நான் மாற்றலாகிப் போனது ஒரு நகரமும் இல்லாத கிராமமும் இல்லாத இரண்டும் கெட்டான் ஊர். நான் கணித பாடத்தைக் கற்பிக்க மனைவி சமூகக்கல்வி பாடத்தைக் கற்பிப்பதால் இரண்டு பேருக்குமே ஒரே பாடசாலைக்கு மாற்றம் கிடைப்பது வழக்கம். எங்கள் மூத்த மகன் ரமணனை ஆறாம் வகுப்பிலும் மகள் கோதையை நான்காம் வகுப்பிலும் அதே பாடசாலையில் சேர்த்திருந்தோம். பிள்ளைகள் கண் பார்வையில் இருப்பது தான் இந்தக் காலத்தில் பாதுகாப்பு. பாடசாலைக்கு அண்மையில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம்.
பக்கத்து வீட்டிலிருந்த கமலம் அக்கா என் மனைவிக்கு பெரும் உதவி. சந்தையில் மரக்கறிகள் வாங்கி வந்து கொடுப்பா. சனி, ஞாயிறு நான் சந்தைக்குப் போய் மீனோ கோழி இறைச்சியோ வாங்கி வருவேன். சில நேரங்களில் ரமணனும் ஓடி வந்து சைக்கிள் கரியரில் ஏறிக் கொள்வான். சூழலை அறிந்து வைத்திருப்பது நல்லது தானே என்று நானும் ஏற்றிச் செல்வேன்.
என் மனைவி நாங்கள் மாற்றலாகிச் செல்லும் இடங்களில் எல்லாம் ஊர்ப்பெண்களையும் மாணவர்களின் தாய்மாரையும் சிநேகம் பிடித்து விடுவா. அந்த வகையில் பழக்கமானவ தான் றோசலின். றோசலினின் நடை உடை பாவனைகள் நன்கு படித்த பெண்ணாக எங்களுக்கு அடையாளம் காட்டின. அவரின் கணவர் சத்தியன் ஒரு கூலித்தொழிலாளி. அவர் எளிமையான தோற்றம் கொண்டவர். அதிகம் படிக்காதவராகத் தோன்றினார்.
ஒரு நாள் றோசலின் என் மனைவியிடம் கதைத்து விட்டுப் போவதை அவதானித்த அடுத்த வீட்டுக் கமலம் அக்கா அவசரமாக வந்து, “ரீச்சர், அவவுடன் அதிகம் கதை பேச்சு வைக்க வேண்டாம், அவ ஓடி வந்தவ. வரும் போது முந்தின புரிசனுக்குப் பிறந்த மூன்று வயதுப் பொடியனையும் கொண்டு வந்தவ.” என்றா. ஒரு நாளும் கோபம் வராத எனது மனைவிக்குச் சுள்ளென்று கோபம் வந்தது. றோசலினின் கணவர் சத்தியன் கமலம் அக்கா வீட்டில் வேலை செய்வதை நாங்கள் பல முறை அவதானித்திருக்கிறோம்.
என் மனைவி, “கமலம் அக்கா, அவவை ஓடி வந்தவ என்று சொல்லுற நீங்கள் ஏன் சத்தியனைக் கூட்டி வந்தவன் என்றோ அல்லது இழுத்து வந்தவன் என்றோ சொல்லக்கூடாது? பிழை நடந்திருந்தால் இரண்டு பேரும் தானே பொறுப்பு.”
ரீச்சர் முகத்துக்கு நேரே கேட்பா என்று கமலம் அக்கா எதிர்பார்க்கவில்லை.
“இல்லை ரீச்சர் என்ன பிரச்சினை எண்டாலும் பொம்பிளை வீட்டை விட்டு ஓடி வாறதோ?” என்றா. “அக்கா என்ன நடந்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது. தெரியாமல் நாங்கள் கதைக்கக் கூடாது. ஒரு பதின்ம வயதுப் பெண் ஓடி வந்தால் சில வேளை அறியாத வயசு மோகம் (Infatuation) என்று நினைக்கலாம். வாழ்ந்து ஒரு குழந்தையையும் பெத்த பெண் என்ன கஷ்டத்தில் வேறு வழியின்றி ஓடி வந்தாவோ யாருக்குத் தெரியும்?“ என்று ரீச்சர் சாந்தமாகவே சொன்னா. உள்ளே இருந்து கேட்ட எனக்கு என்னை அறியாமலே உதட்டில் புன்னகை தோன்றியது.
இந்தச் சம்பவத்தின் பின் றோசலின் இரண்டு மூன்று நாட்கள் வரவில்லை. கமலம் அக்கா வந்து கதைத்ததை றோசலின் கண்டு விட்டாவோ என்று என் மனைவி அந்தரப்பட்டா. நான்காம் நாள் றோசலின் கொஞ்சம் சோர்ந்து போய் வந்தா. அவவே என் மனைவியிடம் கதைக்கத் தொடங்கினா.
“ரீச்சர் என்ரை அப்பா ஒரு முதலாளி. எனக்கு இரண்டு அண்ணன்மாரும் ஒரு தங்கச்சியும் இருக்கினம். அண்ணன்மார் இரண்டு பேரும் அப்பாவை மாதிரி பெரிய முதலாளிகள். நானும் தங்கச்சியும் இங்கிலிஸ் மீடியத்திலை (English medium) படிச்சம். அப்பா மாறி அண்ணன்மார் மாறி எங்களைக் காரில் தான் ஸ்கூலுக்கு கூட்டிப் போவாங்க. நான் பஸ்ஸிலை ஒருநாளும் ஏறினதில்லை. எஸ். எஸ். சி பாஸ் பண்ணினதும் அப்பா தன்ரை சிநேகிதரின் மகனுக்கு என்னை மறிபண்ணிக் குடுத்தார். எனக்கு அவரை முதலே தெரியும். சரியாய் டிறிங் பாவிப்பார். வெறியிலை எல்லாரோடையும் சண்டை பிடிப்பார். நான் அவர் வேண்டாம் எண்டு அழுதன். அப்பா அம்மா கேக்கேல்லை “அவர் மறிபண்ணின பிறகு திருந்தி விடுவார்“ என்று சொல்லி சேர்ச்சிலை (Church ) கிறாண்டாய் மறிபண்ணி வைச்சினம். அவரைக் குடும்ப நண்பரின் மகன் எண்டு பார்த்தினம். நல்ல மனிசனா எண்டு பார்க்கேல்லை.
மறிபண்ணின பிறகும் அவர் திருந்தேல்லை. ஒவ்வொரு நாளும் கடையால் வரேக்கை சிநேகிதர்களோடை நல்லாய் குடிச்சிட்டு வருவார். அது சரியில்லை இது சரியில்லை எண்டு என்னை
அடிப்பார். தாங்கேலாமல் அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன். இரண்டு நாள் பார்த்திட்டுக் குடிக்காமல் வருவார். “அன்ரி உங்கடை மகள் சரியான வாயாடி, சில நேரம் பொறுக்கேலாமல் இரண்டு சின்னத் தட்டு தட்டுறனான் தான். அதுக்கு கோபித்துக் கொண்டு இஞ்சை வந்து இருக்கிறாள்.“ எண்டு சமாளிப்பார். அம்மா நம்பி விடுவா. “களைச்சு வாற புரிசனுடன் அனுசரணையாக நட, வாய் காட்டாதை“ எண்டு எனக்குப் புத்திமதி சொல்லி அனுப்பி விடுவா. வீட்டிற்குப் போனதும் “உன்ரை வீட்டை சொன்னால் எனக்கு என்ன பயமோ?“ எண்டு இரண்டு மடங்கு அடிப்பார். அடியைத் தாங்கிக் கொண்டு வீட்டில் அடைஞ்சு கிடப்பேன். ஏலாமல் போனால் அம்மா வீட்டிற்குப் போய் விடுவேன். அப்பா அம்மாவிற்கு மறிபண்ணிக் குடுத்த பெண் புருசனை அனுசரிச்சுப் போகாமல் நெடுக ஓடி வாறாளே எண்டு என்னில் தான் கோபம்.
இந்த நரகத்திலை இருந்து எப்படித் தப்பிப்பது எண்டு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நான் கர்ப்பமானேன். கர்ப்பமானதால் அடி உதை கொஞ்சம் குறைஞ்சுது. இனித் திருந்திவிடுவார் எண்டு நினைச்சேன். குழந்தை பெற அம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். அவை மிக இனிமையான நாட்கள். பிள்ளை வந்து என் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வரப்போகுது எண்டு நம்பியிருந்தேன். ஆண் குழந்தை பிறந்தது. எல்லோருக்கும் நல்ல சந்தோசம். குழந்தை பிறந்து மூன்று மாதங்களின் பின் கணவர் வந்து எங்கள் வீட்டிற்குக் கூட்டிச் சென்றார். மகனுக்கு ஞானஸ்தானம் பெயர் சூட்டல் என்று சில காலம் மிகவும் சந்தோசமாகக் கழிந்தது. பிறகு பழைய குருடி கதவைத் திறவடி எண்ட கதை தான். இப்ப இன்னொரு குற்றச் சாட்டும் புதிதாக வந்தது. நான் அம்மா வீட்டில் இருந்த போது கணவர் வரும் வேளைகளில் என் தங்கை தேநீர் குடுத்து உபசரித்திரிருக்கிறாள். அவள் என்னை விட உயரமும் நல்ல நிறமும் உடையவள். உண்மையிலேயே அழகி தான். என் கணவரின் கண்கள் அவள் மேல் விழுந்திருக்கிறது. “உன்ரை அப்பா அம்மா அப்படி ஒரு அழகான பெண்ணை வைச்சுக் கொண்டு குரங்கு மூஞ்சி உன்னை எனக்குக் கட்டியடிச்சிருக்கினம்.” எண்டு சொல்லி அடிக்கத் தொடங்கினார்.
இப்ப கைக்குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு ஓடத் தொடங்கினேன். அவர்களோ என்னிலேயே குற்றம் சொன்னார்கள். எப்படி இரண்டரை வருசம் தாக்குப் பிடித்தேனோ தெரியாது. கடைசியாக என்னை அடித்தது மட்டுமல்லாது சிகரெட்டால் முதுகு நெஞ்சு எல்லாம் சுட்டார். அப்படிச் சுடும் போது எனது பிள்ளையின் முதுகிலும் சுட்டுவிட அவன் கதறி அழுதான். “யாருக்கெடி பெத்தாய் இந்தக் குரங்கை“ எண்டு பெத்தவனே பேச எனது இதயத்திலிருந்து ஏதோ கழண்டு விழுந்தது போலிருந்தது . பதறிக் கொண்டு அம்மா வீட்டிற்குச் சென்றேன்.
சிகரெட்டால் சுட்ட காயத்தை அம்மாவிடம் காட்டினால் உடைந்து விடுவா எண்டு பயந்து தங்கையை தனி அறைக்கு அழைத்துச் சென்று காட்டினேன்.
“ஐயோ இப்படியில்லாம் அத்தான் செய்வாரா? நம்ப முடியாமலிருக்கு“ எண்டவள் “அக்கா இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள். அத்தானின் ஒன்றுவிட்ட தம்பியாரைத் தான் எனக்குப் பேசி வைச்சிருக்கு எண்டு உனக்குத் தெரியும் தானே? இப்ப நீ பிரச்சினை எழுப்பினால் என்ரை கலியாணம் குழம்பிப் போகும்“ எண்டாள்.
உயிராகப் பழகிய தங்கை இவ்வளவு சுயநலமாக இருக்கிறாளே எண்டு நினைத்த போது இதயம் நொருங்கிப் போனது. இந்த உலகத்தில் எல்லாருமே சுயநலவாதிகள் தான் என்பது என் மண்டையில் உறைத்தது. ஒன்றும் பேசாமல் எனது வீட்டிற்குத் திரும்பினேன். இனி வாழுறதிலை அர்த்தம் இல்லை எண்ட முடிவிற்கு வந்தேன். தங்கையின் திருமணத்தில் எனது கவலையைக் காட்டாமல் பங்கு பற்றினேன். ஒரு நாள் கணவனின் அடி தாங்கேலாமல் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு வீதிக்கு ஓடின நான் தூர ஒரு லொறி வேகமாக வருவதைக் கண்டு அது கிட்ட வர ஓடிப்போய் விழப்பார்த்தேன். அப்போது இரண்டு வலிய கைகள் என்னைப் பிடித்து இழுத்து லொறியில் விழாமல் காப்பாற்றின. யாரென்று திரும்பிப் பார்த்தேன் சத்தியன், அவனை எனக்குப் பழக்கமில்லை. அயலில் உள்ள வீடுகளில் கூலி வேலை செய்வதை அப்பப்போ கண்டிருக்கிறேன். அவன் “அம்மா, ஆண்டவன் தந்த உயிரை எடுப்பது பாவம்.” என்றான். எனக்கு அவன் மீது கோபம் கோபமாய் வந்தது “உனக்கென்ன தெரியும், நான் படுற பாடு.”
“அம்மா இப்ப நீங்கள் கோபமாய் இருக்கிறீங்கள். வீட்டை போய் ஆறுதலாய் யோசித்துப் பாருங்கோ.“ என்று சொல்லி நாங்கள் வீட்டினுள் நுழைவதைப் பார்த்து விட்டுப் போய் விட்டான்.
பிறகு அவன் அடிக்கடி என்ரை கண்ணில் பட்டான். நாளடைவில் நான் என்ரை கஷ்டங்களை எல்லாம் அவனுக்குச் சொல்லலானேன். ஒரு நாள் திடீரென்று அவன் கேட்டான் “உங்களுக்குச் சம்மதமெண்டால் நீங்கள் பிள்ளையுடன் என்னோடை வாருங்கள். நான் அவரை நல்ல வடிவாய்ப் பார்ப்பேன்“ என்றான். திகைத்துப் போன நான் “நான் கொஞ்சம் யோசிக்க வேணும்.“ என்று சொல்லி விட்டு வீட்டிற்குப் போனேன். இரண்டு மூன்று நாள் நல்லாய் யோசித்தேன். “நான் என்ன குற்றம் செய்தேன்? எனக்கு ஏன் இந்தத் தண்டனை? என்ரை பிள்ளை என்ன பாவம் செய்தான்? சத்தியன் கூலிக்காரன் தான். படிக்காதவன், படிச்ச என்ரை புரிசன் மட்டும் என்ன திறமே? நாங்கள் ஏன் சாக வேணும்? சத்தியனோடை போனால் என்ன?
சத்தியனிடம் என்ரை சம்மதத்தைச் சொன்னேன். அவன் இரண்டு நாள் பொறுங்கோ அம்மா.” என்றவன் மூன்றாம் நாள் எனக்கு மலிவான இரண்டு சேலை சட்டைகளும் மகனுக்கு இரண்டு கால்சட்டை சேர்ட்டும் கொண்டு வந்து தந்தான். ஒரு சோடி மலிவான தோடுகளையும் தந்தான். அம்மா நீங்கள் உங்கடை நகையை எல்லாம் கொண்டு போய், ஊருக்கை களவாய்க் கிடக்கு கொஞ்ச நாளைக்கு இஞ்சை கிடக்கட்டும் எண்டு அம்மாட்டைக் குடுங்க. கவலையை முகத்திலை காட்டாதீங்க. நாளை இரவு அவர் படுத்தாப் பிறகு இந்த உடுப்பில் ஒரு சோடியைப் போட்டுக் கொண்டு பிள்ளையோடை வெளியிலை வாருங்க. நான் பாதுகாப்பான இடத்திற்குக் கூட்டிக் கொண்டு போறன்.“ என்றான்.
நான் எல்லா நகைகளையும் எடுத்துக் கொண்டு அம்மா வீட்டிற்குப் போனேன். அம்மா இவர் கடையாலை இரவு பத்துப் பதினொரு மணிக்குத் தான் வாறார். எங்கடை வீட்டிலை வைக்கப் பயமாயிருக்கு. கொஞ்ச நாளைக்கு இஞ்சை கிடக்கட்டும்.“ எண்டு கொடுத்தேன். அம்மாவும் சரி தான் என வாங்கி வைச்சா. அன்றிரவு இவர் நல்ல வெறியில் வந்தார். உடனேயே படுத்து நித்திரையானார். நான் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு சத்தியன் தந்த சேலையைக் கட்டிப் பிள்ளைக்கும் உடுப்பை மாத்தி, மற்ற செற் உடுப்பை ஒரு பையில் எடுத்துக் கொண்டு, சத்தியனின் தோட்டைப் போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்.
வாசலில் காத்திருந்த சத்தியன் “சத்தம் போடாமல் வாங்கோ அம்மா“ எண்டவன் எங்களைக் குறுக்கு றோட்டு வழிய கூட்டிக் கொண்டு போய், இரண்டு பஸ் மாறி ஏறி றாகமைக்குப் போனான் . இரவு வரைக்கும் அவனுக்குத் தெரிந்த வீட்டில் நின்று விட்டு ஸ்ரேசனுக்குப் போய் யாழ்ப்பாண மெயில் றெயினில் மன்னார் பெட்டியில் இருந்து கொண்டோம். மன்னாருக்குப் போகாமல் இடையில் முருங்கனில் இறங்கினோம். அங்கிருந்து பஸ் ஏறித் தள்ளாடியில் இறங்கினோம். என்ரை அப்பான்ரையும் அண்ணன் மாரின்ரையும் செல்வாக்கை சத்தியன் அறிந்து வைத்திருந்தான். இவ்வளவிற்கும் அவர்கள் பெரிய நகரங்களிலை இருக்கிற பொலிஸ் ஸ்ரேசனுக்கெல்லாம் தகவல் கொடுத்திருப்பார்கள் எண்டு சத்தியனுக்குத் தெரியும்.
தள்ளாடியில் பஸ் ஏறித் திருக்கேதீஸ்வரம் கோவிலில் இறங்கினோம். அங்கு பஸ் எடுத்துப் பூனகரி வாடியடியில் இறங்கினோம். வாடியடியில் பஸ் ஏறிப் பரந்தனுக்கு முன்னால் பெரியபரந்தனில் இறங்கினோம். அங்கிருந்த விதானையாரின் கமத்தில் சத்தியன் அடிக்கடி வந்து கமவேலைகள் செய்திருந்தான். விதானையாருக்கு அவனில் நல்ல விருப்பம். அவரிடம் தனியாகச் சத்தியன் என்னைப் பற்றி எல்லவற்றையும் சொன்னான். அவர் பிரச்சினை கொஞ்சம் அடங்கும் வரை தனது கமத்து வீட்டில் இருக்கும் படியும், காலமை முதல் வேலையாக என்ரை கழுத்தில் தாலி கட்டும்படியும் கூறி, மறு நாள் முறைப்படி தன் வீட்டிலையே வைச்சுத் தாலி கட்ட வைத்தார்.
சில நாட்கள் அவரது கமத்து வீட்டில் தங்கினோம். சத்தியன் அவரது கமவேலைகளைப் பார்த்தார். நிம்மதியாக காலம் போனது. இப்ப புரிசன் அடிப்பானோ எண்ட பயமில்லை. சத்தியன் என்ரை பிள்ளையைத் தன்ரை பிள்ளை மாதிரிப் பார்த்துக் கொண்டார். சத்தியன் ஒரு சைக்கிளை வாங்கிக் கொண்டார். சனிக்கிழமைகளில் கிளிநொச்சிச் சந்தைக்குப் போய் ஒரு கிழமைக்குத் தேவையான சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கி வருவார்.
ஐம்பத்தைந்தாம் கட்டையில் ஆக்கள் காடு வெட்டுவதைச் சந்தையில் கேள்விப் பட்ட சத்தியன் விதானையாரிடம் கூறிவிட்டு அவரின் கமத்தில் வேலைகள் இல்லாத நாட்களில் காலையில் போய் மாலை வரை இரண்டு ஏக்கர் காணியைப் பிடித்து வெட்டத் தொடங்கினார். ஒரு நாள் பொலிஸ் அடாத்தாக காடு வெட்டியவர்களைப் பிடித்து மறியலில் அடைத்தது. நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட போது இரண்டு ஏக்கர் காட்டை வெட்டியதற்கான குற்றப்பணத்தைக் கோட்டில் கட்டி விடுதலையானார். கோட்டில் குற்றப் பணம் கட்டிய பற்றுச்சீட்டைக் காணிக் கச்சேரியில் காட்டிய போது அந்த இரண்டு ஏக்கர் காணியைத் திருத்தித் தோட்டம் செய்ய அனுமதித்து சத்தியன் பெயரில் ஒரு காணி அனுமதிப் பத்திரம் வழங்கப் பட்டது. மறியல் இருந்ததும் நன்மையாகவே முடிந்தது.
சத்தியன் வெட்டிய இரண்டு ஏக்கரில் ஒரு ஏக்கர் மேட்டு நிலமாகவும் ஒரு ஏக்கர் பள்ளமாகவும் இருந்தது. காணியில் ஒரு பெரிய கிணற்றை வெட்டி மேட்டுக் காணியில் தோட்டச் செய்கையையும் பள்ளக் கணியை வயல்களாக வரம்பு கட்டி நெற்பயிர் செய்யுமிடமாகவும் மாற்றினார். சத்தியனைப் போலவே அயலில் காடு வெட்டியவர்கள் குடிசைகளைப் போட்டுக் குடும்பத்தினரைக் கொண்டுவர சத்தியனும் ஒன்று பெரியதும் மற்றது சிறியதுமாக இரண்டு கொட்டில் வீடுகளை அமைத்து மண்சுவரும் வைத்து விட்டார். ஒரு நல்ல நாளில் நாங்கள் இங்கு வந்து குடியேறினோம். முதலில் வந்து காடு வெட்டியவர்கள் பலர் கல் வீடுகளைக் கட்டிக் கொண்டனர், பாடசாலையும் வந்தது. இபொழுது பலர் குடியேறியுள்ளதால் எங்கள் கிராமம் வளர்ச்சியடைந்த கிராமமாக மாறியுள்ளது. சத்தியன் எங்கள் தோட்டத்தில் வேலையில்லாத போது அயலில் உள்ளவர்களுக்குக் கூலி வேலை செய்யப் போவார், எங்கள் வாழ்வு சீராகப் போனாலும் இந்த ஓடிவந்தவள் எண்ட பெயர் என்னுடன் ஒட்டிக் கொண்டு ஊராரின் ஏளனப் பார்வைக்கு ஆளாகியிருக்கிறேன். இதில் என்ரை பிழை என்ன ரீச்சர்? என்று கண்கலங்கினாள்.
நான் “றோசலின், உலை வாயை மூடினாலும் ஊர்வாயை மூடமுடியாது. நாங்கள் பிழை விடாத போது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் எண்டு கவலைப்படத் தேவையில்லை“ என்று ஆறுதல் கூறினேன். கமலம் அக்காவிடம் றொசலிலின் உண்மைக் கதையைச் சொல்லிப் புரிய வைப்பது என்று தீர்மானித்துக் கொண்டேன். நான் கமலம் அக்காவைக் கூப்பிட்டு றொசலினின் வாழ்க்கைக் கதையைச் சொன்னேன். கேட்ட கமலம் அக்கா “பாவம் றொசலின், நாங்கள் முழுக் கதையையும் கேக்காமல் வெறும் வதந்தியை நம்பிக் கதைச்சது எவ்வளவு பாவம்.” என்றா.
அவ அப்படிச் சொல்லி முடிக்கவில்லை ஒரு பெரிய வெளிநாட்டுக் கார் வந்து நின்றது. அதற்குள் றைவரும் அவரருகே ஒருவரும் பின் சீற்றில் இரண்டு பெண்களும் இருந்தனர். றைவருக்கு அருகே இருந்தவர் எட்டி கமலம் அக்காவிடம் “மெடம், இங்கு சத்தியன் என்பவரின் வீடு எங்கே? நாங்கள் றொசலினின் அண்ணன்மார்“ என்றார். கமலம் அக்கா வீதிக்கு வந்து சரியான குறிப்பைக் கூறினா. “Thank you madam“ என்று அவர் தலையை உள்ளுக்கு இழுக்க கார் றொசலினின் வீடு நோக்கிப் போனது .
சத்தியனின் வீட்டின் முன்னால் அந்தப் பெரிய கார் போய் நின்றது. அயல் வீடுகளில் இருந்து குஞ்சும் குருமானுமாகச் சிறுவர்கள் காரைச் சூழ்ந்து கொண்டனர். காரிலிருந்து றொசலினின் அண்ணன்மாரும் அண்ணிமாரும் இறங்கினர். இரண்டு ஓலைக் குடிசைகள். வளவின் நான்கு பக்கங்களிலும் ஆளுயரத் தென்னை மரங்கள். ஒரு பக்கத்தில் ஐந்து ஆறு மாமரங்கள். இன்னொரு பக்கத்தில் சில வெண்டிகளும் கத்தரிகளும் நிறை பிஞ்சுகளுடன். மறு பக்கம் கச்சான் செடிகள் பூத்தபடி. ஒரு சிறிய கொட்டிலில் ஒரு கிடாயும் இரண்டு மறிகளுமாக ஆடுகள் உயரத்தில் கட்டிய குழையைத் தின்றபடி. ஒரு நிலத்தில் கட்டப்பட்ட கோழிக்கூடு. கோழிகள் தோட்டத்தில் எதையோ கிழறி மேய்ந்தன.
பார்த்த அண்ணன்மாருக்குப் பெருமூச்சு வந்தது. மூத்த அண்ணன் தம்பியாரைப் பார்த்து “எப்படி வாழவேண்டியவள்? இந்த நிலையில் இருக்கிறாள்.” என்றார். பெரிய அண்ணி அவ அடி உதை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறா. சத்தியன் நல்ல மனிதன் மட்டுமல்ல நல்ல உழைப்பாளியும் போலை இருக்கு.” என்றா.
அப்போது பெரிய கொட்டில் கதவைத் திறந்து கொண்டு றொசலினும் மகன் பாபுவும் இங்கு வந்த பிறகு பிறந்த மகள் மேனகாவும் வந்தனர். றொசலின் திகைத்துப் போய் “அண்ணா“ என்றவள் மேலே கதைக்க முடியாமல் அழத் தொடங்கினாள். அண்ணிமார் ஓடிப் போய் றொசலினையும் மேனகாவையும் கட்டி அணைக்க சகோதரர்கள் இருவரும் பாபுவை அணைத்துக் கொண்டனர். ஏதோ வேலையாக இருந்த சத்தியன் தலைப்பாவைக் கழற்றி வேர்வையைத் துடைத்தபடி அவர்களை நோக்கி வந்தார்.
பெரிய அண்ணர் “றோஸ், நீ நகைகளையும் கழற்றி வைத்து விட்டு, மலிவான உடையில் போன கதை தெரிந்து நாங்கள் எல்லாரும், நாங்கள் விட்ட பிழையை உணர்ந்து கொண்டோம். உனக்கு எவ்வளவு வெறுப்பு வந்ததால் எங்கள் சொத்தே வேண்டாமெண்டு போயிருப்பாய்.“ என்று கண்கலங்கினார். சின்ன அண்ணி “அவன் கொஞ்ச நாள் உன்னைத் தூற்றித் திரிந்தான். பிறகு இன்னொரு கலியாணம் செய்தான். அந்தப் பொம்பிளை ஒரு வருசம் கூடத் தாக்குப் பிடிக்காமல் தன்ரை வீட்டிற்குப் போய் விட்டா. பிறகு ஒருத்தியைச் சேர்த்துக் கொண்டான். அவள் பொல்லாத மனுசி. அவனை இருத்தி எழுப்பினாள். அவனுக்கு கடும் நோய் வந்த இப்ப அடங்கிப் போய்க் கிடக்கிறான். கடையின் கீழ்ப் பகுதியை வாடகைக்கு விட்டு விட்டு, அவன் மேல் மாடியில் இருக்கிறான். கடை வாடகையில் தான் சீவியம்.” என்றா.
றொசலின் அவ சொன்னது ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. சின்னண்ணன் “றோஸ், அம்மா கடும் வருத்தத்தில் இருக்கிறா. உன்னைக் கடைசியாய ஒருக்கா பார்க்க ஆசைப்படுறா. நீ குடும்பமாய் ஒருக்கா வந்து பார்த்திட்டு வா.” என்று வந்த நோக்கத்தைச் சொன்னார். சின்ன அண்ணி தங்கச்சி கலியாணம் கட்டி வெளிநாடு போன பிறகு ஒரு நாள் கதைக்கேக்கை அவன் உங்களுக்கும் பிள்ளைக்கும் சிகரெட்டால் சுட்ட கதையைச் சொன்னவள் என்றா.
அது வரை பொறுமையைக் காத்த றொசலின் “அப்ப அது எல்லாம் தெரிஞ்ச அம்மாக்கு இப்ப தான் என்னைப் பார்க்க மனம் வந்ததா?“ என்றவள். “எனக்கு அம்மா எண்டு யாருமில்லை. நீங்கள் போட்டுவாங்கோ. “என்று சொல்லி இரண்டு கைகளையும் கூப்பினாள் . பெரிய அண்ணன் சத்தியனைப் பார்த்து “நீங்களெண்டாலும் சொல்லி றோஸை அனுப்பி வையுங்கோ.“ என்றார். சத்தியன் “அவவுக்கு விருப்பம் எண்டால் வருவா தானே! விருப்பமில்லாதவவை நான் தெண்டிக்கிறது சரியில்லைத் தானே?“ என்றார்.
இது வரை அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த மேனகா “எங்கடை அப்பா எங்களை உங்களைப் போல கடின மனம் படைத்தவர்களாக வளர்க்கவில்லை. அம்மா வருவா, உதவிக்கு அண்ணாவும் வருவான். அவவைப் பார்த்த கையோடை அவை ரெயினில் திரும்பி வந்து விடுவினம்.” என்று பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தாள். சத்தியன் வீட்டிற்குள் சென்றவர் கையில் கசங்கிய ஒரு கட்டு காசுடன் வந்து “தம்பி அம்மா தாயைப் பார்த்ததும் ரெயின் பிடிச்சு வந்து விடுங்கள்.” என்று கையில கொடுத்தார்.
அந்தக் காரில் சாரதியின் சீற்றுக்குப் பின்னால் இரண்டு வரிசை சீற்றுக்கள் இருந்தன. பாபுவும் றொசலினும் கடைசி வரிசைச் சீற்றுகளில் இருக்க கார் புறப்பட்டது. கார் தெரியும் வரை சத்தியனும் மேனகாவும் தங்கள் உயிரே பிரிந்து போனது மாதிரியான கவலையுடன் கைகளை ஆட்டியபடி நின்றனர்.
கார் றொசலினின் தாய் வீடு போய்ச்சேர இரவு ஏழு மணியாயிற்று. அண்ணிமார் றொசலினின் கையைப் பிடித்துத் தாயின் அறைக்குக் கொண்டு போனார்கள். பாபு மாமன்மாருடன் பின்னால் போனான். றோசலினைக் கண்ட தாய் அந்த மரணப்படுக்கையிலும் எட்டி அவளின் கையைப் பிடித்து “றோஸ் வந்திட்டாயா“ என்று முனங்கினார், கண்களிலிருந்து கண்ணீர் ஓடியபடி இருந்தது. எட்டு மணியளவில் றொசலினும் பாபுவும் தமக்கென ஒதுக்கப் பட்ட அறையில் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்து தாயின் கையைப் பிடித்தபடி அருகில் இருந்தாள். பத்து மணியளவில் தாயாரின் உயிர் மகளைக் கண்ட நிம்மதியுடன் பிரிந்தது. தாயார் உயிர் பிரிந்த நிலையிலும் ஏதோ சாதித்தவர் போல் புன்னகைத்தபடி உயிர் நீத்திருந்தார். கையின் தளர்ச்சியினால் தாயார் இறந்ததை உணர்ந்த றொசலின் ஓவென்று அழுதாள். எல்லோரும் ஓடி வந்தனர்.
நோய்ப்படுக்கையில் பல நாட்கள் கிடந்த உடம்பு. முறைப்படி மறு நாளே உடலைப் அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளைக் குடும்பத்தவர்கள் செய்தனர். றொசலின் பாபுவிடம் “நாங்கள் அடக்கம் செய்த அன்றே வெளிக்கிடக் கூடாது. நாளை மறுநாள் வீட்டிற்குப் போகலாம்.” என்றாள். மறுநாள் அடக்கம் செய்யும் இடத்திற்கு றொசலினும் பாபுவும் குடும்பத்தவர்களுடன் சென்றனர்.
அன்று இரவு இரண்டு அண்ணிமாரும் இரண்டு பெட்டிகளுடனும் ஒரு சூட்கேசுடனும் றொசலின் தங்கியிருந்த அறைக்குச் சென்றனர். “றோஸ் இவை உங்கடை சொத்து. ஒரு பெட்டியில் உங்கடை நகைகள் இருக்கு. மற்றதில் கொஞ்சக் காசு இருக்கு. சூட்கேசில் உங்கள் நாலு பேருக்குமான உடுப்புகள் இருக்கு. போகேக்கை மறக்காமல் கொண்டு போங்கோ.“ என்றார்கள். றொசலின் சோகப் புன்னகையுடன். “அண்ணி இதை நான் கொண்டு போனால் என்ரை சத்தியனுக்கு நான் செய்கிற துரோகமாயிருக்கும். தொடக்கத்தில் நாங்கள் கஷ்டப்பட்ட நாங்கள் தான். சத்தியனின் உழைப்பால் இப்ப எங்களுக்கு ஒரு குறையுமில்லை. தயவு செய்து இவையளைக் கொண்டு போங்கோ. செத்த வீட்டுக்கு வந்த ஆரும் தற்செயலாக எடுத்து விட்டால் எனக்கு ‘ஓடிப்போனவள்‘ என்ற பட்டத்துடன் ‘திருடி‘ என்ற பட்டமும் வந்து விடும், தயவு செய்து கொண்டு போங்கோ.“ என்று உறுதி படக் கூறி விட்டாள். அவர்கள் வேறு வழியின்றி எடுத்துச் சென்றனர்.
மறுநாள் காலை றொசலினும் பாபுவும் வெளிக்கிட்டுப் போகத் தயாரானார்கள். அதைப் பார்த்த தூரத்து உறவினர் ஒருவன் பாபுவைப் பார்த்து, “பாபு உன்ரை அப்பா உன்னை ஒருக்காப் பார்க்கோணும் எண்டவர்“ என்றான். பாபுவிற்குச் சிலிர்த்துக் கொண்டு கோபம் வந்தது, அவரைப் பார்த்து “என்னை மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்து, சைக்கிளில் பாடசாலைக்கு ஏத்தி இறக்கி என்னைப் பாசத்துடன் வளர்த்த அப்பா வன்னியில் இருக்கிறார். கண்டவனெல்லாம் என்ரை தகப்பனில்லை.“ என்றவன் அவரை அதற்கு மேல் கதைக்க விடவில்லை .
அடக்கம் செய்து எட்டு நாள் முடியும் வரை அண்ணன்மார் வீட்டை விட்டு வெளிக்கிட முடியாது என்பது றொசலினுக்குத் தெரியும். பஸ்ஸில் போக வெளிக்கிட அண்ணியின் தம்பி “நான் காரில் கொண்டு போய் கோட்டை
ஸ்ரேசனிலை விடுறன்.“ என்றான். அவர்கள் காரில் ஏற வெளிக்கிடத் தட்டுத் தடுமாறி நடந்து வந்த றொசலினின் தகப்பன் “நீங்கள் எல்லாரும் என்ரை செத்த வீட்டிற்கு வருவீங்கள் தானே.“ என்று இருவரையும் கட்டிப் பிடித்து அழுதார். அண்ணியின் தம்பி காரில் இருவரையும் ஏற்றி வந்து கோட்டை ஸ்ரேசனில் விட்டு, ரிக்கெற்றும் எடுத்துக் கொடுத்து, ரெயினில் ஏற்றி அனுப்பி வைத்தான்.
மதியம் அவர்கள் கிளிநொச்சி ஸ்ரேசனில் இறங்க சத்தியனும் மேனகாவும் இரண்டு சைக்கிள்களில் அவர்களை ஏற்றிச் செல்ல ஆயத்தாமாய் நின்றனர். றொசலினுக்கு நடந்ததெல்லாம் கனவாகத் தெரிந்தது. அவளின் குடும்பத்தவர் சுய நலமாக நடந்தாலும் வந்து அழைத்துச் சென்றதன் மூலம் ஓடிவந்தவள் என்ற பழி இனி இருக்காது என்று நிம்மதி அடைந்தாள்.
நிறைவு…
நன்றி : ஜீவநதி
பத்மநாபன் மகாலிங்கம்