செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் முருகனைச் சிங்களவர் கைப்பற்றிய வரலாறு கதிர்காமத் திருமுருகன் | தமிழகத்தில் வெளியீடு

முருகனைச் சிங்களவர் கைப்பற்றிய வரலாறு கதிர்காமத் திருமுருகன் | தமிழகத்தில் வெளியீடு

2 minutes read

கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளையின், மலையகம் 200 சிறப்பு வெளியீடாக, பதுளை வ. ஞானபண்டிதன் அவர்கள் எழுதிய “கதிர்காமத் திருமுருகன்” எனும் ஆய்வு நூல் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்களால் எட்டாவது பதிப்பான செம்பதிப்பாக உருவாகியுள்ளது. ஞானபண்டிதனின் ‘கதிர்காமத் திருமுருகன்’ நூலை மறுபதிப்புச் செய்யும் முயற்சியில், இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான அறிஞர் திரு. மு.நித்தியானந்தன் (லண்டன்) எடுத்த தீர்க்கதரிசனமான முயற்சி வெற்றியளித்துள்ளது.தமிழக அரசால் பழனியில் நடாத்தப்படவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இச்செம்பதிப்பு நூல் வெளியிடப்படுகிறது.

பதுளை வ. ஞானபண்டிதன் அவர்கள் பதுளை சமத்துவ சங்கத் தலைவராகப் பணியாற்றியவர். சாதிய அடக்குமுறைக்கு எதிரான பிரசாரகராகவும் செயற்பாட்டாளராகவும் மலையகத்தில் இயங்கியவர். சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உன்னத கருத்தோட்டங்களை மலையக மக்கள் மத்தியில் ஊன்றச் செய்தவர். கதிர்காமத்தின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர். பதுளையில் கதிர்காமத் தொண்டர் படையை உருவாக்கியவர். அவர் தமது நீண்டகால ஆராய்ச்சியின் பயனால் ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற இந்த அரிய நூலை எழுதியவர்.

இந்நூல் பற்றி, கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் குறிப்பிடும்போது,
“அமரர் வ. ஞானபண்டிதன் அவர்கள் எழுதிய இந்நூல் கதிர்காமத் தலத்தின் கடந்த காலத்தையும் சமகாலத்தையும் படம்பிடித்துக் காட்டுவது. பலரும் ஆராய்ந்து அறியத் தயங்கும் சட்ட மூலங்களில் கைவைத்து ஆராய்ந்து வெளிப்படுத்துவது. தலத்தின் தொன்மை வரலாறு, காலனிய கால நிலவரம் அவர் எழுதிய காலச்சூழல் போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது. முருகனைச் சிங்களவர்கள் கைப்பற்றிய வரலாற்றைக் கூறுவது. எல்லாவற்றுக்கும் மேலாக, கதிர்காமத் தலத்தைத் தமிழர் பதியே என்று துணிந்து நிறுவுவது. ‘மலையகம் 200’ காணும் இக்காலத்தில், செம்பதிப்பாய் வெளிவருவது வரவேற்பிற்குரியது” என்று கூறுகிறார்.

மலையக சமுதாயத்தின், இலக்கியத்தின், நூல் வெளியீட்டின், ஆத்மீகத்தின் மையமாகத் திகழும் எச்.எச்.விக்கிரமசிங்க அவர்கள் இந்த ஆண்டில் பவளவிழாக் காண்கிறார். கலை ஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளையின் சார்பில் அவர் வெளியிட்டிருக்கும் நூல்கள் தமிழ் உலகில் தனி முத்திரை பதித்தவை.

2024 ஆம் ஆண்டில் பழநியில் நிகழும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டும் ,தனது பவளவிழாக் கருதியும் விக்கிரமசிங்க அவர்கள் ‘கதிர்காமத் திருமுருகன்’ என்ற நூலை அன்பளிப்பாகத் தமிழ் உலகுக்கு வழங்குகிறார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More