காலச்சுவடு பதிப்பகமாக வந்த வன்னியாசி சிறுகதைத் தொகுப்புக்கு கவிஞர் கருணாகரன் எழுதிய அறிமுக உரை :
இலக்கியத்தின் உயிர் அறமே. இந்த அறமானது சனங்களின் பிரச்சினையையும் அந்தப்பிரச்சினைக்குள்ளாகிய மனிதர்களின் உணர்வையும் அவற்றின் உண்மைக்கு மாறின்றிப் பேசுவதாகும். உண்மையைப் பேசும்போது, அதுவே பேரொளியாக எல்லாவற்றையும் வெளிப்படுத்திக்காட்டுகிறது. அறமும் உண்மையும் ஒளிமிக்கவையாக இருப்பது இந்த அடிப்படையில்தான். பசியும் காதலும் பிரிவும் உறவும் நெருக்கமும் விடுபடலும் இதைப்போன்றவை அனைத்தும் உண்மை நிலைக்குரியவை. இவை உடலிலும் உள்ளத்திலும் தூண்டும் உணர்வுகளும் இவற்றின் வெளிப்பாடுகளும் உண்மையானதே. இவை ஏற்படுவதற்கான காரணங்களும் உண்மையானவையே. ஆனால் இதை ஆராய்ந்து அணுகும் முறையிலே வேறுபாடுகள் உண்டாகின்றன. இந்தக் காரணங்களைக் கண்டறியும் வழிமுறைகளே இந்த வேறுபாடுகளை உண்டாக்குகின்றன. அதுவே அரசியலாகிறது. பசியும் பஞ்சமும் பட்டினியும் காதல் உறவில் சமூக உறவு கொள்ளும் ஊடாட்டங்களும் அரசியலின் விளைவுகள் என்று பார்க்கப்படும்போது உண்மை நிலை குறித்த பல்வேறு கேள்விகள் பல கோணங்களில் எழும். இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் அறம் குறித்த கேள்விகளும் எழுகின்றன. ஆளாளுக்கும் தரப்புகளுக்கிடையிலும் மாறுபாடான அபிப்பிராயங்களும் நிலைப்பாடுகளும் பார்வைகளும் தோன்றும்போது அறம் குறித்த விவாதங்களும் இவ்வாறே உருவாகின்றன. இதுவே அரசியலாகவும் சமூகவியலாகவும் மனித வாழ்க்கை எதிர்கொள்ளவேண்டிய சவால்களாகவும் மனித விதியானது கேள்விகளின் முன்னே நிறுத்தப்படுவதாகவும் ஆகின்றன. முக்கியமாக இந்த நிலையில் மனிதர்களாலேயே மனித விதி சவால்களுக்குரியதாக ஆக்கப்படுவதைக் காணலாம்.
தாமரைச்செல்வியின் எழுத்து இந்த அடிப்படையில் அமைந்ததே. சனங்களைப் பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியுமே அக்கறை கொண்டவை அவருடைய கதைகள். சனங்களை இடையீடு செய்யும் சமூக, அரசியலையும் அந்த அரசியல் இயங்கும் காலத்தையும் அவர் எழுதினாலும் அவற்றை அவர் ஒருபோதும் முன்னிலைப்படுத்துவதில்லை. வெளிப்படையாக்குவதில்லை. அதில் அவருக்கு ஆர்வமும் இல்லை. இதற்குக்காரணம், இலக்கியத்தின் வேலை பிரகடனங்களைச் செய்வதில்லை என்ற புரிதலின் விளைவாக இருக்கலாம். அவருடைய கரிசனையெல்லாம் சனங்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் பற்றியதே. அதற்காகத் தன்முன்னே உள்ள – சனங்களைப் பிணைத்துள்ள – அரசியலைப் புறக்கணித்து விட்டு அல்லது அதிலிருந்து விலகித் தன்னுடைய எழுத்தை அவர் முன்வைக்கிறார் என்றும் சொல்ல முடியாது. தனக்கு முன்பாகவும் சமூகத்திற்கு முன்னேயும் விஸ்வரூபமெடுத்துப் பயங்கரமாகப் பல்லிழித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் அவற்றினால் சனங்கள் பிழிந்தெடுக்கப்படுவதையுமே தாமரைச்செல்வி கவனப்படுத்துகிறார். இந்தப் பிரச்சினைகளுக்குப் பின்னணியாகவும் உள்ளுக்குள்ளும் இருக்கும் அரசியலை அவர் உள்ளுணர்ந்து கொள்வதைப்போலவே கதைகளிலும் உள்ளுணர்த்துகிறார். இதுதான் அவருடைய பலமும் பலவீனமும். அவர் அவ்வக்காலத்தின் அரசியல் நிழலில் தஞ்சமடையாதிருப்பது அவருடைய பலம். அவ்வக்கால அரசியலில் வலுவான எதிர்வினைகளையும் உட்பார்வைகளையும் செலுத்தாமலிருப்பது அவருடைய பலவீனம். ஆனால், இந்த இரண்டு போக்கிற்கும் அப்பாலானதே அவருடைய கரிசனைப் புலம். நாம் முன்கண்டவாறு எல்லாவற்றுக்கும் அப்பால் சனங்களில் அவர் தன்னைத் தகவமைத்திருப்பதால், அவர் கால எல்லைகளைக் கடந்த உண்மை நிலையை நோக்கிய பயணியாக இருக்கிறார். ஏனென்றால் எல்லாவகையான அரசியல், சமூக நிலைகளுக்கும் அப்பாலானது சனங்களின் இருப்பும் வாழ்க்கையும். ஆகவே சனங்களை முன்னிறுத்திப் பேசுவதன் மூலமாக எந்த நிறங்களிற்குள்ளும் தோய்ந்து விடாமலிருக்கும் இந்த நிலைப்பாடு காலநகர்வில் அவரைப் பலமாக்கும். அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளும் அவற்றை வழங்கிய அமைப்புகளும் தரப்புகளும் ஒரு வகையில் இதற்குச் சான்றாக உள்ளன. எதிரும் புதிருமாகப் பன்முக நிலைப்பட்ட தரப்புகளால் தாமரைச்செல்வி கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இது சனங்களின் மீதான அவருடைய கரிசனைக்குக் கிடைத்த கௌரவமும் பேறுமாகும்.
இலங்கையின் வடக்கே உள்ள கிளிநொச்சி மாவட்டம் – பரந்தனில் 1953 இல் பிறந்த தாமரைச்செல்வியின் எழுத்துகளில் பெரும்பாலானவையும் தான் சார்ந்த விவசாயக் குடும்பத்தின் பின்னணியைக் கொண்டவை. கிளிநொச்சிப் பிரதேசத்தின் அடையாளத்தை இலக்கியத்தில் செறிவாக்கியவர்களில் தாமரைச்செல்வி முதன்மையாளர்.
1973 இலிருந்து தொடர்ச்சியாக எழுதி வரும் தாமரைச்செல்வி இதுவரையில் 200 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இந்தத் தொகுதியில் 37 கதைகள் மட்டுமே உள்ளன. இதைவிட மூன்று குறுநாவல்களையும் ஆறு நாவல்களையும் எழுதியுள்ளார். தாமரைச்செல்வியினுடைய எழுத்துப் பணிக்காக இதுவரையில் வடகிழக்கு மாகாணசபை விருது (ஒரு மழைக்கால இரவு – சிறுகதைகள்) யாழ் இலக்கியப்பேரவையின் பரிசு (விண்ணில் அல்ல விடிவெள்ளி – நாவல் ) கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது (தாகம் – நாவல் ) யாழ் இலக்கியப்பேரவையின் பரிசு மற்றும் ‘முரசொலி ‘பத்திரிகையின் முதல்பரிசு (வேள்வித்தீ – குறுநாவல் ) வட மாகாண சபை விருது மற்றும் வீரகேசரி, யாழ் இலக்கிய வட்டம் இணைந்து நடாத்திய கனகசெந்திநாதன் நினைவுப்போட்டியில் 2 ம் பரிசு (வீதியெல்லாம் தோரணங்கள் – நாவல்) இலங்கை அரச சாகித்திய விருது மற்றும் யாழ் இலக்கியப்பேரவையின் விருது (பச்சை வயல் கனவு – நாவல்) எனப்பல பரிசுளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இவற்றை விட எழுத்துப்பணிக்கான கௌரவமாக வடகிழக்கு மாகாணசபையின் ஆளுநர் விருது 2001இ கொழும்பு கலைஇலக்கிய கழகத்தின் விருது 2003இ கிளி/ தமிழ்ச் சங்கத்தின் இலக்கியமணிப்பட்டமும் தங்கப்பதக்கமும் 2002இ மட்டு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் விருது (2012), அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப்பெண்மணி விருது 2000, தமிழ்நாடு சின்னப்பா பாரதி அறக்கட்டளை விருது (2010), கண்டாவளை பிரதேச சபையின் கலாசாரப்பிரிவின் ஒளிச்சுடர் விருது (2011) ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
தாமரைச்செல்விக்கு ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வமுண்டு. வீரகேசரி, தினகரன், சுடர், ஈழநாடு போன்ற பத்திரிகைகளிலும் தமிழ்நாட்டில் குங்குமம் இதழிலும் ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
தாமரைச்செல்வியின் ஐந்து சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மூன்று சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு கதை German மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இவருடைய ‘ பசி ‘ என்ற சிறுகதை தமிழ்நாட்டைச் சேர்ந்த இமயவர்மன் என்பவரால் குறும்படமாக எடுக்கப்பட்டு லண்டனில் நடந்த ‘விம்பம் குறும்படவிழா’ வில் பார்வையாளர் தெரிவாக விருது பெற்றது. வேறு ஐந்து சிறுகதைகள் வெவ்வேறு ஆளுமைகளால் குறும்படங்களாக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு கதைகளை இயக்குனர் ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரனும் அவருடைய மகன் ஜான் மகேந்திரனும் இயக்கியிருக்கின்றனர். அதில் ஒரு படம் 1996 என்பது. உறவுகளில் இடப்பெயர்வு உண்டாக்கும் விளைவுகளை உணர்த்தும் அந்தப்படத்தில் எங்கள் மகன் மகிழ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தாத்தாவுக்கும் பேரனுக்குமிடையிலான பிணைப்பின் உணர்ச்சிச் சித்திரம் அது. மற்றையது பாதணி. தாமரைச்செல்வியின் இன்னொரு கதையில் உருவான குறும்படம் பாதை. இப்படிப் பல கதைகள் இந்தக் கதைகளின் உள்ளும் வெளியுமாக உள்ளன.
இது தாமரைச்செல்வியின் 37 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பாகும்.
– கருணாகரன்