டாக்டர் விக்கினேஸ்வராவின் மூன்றாவது ஆண்டு நினைவாக ஈழத்தின் பிரபல்ய எழுத்தாளர் இ.சு.முரளிதரன் எழுதிய ‘கதைப்பந்தாட்டம்’ எனும் நூல் தற்போது தாயகத்தில் வெளிவருகிறது.
சுன்னாகம் புகழ் டாக்டர் ப. விக்கினேஸ்வரா மண்பயனுறச் சேவை நல்கிய மக்கள் மருத்துவர் ஆவார். இடர்காலத்தில் அவர் நல்கிய மருத்துவப் பணிகளை யாழ்ப்பாணம் மண்ணும், மக்களும் என்றும் நினைவில் கொள்வர்.
சுன்னாகத்தில் நாற்பது ஆண்டுகள் மருத்துவ பணியாற்றிய வைத்தியர் ப. விக்கினேஸ்வரா அவர்கள் அமரராகி (22/2/2022) மூன்று வருடமாகிறது. ஆனால் அவரிடம் சிகிச்சைபெற்ற மக்கள் இன்றும் அவரது திறமைகளையும், சேவைகளையும் புகழ்ந்து நினைவு கூருகின்றனர்.
ஜீவநதி பதிப்பகத்தின் 436ஆவது வெளியீடாக, பிரபல வைத்தியரும் இடர்காலத்தில் மண் பயனுறச் சேவை நல்கிய மக்கள் மருத்துவர் சுன்னாகம் டாக்டர் விக்கினேஸ்வரா அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவாக, இ.சு.முரளிதரன் எழுதிய கதைப்பந்தாட்டம் – சுவைஞனின் மதிப்பீட்டுப் படிவம் எனும் நூல் வெளிவருகின்றது.
ஒவ்வொரு வருடமும் டாக்டர் ப.விக்கினேஸ்வரா நினைவாக ஈழத்து எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை அறிந்ததே. 2022 இல் மறைந்த டாக்டர் ப.விக்கினேஸ்வராவின் 31ம் நாள் நினைவாக பேராசிரியர் பாலசுகுமார் எழுதிய “ஈழத்தில் மாட்டு வண்டிச் சவாரியும் தமிழர் மரபும்” எனும் நூல் வெளியானது.
இதன்பின் 2023 இல் டாக்டர் ப.விக்கினேஸ்வராவின் முதலாவது ஆண்டு நினைவாக ஈழத்தின் பிரபல்ய எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய “பள்ளிக் கூடங்கள் கட்டடக் கூடுகள் அல்ல” எனும் கல்வியியல் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
கடந்த வருடம் 2024 இல் டாக்டர் விக்கினேஸ்வரா ஈராண்டு நினைவாக கலாநிதி த.கலாமணி அவர்களால் எழுதப்பெற்ற 35 படைப்பாளர்களின் நூல்களுக்கான அணிந்துரைகளின் தொகுப்பு நூலான “கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்” எனும் நூல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது டாக்டர் விக்கினேஸ்வராவின் மூன்றாவது ஆண்டு நினைவாக “கதைப்பந்தாட்டம்” எனும் நூல் தற்போது தாயகத்தில் வெளிவருகிறது.