குடைகள் போல் நிழல்
பரிமாறிக் கொண்டிருந்த
பெரு மரங்களையெல்லாம்
நான்கு வழிப் பயணத்துக்காக,
பிடுங்கியெறிந்து
பறவைகளையும் பசுமைகளையும்
விரட்டி அடித்தாயிற்று.
நீள அகலங்களை
அளவு நாடாக்களில் அளந்தும்
தொன்மக் குடிகளின் மீது
அம்புக் குறிகளிட்டும்
அப்பாவி மக்களை
அப்புறப்படுத்தியாயிற்று.
பச்சை வயல்களில்
கட்டிடங்களை விளைவித்துக்கொள்ள
குளிர்சாதன அறைகளில்
தலைவர்களிடையே
கையொப்பங்கள் பரிமாறியாயிற்று.
பூர்வீகத்தைத் தொலைத்த
மண்ணின் மைந்தர்களை
உளைச்சல் மிகுந்த உள்ளத்தோடு
நகர்ப்புறங்களில்
அகதிகளாக்கியாயிற்று.
மரங்களை இழந்த பறவைகளும்
தங்களது மொழியினை மறந்தபடி
பறந்து கொண்டிருக்கின்றது
மவுனத்தைச் சுமந்தபடி.
நன்றி : கதிர்மதி | தமிழ் கூடல்