குட்டி எனும் வார்த்தையைச் சொன்னாலே உறவுகளுக்கு நாக்கில் எச்சில் ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். அந்தளவுக்கு குட்டியின் சமையல் நாவிற்கு ருசியைக் கொடுப்பதோடு, உண்ட பின்னும் கை மணக்கும்!
குட்டி என்கிற பரிமளாவிற்கு வயது நாற்பது இருக்கும். இருபது வயதில் தனது அத்தை மகன் சுந்தரனையே விரும்பி கைப்பிடித்தாள். வசதி சிறிது எதிர்ப்பைக்காட்டினாலும் அசதியின்றி சுறுசுறுப்பாக செயல்படும் விதம் வசதியற்ற குடும்பம் எனும் பெயரை மறைத்து விட்டதோடு, சமையலிலிருந்து தனக்கு விடுதலை கிடைப்பதோடு, ஊரே மெச்சும் மருமகளின் கைபக்குவத்தை தினமும் ருசிக்கலாமென்கிற நப்பாசையும் மகனின் விருப்பத்துக்கு தடை போட இயலவில்லை தற்போதைய மாமியாரும் அப்போதைய தந்தையின் உடன் பிறந்த சகோதரியுமான அத்தை சுந்தரிக்கு.
யாருக்கு என்ன பிடிக்கும் என்பதை தனது மதி நுட்பத்தால் தெரிந்து கொண்டு உணவை தயாரிப்பதோடு அன்பாக பரிமாறவும் செய்வாள். குழந்தைகளுக்கு கசப்பென உண்ண மறுக்கும் பாகற்காய் பொறியலை உணவோடு சாப்பிட வைத்து விடுவாள்.
புளியும், நாட்டுச்சர்கரையும் சேர்த்து அவள் வைக்கும் பாகற்காய் குழம்பு நினைத்தாலே வாயில் எச்சில் சுரக்கும். முழு உணவையும் அக்குழம்பிலேயே உண்டு விட முடியும். முதல் நாள் அரிசி சாதத்தை புளி சேர்த்து வைத்து மறுநாள் காலையில் சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து கொடுத்தால் மீதம் வைக்காமல் சாப்பிடும் குழந்தைகளை ஆச்சர்யமாகப்பார்க்கத்தோணும். அதே போல் மீதமாகும் இட்லியை பொடி செய்து இட்லி உப்புமா என பெயர் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து விடுவாள்.
பல பெண்கள் பாட்டி காலத்து அரிசியும் பருப்பும் கலந்த கொங்கு நாட்டு கவுண்டர் பிரையாணியையும், கத்திரிக்காய் உருளைக்கிழங்கையும் செய்யும் போது பருப்பு இல்லையென்றால் தக்காளி சாதமெனவும், தக்காளி இல்லையென்றால் தேங்காய் சாதமெனவும், தேங்காயும் இல்லையென்றால் எழுமிச்சை சாதமெனவும், அதுவும் இல்லையென்றால் சர்க்கரை சாதம் எனவும் அதுவும் இல்லையென்றால் கஞ்சி சூப் எனவும் இருப்பதை வைத்து அனைவரின் பசியையும் போக்கிடும் அன்னபூரணியின் அம்சம் தான் குட்டி.
உறவுக்குழந்தைகள் குட்டி அத்தை என அழைத்ததால் தற்போது அனைவருமே குட்டி அத்தை என கூப்பிடும் அளவிற்கு குட்டியுடன் அத்தையும் சேர்த்து உறவுப்பெயராக இல்லாமல் முழுப்பெயராக மாறி விட்டது.
ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு யாராவது சாப்பிட வரமாட்டார்களா? என ஏங்குவாள். வந்து விட்டால் போதும் ‘நீங்கள் பேசிக்கொண்டிருங்கள் நான் சமையலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என கூறிவிட்டு சேலையை இடுப்பில் எடுத்து சொருகி பம்பரமாக சுற்றி விரைந்து உணவு கொடுக்க முடியவில்லையேல் மோர், குளிர்பானம், காஃபி, டீ ஏதாவது கொடுத்து வயிற்றுப்பசியை நினைக்காமல் விருந்தினர்களை பேசிக்கொண்டிருக்கச்செய்து விடுவாள். அவள் புன்னகையுடன் செயல்படுவதும் மற்றவர்களுக்கு இருக்கும் சோர்வை வெல்ல வைத்துவிடும்.
குழந்தைகள் எப்பொழுதும் குட்டியை சுற்றிக்கொண்டே இருப்பர். ‘குட்டி அத்தே எனக்கு அத பண்ணிக்கொடு, இதப்பண்ணிக்கொடு’ என நச்சரித்துக்கொண்டே இருந்தாலும் முகம் கோணாமல் செய்து கொடுத்து விடுவாள்.
ஒரு முறை குட்டிக்கு கை சுளுக்கி சமைக்க முடியாமல் போக உறவினர்கள் பலர் வந்து உதவி செய்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுத்துச்சென்றனர். ஒரு நாள் தன் தாயுடன் வந்த நான்கு வயது குழந்தை ரமி, குட்டி அத்தைக்கு நானே ஊட்டுவேன் என தன் தாய் கொண்டு வந்த உணவை முழுவதும் தானே ஊட்டி விட்ட போது, குட்டியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக்கெடுத்தது. ரமி எப்போது வந்தாலும் தன் இடுப்பில் வைத்துக்கொண்டே ஊட்டி விடுவாள் குட்டி. நாம் மற்றவர்களுக்கு எதைக்கொடுக்கிறோமோ அது தான் நம்மிடம் திரும்பி வரும் என்பதை தற்போது புரிந்து கொண்டாள் குட்டி அத்தை என்கிற பரிமளா!