ஒரு மதியவேளைத் தளம்பலுடன்
நினைவு
தன் சேமிப்பை
கொஞ்சம் கொஞ்சமாக
நிறுத்திக் கொள்கிறது
படுக்கையிலிருந்து கதிரைக்கும்
கதிரையிலிருந்து படுக்கைக்கும்
உடல் பழகிக் கொள்கிறது
வருடங்களை எதிர்கொண்டு
விண்ணோடம் பறக்கிறது
இங்கு
நினைவுகள் பின்தள்ளப்படுகின்றன
கோயில் மணியோசை
காலையை எழுப்புகிறது
அணிஞ்சில் உதித்துவிட்ட
மென்பூக்கள் சிதறியிருக்கின்றன
கூட்டிலிருந்து விடுபட்ட கோழிகள்
கரகரத்தபடி
மேய்ச்சலுக்குச் செல்கின்றன
இது மிக நல்ல சூழல்
தடுமாற்றமில்லாது
வார்த்தைகள் தெறிக்கின்றன
கடந்து கொண்டிருக்கும்
வாழ்வின் வலியையும்
போலி முகமனிதரையும்
வேறுபடுத்தமுடியாத
வெள்ளந்திச் சிரிப்போடு
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஒரு முதிய குழந்தை.
ஏதோ ஒன்று
மனசைப்
பிசைந்து கொண்டிருக்கிறது.
துவாரகன்
092024