பரந்தன் குமரபுரத்தில் ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத்தொகுதி அறிமுகநிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. கவிஞர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். மீனலோஜினி, பெருமாள் கணேசன், ரமேஷ் ஆகியோர் நூல்பற்றிய உரையினை வழங்கியிருந்தனர்.
கவிஞர் கருணாகரன் பேசும்போது தாமரைச்செல்வி எழுதி இத்தொகுதியில் வெளிவந்த “பசி” என்னும் சிறுகதை தமிழ்நாடு அரச கல்வித்திட்டத்தின் கீழ் தரம் 11 பாடவிதானத்தில் இணைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மதுரை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் அ ராமசாமி இத்தகவலை தெரிவித்ததாக மேற்கோள் காட்டியிருந்தார். ஏலவே இவரது “இன்னொரு பக்கம்” எனும் சிறுகதை இலங்கை தேசிய தமிழ் பாட நெறியில் ஆண்டு 11க்கான பாடவிதானத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் பத்மநாபன் பேசும்போது தாமரைச்செல்வி முதல் கட்டமாக ஒருதொகுதி நூல்களை பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்துள்ளார் என தெரிவித்தார்.