பால் கேனை கழுவி நிரப்பிக்கொண்டு ஒவ்வொரு சாப்பாடு கடையிலும் பாலை கொடுத்துவிட்டு வருவது செல்வத்தாரின் வழக்கம். காலை ஐந்துமணி ஆனவுடன் தேநீருக்கு அடுப்பை மூட்டிவிட்டு பால் பாத்திரங்களை கழுவி உருட்டுகின்ற சத்தத்தில் பக்கத்துவீட்டுக்காரரர்களும் எழும்பிவிடுவார்கள். மாடுகளை விரட்டி பாலை கறந்து வெளிக்கிடுவற்கு 6.60மணி ஆகிவிடும். செல்வத்தாரின் மனைவி கிளி அக்காவும் விடியவே முனகியபடி எழுந்துவிடுவாள். “விடியங்காத்தால ஒரே பானையை உருட்டுறதே வேலையாப்போச்சு” என்று கத்திக்கொண்டே தேநீர் கோப்பையை நீட்டுவாள்.செல்வத்தாரை பற்றி சொல்லவா வேண்டும் காதில் வாங்காததைப்போல தேநீரை வாங்கி நின்ற இடத்திலே மடக்கு மடக்கு என்று குடித்துவிட்டு கிளம்பிவிடுவார்.
பால் கேனை கட்டினால் திரும்ப வீடு வருவதற்கு பத்தரை ஆகிவிடும். வாயில் துண்டு பீடியையும் தலைப்பாகையையும் கட்டிக்கொண்டு “இந்த றோட்டுக்கு தம்பிமாரை தார் போடச்சொல்லணும் என்று முனங்கியபடி வருவார். செல்வத்தார் என்ன நடந்தாலும் எங்க போனாலும் செய்தி கேட்பதையோ செய்தித்தாள் வாசிப்பதையோ விடமாட்டார். அப்போதெல்லாம் புத்தகக்கடைகளில் மாத்திரமல்ல தேநீர்கடைகளிலும் ஈழநாதம் வரிசையாகத்தொங்கும். “தம்பி இந்திரன் ஈழநாதம் ஒண்டு எடுக்கிறன்டா பால் காசில் கழிச்சிக்கோ” என்று கூறிவிட்டு நாலாக மடித்து சைக்கிள் ஹாண்டிலில் செருகிவிடுவார். இந்திரனும் என்ன சரி நாட்டு நடப்பு தெரிய வேண்டுமென்றால் செல்வத்தாரை கேட்பான்.
செல்வத்தார் ஒழுங்கைக்குள் இறங்கிவிட்டார் என்றால் எல்லோருக்கும் தெரிந்துவிடும் சைக்கிளில் கட்டிய பால் கேன் சத்தம் போடா ஆரம்பித்துவிடும். பாலத்தின் குறுக்கே இயக்கத்தம்பி இளங்குமரனும் துப்பாக்கியும் ஊரை காவல் காத்துக்கொண்டிருப்பார்கள். இளங்குமரன் செல்வத்தாரை பார்த்து “என்ன செல்வாப்பா டியூட்டி முடிஞ்சி போல பேசாம போறியல்” என்ற உடனே சைக்கிளில் காலை பின் டயரில் அழுத்திப்பிடித்து சைக்கிளை நிறுத்தினார். செல்வத்தாரும் “என்ன இளங்குமார சாப்பிடியோ தம்பியாக்கள் இன்னும் சாப்பாடு கொண்டுவரேலயா? என்று கேட்க எல்லைக்கு சாப்பாடு கொண்டு போய்ட்டினமாம் தம்பி தங்கச்சியாக்களுக்கு சாப்பாடு குடுக்க போயிட்டினமாம் கொஞ்சத்துல வந்திருவீனமாம்.
வயது வந்தவர்களை அம்மா, அப்பா என்று அழைப்பதும் மற்றவர்களை அண்ணா, அக்கா, தம்பி ,தங்கச்சி அழைப்பதும் எங்கள் விடுதலை புலிகளின் இயல்பு. செல்வத்தாரும் “நீ வா தம்பி அப்பாட சைக்கிள்ல ஏறு வீட்ட போய்ட்டு சாப்பிடு வருவம்” என்று இளங்குமரனை ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தது சைக்கிள். “மெதுவா ஓடப்பா பிரேக்கும் இல்ல ஒண்டும் இல்ல கீழ விழுந்து மூக்குடைய போகுது” என்று கிண்டல் கதையுடன் இருவரும் வீடு வந்தனர். “என்ன அம்மா சுகமா இருக்கீங்களா? பசிக்கிது சாப்பாட்ட தாங்கோ” என்று உரிமையாய் கேட்க கிளி அக்காவும் எங்களுடைய இந்த விடுதலைக்காய் போராடும் ஒவ்வொரு புலிகளும் எங்கள் வீட்டுப்பிள்ளைகள் என்பதை உணர்த்தும். “என்ன இளங்குமரா நிறைய நாளா ஆள பாக்க கிடைக்கேல இங்கால பக்கம்” என்று செல்வத்தாரின் மனைவி கேட்க “இல்ல கிளியம்மா முகமாலைல தம்பி ஆக்கள் சண்ட போடுறீனமெல்லோ அதுல ஈழவேந்தன் அண்ணா காயப்பட்டிடேர் அப்ப கைல சின்ன காயம். அது தான் அவரை மெடிசினுக்கு அனுப்பிட்டோ நான் போனான்”. என்று இளங்குமரன் கூற கோவத்தில் கொந்தளித்தார் கிளி அக்கா. ” அறுவானுகள கொள்ளாம ஏன் நீ வந்த” என்று கத்தினார். கத்திய சத்தத்தில் தொழுவத்தில் இருந்து வந்த செல்வத்தார் “அடியே வாய மூடிற்று பிள்ளைக்கு சாப்பிட்ட போட்டு குடு இவளுக்கு ஒரே ஆமிக்காரனுகள திட்டுறதே வேலையா போய்ட்டு. இவளோட திட்டுக்கே பாதி ஆமிக்காரனுக்கள் செத்திடுவானுகள் ” என்று கிண்டலடித்துக்கொண்டே வீட்டிற்குள்ளே சென்றார்.
“புட்டும் நண்டுக்குழம்பும் இருக்கு சாப்பிடு தம்பி ” என்று கோப்பையை நீட்டினாள். “என்னம்மா இது கூடி போச்சி குறைச்சு தாங்க” என்று இளங்குமரனும் கேட்க “தம்பி களத்திலே இருந்து சண்டை போடணும். அதுக்கு நல்லா சாப்பிட்டா தன தெம்பா சண்டை போடலாம் ” கிளி அக்காவின் கதையை கேட்ட அவன் “இப்பிடி சாப்பிட்டா நித்திரை தான் வரும்”என்று கிண்டலடித்துக்கொண்டே” அப்பா வாங்க சாப்பிடுவம்” என்று ஒரு உருண்டை ஊட்டி விட்டான் இளங்குமரன் . நீ எங்கள் வீட்டு பிள்ளையடா என்று கட்டியணைத்து முத்தமிட்டார். செல்வத்தருக்கு ஆண் பிள்ளை இல்லாததினால் இளங்குமரனையே மகனாய் பார்த்தார்.
“நான் வீரச்சாவடைந்தா துயிலுமில்லம் வாங்க ரெண்டுபேரும்” என்று இளங்குமரன் கூற பளார் என்று அறைந்தார் கிளி அக்கா. “நீ களத்துக்கு சென்றாலும் உன்னினைப்பு ஈழ விடுதலைக்காகவே இருக்க வேணும். அந்த உணர்ச்சி உன் சாவை தள்ளி வைக்கும்”. என்று கூறிய தாயின் அந்த வார்த்தை அவன் மனதை நெகிழ வைத்தது. சாப்பிட்டு அமர்ந்தவன் “ஈழ வேந்தனுக்கு புண் ஆறிற்றா” என்று கிளி அக்கா கேட்க “வேந்தன் அண்ணா சும்மா ஆளில்ல நான் போன அடுத்த நாள் மெடிசின்ல இருந்து களத்துக்கு வந்திட்டேர். வந்து என்னய போகச்சொல்லிடேர்.
ஆமிக்காரனுகளுக்கு இப்போ எல்லாம் வேந்தன் அண்ணா எண்டாலே பயம். முகமாலையை நெருங்க விடேல அடிச்சி நொறுக்கிடேர்.” என்று கூறிக்கொண்டே விடை பெற தயாரானான் இளங்குமரன். “அப்பா என்னய அதில கொண்டு போய்ட்டு விடுங்கோ”என்று உரிமையாய் அழைக்க செல்வத்தரும் கருக்கு மட்டை வேலியில் காய போட்டிருந்த சேட்டை மாட்டிக்கொண்டு கிளம்பினார். “இதில இறக்குங்க அப்பா நான் நடந்து போறான் ” என்று கூற “சரியப்பு பார்த்து போய்ட்டு வா ” என்று வழியனுப்பி வைத்தார்.
வழமை போல செல்வத்தாரும் விடியற்காலையில் பால் கேனை கட்டிக்கொண்டு சைக்கிளை மிதிக்கத்தொடங்கினார். வாயில் இயக்கப்பாட்டு விசிலாக வெளிப்பட்டது. கடையில் பாலை ஊற்ற புலிகளின் குரல் செய்தியும் பண்பலை 92 அதிர்வெண்ணில் அதிரத்தொடங்கியது.”தம்பி செய்திய கூட்டிவிடு” என்று செல்வத்தாரும் கூற செய்திகளும் ஆரம்பமாகியது. காதுகளை கூர்மையாக கேட்டவர். முகமாலையில் பலத்த சண்டையில் இராணுவத்தளம் அழிப்பட்டு தமிழீழ விடுதலை புலிகளால் சமர் முறியடிக்கப்பட்டது. இதில் நாற்ப்பதற்கும் மேற்ப்பட்ட இராணுவம் கொல்லப்பட்டதாகவும் விடுதலை புலிகள் மூவர் படுகாயம்டைந்ததுடன் ஆறு பேர் சிறு காயங்களுடனும் சிகிச்சை பெற்றுவருவதாக செய்தியில் அறிவிக்கப்பட்டது.
“துலைஞ்சி போவார் எங்கள நிம்மதியா இருக்க விடமாட்டானுகள் போல” என்று மூணு முணுத்த படி இருக்க “அண்ணன் சும்மா சண்டைய தொடங்குற ஆளா இந்த ஆமிக்காரங்கள் தான் தடிய குடுத்து அடிவாங்கிற்று இருக்கினம்” என்று கடைக்கார தம்பி கூற ” எங்கட பொடியள் சும்மாவா நொறுக்கிப்போட்டு தான் விடுவாங்கள். என்று உணர்ச்சி வசப்பட்டார். சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்ட செல்வத்தரின் வாயில் எழுச்சிப்பாடல் முணுமுணுத்தது.எங்களுக்கு பிறகு வருகின்ற பிள்ளைகள் சரி நிம்மதியாக சந்தோசமாக வாழவேண்டும் என்று யோசித்துக்கொண்டே “நானும் இளங்குமரனிடம் துவக்கு சுட்டு பழக வேணும்” என் தனக்குத்தானே கதைத்துக்கொண்டு சென்றார்.
செல்வத்தார் வீடு செல்லும் வழியில் சிவப்பு மஞ்சள் கொடிகளும் மைதானத்தில் மேடையும் போடப்பட்டுக்கொண்டிருந்தன. சைக்கிளை தேக்கு மரத்தில் சாய்த்துவிட்டு உள்ளே நுழைந்தவர் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார். அதில் நின்ற தமிழீழ காவல்த்துறை தம்பியை நோக்கி “என்னப்பா செய்யிறியள் என்ன நடக்கபோகுது”என்று வினவியவர். அருகே வந்த காவல்த்துறையை பார்த்து சிரித்தார்.” நாளைக்கு பொங்குதமிழ் நிகழ்வெல்லா நடக்க போகுது அதுக்கு சோடிக்கிறோம்” “அட அத மறந்து போயிற்றன் பாத்திங்களா என்றவர் “தம்பி தலைவர் வரேரா அவரை பாக்கனும் போல இருக்கு” என்று கேட்க ” நாங்களும் அவரை பாக்க ஆசையா தான் இருக்கம்” என்று சிரித்த படி நாளைக்கு வருமாறு கூறி செல்வத்தரை அனுப்பி வைத்தான்.
வீட்டிற்கு வந்தவர் அவசரமாக ஈழநாதத்தை பார்த்தவன் நாளை பொங்குதமிழ் பேரரெழுச்சி என்று தலைப்புச்செய்தியாக உள்ளதை அவதானித்து மனத்திற்குள் பூரித்தான். நாளைக்கு பொங்குதமிழ் சிறப்புரைகள் நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும் என்று யோசித்தவர். இருக்கின்ற வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு நிம்மதியாக உறங்கினான். அதிகாலை எழுந்தவன் என்ன இன்னும் தம்பியாக்கள்ட பாட்டுச்சத்தத்தை காணவில்லை என்று புலம்பிக்கொண்டே அடுப்பங்கரையில் தலைப்பாகையை கட்டிக்கொண்டு தன்னுடைய மகளும் பொங்குதமிழ் நிகழ்வில் எங்கு சரி வேலையாக இருப்பாள் என்று யோசித்த படி தணலை மூடிக்கொண்டு நின்றார். சிறிது நேரத்தில் கிளி அக்கா எழும்பி வர அவர் பாலை கறக்க தொழுவத்துப்பக்கம் சென்றார் . ஒலிபெருக்கி சத்தம் கேட்க பொங்குதமிழ் கலைகட்ட போகிறது என்று யோசித்த படி பாலை மனைவியிடம் கொடுத்துவிட்டு வேலைகளை தொடங்க பொங்கு தமிழ் எழுச்சிப்பாடல் வானை கிழித்தது. இளங்குமரனையும் காணவில்லை. பொங்குதமிழ் நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தலுக்கு சென்றுவிட்டான் போலும் என்று கிளி அக்காவும் யோசித்துக்கொண்டே பால்த்தேநீரை கொடுத்து விட்டு பட பட வென வேலைகளை முடித்து பொங்குதமிழ் நிகழ்ச்சிக்கு செல்ல இருவரும் தயாராகினர். வீட்டுக்கதவை மூடிவிட்டு மாட்டுத்தொழுவத்தை பார்த்துவிட்டு நாய்களையும் அவிழ்த்துவிட்டு
கிளி அக்காவை ஏற்றிக்கொண்டு மைதானத்தின் பக்கம் சென்றார்.
சைக்கிளை தேக்கு மரத்தில் தேய்த்துவிட்டு அலை மோதிய கூட்டத்தை தள்ளிக்கொண்டு இருவரும் நுழைந்தனர். மைதானத்தில் மேடை மின்விளக்குகள் மூலம் பிரகாசித்தது. சேரன் , பாண்டியன் குளிர்களி வாகனங்கள் வாசலின் இருபக்கமும் சிறுவர்களால் மொய்க்கப்பட்டிருந்தது.
“அப்பா….. அப்பா…..”என்று குரல் கேட்க திரும்பிப்பார்த்தவர் கண்களில் கண்ணீர் வெள்ளத்துடன் கட்டியணைத்து முத்தமிட்டார். அருகில் நின்றவர்கள் “செல்வாண்ணேட மகள் சுடரொளி வந்திருக்கா” என்று கதைக்க கிளி அக்காவின் காதில் விழவே “ஐயோ என்ட பிள்ளையை கண்டு எவ்வளவு காலம் ” என்று கத்திக்கொண்டு கட்டியணைத்து முத்தமழை பொழிந்தாள். சோதியா படையணியில் மணலாற்று சண்டையில் களம்புகுந்து இப்பொழுது பாதுக்காப்பிற்காக அனுப்படுள்ளார். மகளை கண்ட ஆர்வத்தில் பிள்ளைக்கு கொண்டு சென்று சாப்பிட நிறைய உணவு பொருட்களும் குடிக்க நெக்டோ சோடாவையும் வாங்கி கையில் எடுத்துக்கொண்டு குழந்தைகளை போல தனது தந்தை ஓடி வருவதை பார்த்து சுடரொளி உள்ளுக்குள் அழுதாள். வெளியில் தெரிந்தால் அப்பா ,அம்மா கவலைப்படுவார்கள் என நினைத்து காட்டிக்கொள்ளாமல் இருந்தாள். ஓடி வந்தவன் கையில் இருந்த உணவு பொதிகளை கொடுத்து விட்டு கன்னங்களை தடவி விட்டு மறுபடியும் வெளியே ஓடினார். பாண்டியன் குளிர்களியில் நான்கு கப் குளிர்களி வாங்கிக்கொண்டு ஓடி வந்து மகளுடன் வந்த மூன்று பெண் போராளிகளுக்கும் “இந்தாம்மா சாப்பிடுங்க சாப்பிடுங்க” என்று வாய் நிறைய கூறினார். “செல்வாண்ணேட மனசு தங்கம்” என்று அருகிலிருப்பவர் கூறி அவரின் செயல் கண்டு கண்கலங்கினர். உங்கட நிம்மதியான வாழ்வுக்கும் எங்கள் விடுதலைக்காகவும் தான் நாங்கள் போராடுகின்றோம். நீங்கள் அழக்கூடாது என்று கூற. “நாங்கள் அழ மாட்டோம். நீங்கள் கவலபட வேணாம்” என்று கிளி அக்கா கூற சுடரொளிக்கு அழைப்பு வர கட்டி பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு “இன்னும் இரு மாதங்களில் லீவுல வீட்ட வருவன்” என்று கூறிவிட்டு விடைபெற்றாள்.
நம் பிள்ளை எம் தேச விடுதலைக்காக போராடுகிறாள் என்ற கர்வம் அவர் மனதிற்குள் ஊசலாடியது.
மனைவியின் கைகளை இறுக பற்றினார். அவர் மனத்திற்குள் ஏங்கியது மனைவி கையை பற்றியதும் அறிந்து கொண்டாள். “இன்னும் ரெண்டு மாதங்களில் மகள் வந்துவிடுவாள் யோசிக்காதிங்க” என்று ஆறுதல் சொல்லி கொண்டு சிறப்புரைகளையும் பொங்குதமிழ் நிகழ்ச்சிகளையும் அமைதியாக ரசித்துக்கொண்டு வீடு நோக்கி வந்தனர். மனைவி “அப்பா நிறைய நாளா இளங்குமரனை காணவில்லை வேறு ஒரு தம்பி பொய்ண்ட்ல நிக்கிறான் விடிய ஒருக்கா விசாரிச்சு பாருங்க” என்று கூற “நானும் தம்பி பொங்குதமிழ் நிகழ்ச்சிக்கு வருவான் என்று எதிர்பார்த்தேன் காணவில்லை நாளைக்கு ஒருக்கா கேப்பம்”என்று கூறி படலையை திறந்து கொண்டு உள்ளே வந்தனர்.
மனைவி கூறியதை யோசித்துக்கொண்டே படுத்தவன் அப்பிடியே கண்ணயர்ந்தான். அதிகாலையில் எழுந்தவன் மனதில் எதோ தடுமாற்றத்துடன் திரும்பவும் படுத்துக்கொண்டான். இதனை அவதானித்த மனைவி “என்னாச்சுப்பா” என்று கேட்க இல்லை “இளங்குமரனை நினைத்துக்கொண்டே தூங்கினேன் மனசுக்கு கஸ்டமா இருக்கு’ என்று கூறிக்கொண்டே பாலத்தடிக்கு சென்று “தம்பி எங்கப்பா கனநாளா இளங்குமரனை காணேல என்ட பிள்ள என்னட சொல்லாம எங்கேயும் போக மாட்டான். எங்க அவன்” என்று கேட்க “அப்பா இளங்குமரனை அவசரமாக முகமாலை களத்தில் படையணி தலைமை தாங்க போனவர் படுகாயமடைந்து மெடிசி்னுக்கு கொண்டு வந்திடினமாம்.
அண்ணா போகேக்க கடிதம் ஒண்டு தந்திட்டு போனவர் என்னய தேடி அப்பா வருவார் குடுக்க சொல்லி”. என்று கூற கடிதத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தார். “அதில் அவசரமாக நான் களத்திற்கு செல்கிறேன் அப்பா .உங்களைத்தேடினேன் காணவில்லை. அது தான் தம்பியிடம் இந்த கடிதத்தை கொடுத்துவிட்டு செல்கிறேன்.கவனமாக யோசிக்காமல் இருங்க நான் நிச்சயம் உங்களுடன் இருப்பேன். நீங்கள் அம்மாவும் நீங்களும் என்னுடன் இருக்கும் போதெல்லாம் நான் இழந்த குடும்பத்தை மீள பெற்றுவிட்டேன் என்பதை உணர்ந்தேன் நான் மரணிக்கும் நேரத்திலும் உங்கள் கைகளும் அம்மாவின் மடிமீது மட்டுமே என் மரணம் நிகழும் அப்படி ஒன்று நடக்குமேயானால் உங்களுக்காக என்னுயிரை பிடித்துவைத்திருப்பேன்”. என்று அவன் எழுதிய கடிதத்தை பார்த்து விட்டு அழுதுகொண்டிருந்தார். இதைக்கண்ட மனைவி கடிதத்தை பார்த்து பிள்ளைக்கு என்னாயிற்று என்று கேட்க நடந்ததை கூறிய மனைவிக்கு இளங்குமரன் கூறியது நினைவுக்கு வந்தது( “நான் வீரச்சாவடைந்தா துயிலுமில்லம்
வாங்க ரெண்டுபேரும்”). கண்ணீர்மல்க சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பியவன் வீவா பெட்டியுடனும் கிரீம்கிரேக்கர் பிஸ்கெட்டு அவனுக்கு பிடித்த நிலா வெதுப்பக அடைக்கேக்கையும் வாங்கிக்கொண்டு மனைவியையும் ஏற்றிக்கொண்டு மல்லாவி மெடிஷினுக்கு சைக்கிளை மிதித்தார்.
மெடிசின் உள்ள விலாசத்தை கேட்டு கேட்டு ஒரு வகையில் வந்து சேர்ந்தார். உள்ள செல்ல மனசில்லாமல் முறிகண்டி பிள்ளையாருக்கு பிள்ளைக்கு ஒன்றும் ஆகக்கூடாது பொங்கல் வைக்கின்றேன். என்று நேர்த்தி வைத்த படி அனைத்து பிள்ளைகளையும் காப்பாற்றிவிடு ஆண்டவா என்று கும்பிட்ட படி மனைவியின் கரங்களை பற்றிய படி உள்ளே நுழைந்தார். “அந்த இயக்கத்தம்பிட கேளுங்க பிள்ள எங்க இருக்கான் எண்டு சொல்லுவீனம்” என்றெனு மனைவி கூற தம்பியிடம் விசாரிக்க அவன் அவசர சிகிச்சை பிரிவில் மாற்றிவிட்ட இடத்தை காட்டிவிட்டார். மனதை தைரியப்படுத்திக்கொண்டு உள்ளே சென்ற இருவரும் அவனை கண்டு பிடித்தனர். அவர்களை கண்டதும் அவனை விட்டு விலகிய வைத்தியர் அவனிடம் கதைப்பதற்கு சம்மதித்தார். அவனை கண்ட இருவரும் கத்தி அழ முற்பட்ட வேளை அருகில் உள்ள குழந்தைகளுக்கு இடையூறாக இருக்குமென்று அழுகையை அடக்கிக்கொண்டனர்.
கண்களை லேசாக திறந்த இளங்குமரன் கண்களில் நீர் வடிந்தது கண்களை துடைத்து விட்டு “இப்ப எப்பிடிப்பா இருக்கு ராசா” என்று கேட்க அவன் அருகில் அமர்ந்து தலையை தூக்கி அம்மாவின் மடியில் வைத்து தலையைதடவ அம்மாவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் பிள்ளை நெற்றியில் பட மூச்சினை இழுத்து “அப்பா……..” என்று கத்தி அப்பாவின் கைகளை இறுக பற்றியவன் உயிர் அன்னையின் மடியில் சென்றது. அப்பாவின் கைகளை பிடித்த அவன் கைகள் பிடியில் இருந்து விலகி அவன் கண்களை பார்த்தவண்ணம் இமைகள் மூடப்பட்டது.
கதறி அழுத தாயும் தந்தையும் வேண்டிய தெய்வம் எல்லாம் திட்டித்தீர்த்துவிட்டனர். “நாசமா போன ஆமிக்காரனுக்கள் என் பிள்ளையை கொன்றுவிட்டார்கள் தாயின் சாபம் சும்மா விடாது”புலம்பிக்கொண்டே ,என் வயிற்றில் பிறக்கா விட்டாலும் அவன் என் பிள்ளை. என் நிம்மதிக்கு உறக்கதிற்கும் என் தேச விடுதலைக்கும் உயிர் தியாகம் செய்த புனிதன் என்று கண்களை மூட அப்பா என்று வீட்டிற்குள்ளே நுழைந்தாள் சுடரொளி. இளங்குமரனின் வீரச்சாவு படம் வீட்டின் முன்னாள் கொழுவியிருந்தது. அதைக் கண்ட சுடரொளி குமரண்ணா….. என்று கத்தி அவன் படத்தில் தலையை மோதி அழுதாள். அவளை சமாதானம் செய்த தாய் அவன் கூறியது போல மூவரும் கையில் காந்தள் மலருடன் அவன் கல்லறையை நோக்கி…
கேசுதன்