச்செல்வத்தின் கவிதைகள் நூலைத் தொகுத்தவரும் இவரே. அகிலனின் முதலாவது ஆண்டு நினைவாக 1990 அல்ல ‘மரணம் வாழ்வின் முடிவல்ல’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்தது.

சர்வதேச அரசியல் ஆய்வுகள்:

ஈழத்துப் பிரச்சனைகளை மட்டும் பேசாமல் சர்வதேச அரசியல் ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதி வருவது இவரது பரந்த பார்வையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. ஐங்கரன் எனும் பெயரில் மட்டுமின்றி சார்ள்ஸ், நவீனன் எனும் புனைபெயர்களிலும் எழுதும் இவரது எழுத்துக்கள் பலராலும் விரும்பி வாசிக்கப்படுகிறது.

ஈழ விடுதலை பற்றியும் அதன் அரசியல் பற்றியும் ஆழமான புரிதல் உள்ள இவர் உலக அரசியலையும் புரிந்து கொண்டு அவற்றை எழுத்தில் தருவது இவரது திறமைக்கு ஒரு சான்றாகிறது.

எத்தனையோ வல்லரசு நாடுகளின் பிரச்சனைகளை மட்டுமன்றி உலக வரைபடத்தில் சிறு புள்ளிகளாகத் தோற்றம் தரும் மிகச் சிறிய நாடுகளின் பிரச்சனைகளையும் இவர் தன் எழுத்துக்களில் முன் நிறுத்துகிறார். எமக்கு அறிமுகமற்ற அந்த நாடுகளின் நிலைமைகளை இவரது கட்டுரைகள் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்தக் கட்டுரைகளை எழுதும் முன் அந்தந்த நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள இவர் எவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும். எவ்ளவு நேரத்தைச் செலவழிக்க வேண்டும். அந்த தேடலே இவரது எழுத்துக்களை உண்மைத் தன்மைக்கு மிக நெருக்கமாக மாற்றுகிறது.

எளிமையான மொழிநடை இவருக்கு கை வந்திருக்கிறது. கனதியான விஷயங்களை எல்லாம் மிக இலகுவாக யாவரும் புரிந்து கொள்ளும்படி எழுத இவரால் முடிகிறது. ஈழத்துக் கவிஞன் தீபச்செல்வன் ஐங்கரனைப் பற்றி ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.

“ உலக அரசியலின் முகங்களை, ஆயுத அரசியலின் அர்த்தங்களை, ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை , சமகால உலக அரசியலில் பொதிந்துள்ள தந்திரங்களின் முகங்களை என இவர் அதனது எழுத்துக்களின் வழியாக தரும் செய்திகள் மிகவும் அதிர்வு தரக்கூடியன. “

உண்மைதான். அரசியலின் சூழ்ச்சி எல்லா தேசங்களிலும் நடந்திருக்கிறது. எல்லா மக்களையும் துயர் கொள்ள வைத்திருக்கிறது. ஈழ மண்ணிலும் நடந்திருக்கிறது. அவைகளை இவரது எழுத்துக்களில் பார்க்கும் போது அனுபவித்த வலி புதுப்பிக்கப் படுகிறது. இதுவே இவரது எழுத்தின் பலம் எனலாம்.

சமகால நிகழ்வுகளை எழுத்துக்களாக பதிவு செய்வதாகட்டும் இந்த சமூகத்துக்கு தன்னாலான மனிதாபிமான சேவைகளைச் செய்வதாகட்டும் தன்னை ஒரு சமூக நேசிப்பாளராக அடையாளம் காட்டும் ஐங்கரன் பல பேருக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சமகால வாழ்வின் தரிசனங்கள்:

இவரை அசுரவேக எழுத்தாளர் என்று குறிப்பிடுவதிலும் தவறு ஏதும் இல்லை. யந்திரமயமான இன்றைய வாழ்வுக்குள் நேரத்தை தேடி எடுப்பது என்பது எத்தனை சிரமம். அப்படி எடுக்கும் நேரத்துக்குள் இப்படி தொடர்ச்சியாக எழுதுவதற்கு எவ்வளவு உழைப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். அதை மிகுந்த விருப்போடு செய்யவும் எத்தனை ஆர்வம் இருக்க வேண்டும். இவருக்குள் இருக்கும் ஆர்வமே இவரை தொடர்ச்சியாக எழுத வைக்கிறது. சமூகத்துக்கான இவரது முன்னெடுப்பு பாராட்டுதற்குரியது.

அவரது எழுத்துக்கள் இன்றைய காலத்தின் வெட்டுமுகம். இன்றைய வாழ்வின் ஆவணங்கள். எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கப் போகின்ற சமகால வாழ்வின் தரிசனங்கள். இவரது எழுத்து எம் சமூகத்திற்கானது. அதை அவர் தொடர்ந்தும் செய்ய வேண்டும்.

எழுத்தாளர் தாமரைச் செல்வி

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More