செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் வீரமோடு வாழ்ந்து வீழ்வதே மேல் என்ற தமிழனின் கலை மரபு!

வீரமோடு வாழ்ந்து வீழ்வதே மேல் என்ற தமிழனின் கலை மரபு!

3 minutes read

வீரமோடு வாழ்ந்து வீழ்வதே மேல் என்ற தமிழனின் தற்காப்புக் கலை மரபு!

உலகத்தில் தோன்றிய எந்த உயிரினமாக இருந்தாலும் மனிதன் முதல் ஈ, எறும்பு எனக் கண்ணுக்குத் தெரியாத பல்லாயிரக்கணக்கான உயிரினங்களில் எந்த உயிரினமாக இருந்தாலும், ஒவ்வொன்றும் தன்னுடைய வாழ்விற்காக வாழ்நாட்களை நகர்த்த வேண்டியுள்ளது.

இதனால் ஒவ்வொரு உயிரினமும் தன்னைத் தானே காத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதாவது பலம் கொண்டவனாக வாழ்ந்தால் தான் எதிரிகளிடம் இருந்து தன்னைத் தானே காத்துக்கொள்ள முடியும். இந்த அடிப்படையில்தான் வாழ நினைப்பவன், வீழ்த்த நினைப்பவனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகிறது.

ஆகவே, உலகத்தில் மாபெரும் வீரர்களையும், தீரர்களையும் உருவாக்கிய கலைகளில் தற்காப்புக் கலைகளே தலை சிறந்தவைகள். பல ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக பல போர் வீரர்களை தோற்றுவித்தது தமிழ் மண். மூவேந்தர்கள் முதல் வடக்கே குப்தர்கள் வரை வீரமுடன் வாழ்ந்தார்கள். இதில் இராஜ புத்திரர்களுக்குத் தனி பேரும், புகழும் உண்டு.

உலகளவில் எடுத்துக்கொண்டாலும், அலெக்ஸாண்டர் தன் சிறு வயதில் எடுத்த போர் வியூகம் உலகையே வியக்க வைத்தது. அவரின் பயணம் ஐரோப்பா என்றில்லாமல் ஆசியாவிலும் கால் பதிய வைத்தது. ஆனால், அந்த மாவீரனின் உலக கனவு நினைவாகவில்லை. மாவீரன் செங்கிஸ்கான் மங்கோலியாவில் ஆரம்பித்து சைனாவின் க்கைபங் (Kai Feng) தொட்டு, திருங்கடலுக்கு மேல் க்ஜவி (Kiev) முதல் பல மைல்கள் கடந்து காஸ்பியன் கடலைச் சுற்றி நம் நாட்டின் சிந்து நதிக்கரை வரை அவன் வீரதீர செயல்கள் வரலாறு மூலம் தெரிகிறது.

நமது இந்திய தேசத்தின் உள்ளே புகுந்து மூர்க்கமாக போர் தொடுத்த தைமூர் முதல், மாவீரன் நெப்போலியன் வரை வீரதீரர்களை உலக வரலாறு பதிவு செய்தது. எகிப்திய நாடுகளின் ஆய்வுகள் கி.மு 3000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு மற்றும் போர் தந்திரங்கள், பார்ட்டனய், கிரீஸ் பற்றிய இடங்களை திகில் படுத்திக் காட்டுகின்றன.

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மண்ணில் தோன்றிய வீராதிவீரர்கள் தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற மேற்கொண்ட யுத்தங்களையும், அவர்களின் வலிமையையும் வரலாற்று நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

போராட்டங்கள் வேறுபட்டாலும், மனித வாழ்வு போராட்டங்களின் மேல்தான் அடியெடுத்து வைக்கிறது. நம்முடைய அன்றாட வாழ்வு என்றாலும் அவ்வளவு சுலபமானது அல்ல. எவ்வளவோ போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக இன்றைய நிலையில் பெண்கள் பலவகையான துயர நிகழ்வுகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த சமூகத்தில் பாதுகாப்பு வேண்டும். அரசாங்கம் என்பது எந்த அளவுக்கு பாதுகாப்பு அளித்தாலும், திடீரென ஆபத்து நிகழும் சமயத்தில் தன்னைத் தானே தற்காத்துக்கொள்ளும் அளவுக்கு ஒவ்வொரு பெண்களும் தங்களை வலிமை உள்ளவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை உணர்த்தவே நாம் வரலாற்று ஆய்வுகளைப் பார்க்க வேண்டியுள்ளது. பண்டைய தமிழன் வாழ்வின் அனைத்தையும் கலையாகவே பார்த்தான்.

வீரம் முதற்கொண்டு காதல் வரை உழைப்பு, பாட்டு, பரதம் என்று அவன் கலை ஆர்வம் கண்டுபிடிப்பு எல்லாம் மேலோங்கியே இருந்தன. பிறந்த குழந்தை அது வளர்ந்து போர்க்களம் சென்று வீரத்தை நிலைநாட்ட போரிட்டு மரணம் அடைந்தால், நெஞ்சில் அடித்து அழுது புலம்பி ஓடுவரும் தாய், தன் குழந்தை நெஞ்சில் காயம்பட்டு இறந்தால், பெருமை பட்டுக்கொள்வாள் என்பது நமது பண்டைய வரலாறு. அதேபோல் பிறந்த ஆண் குழந்தை இறந்தால் நெஞ்சில் வாளால் கீறிப் பின்பு நல்லடக்கம் செய்த மரபு தமிழன் மரபு. வீரமோடு வாழ்ந்து வீழ்வதே மேல் என்றான் வீரத்தமிழன்!

ஆரம்ப காலங்களில் தன்னையும், தன்னுடைய உறவினர்களையும், நாட்டையும் விரோதிகளின் தாக்குதல்களில் இருந்து காத்துக்கொள்ள சிலம்பம், மல்யுத்தம், வால், வில் என சண்டைகளைக் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுத் தந்தவன் பழைய மறத்தமிழன். வீரக் கலைகள், சமய கலாச்சார அம்சங்களில் பிரிக்க முடியாதவைகளாகவும், வீரக்கலைகள் அனைத்தும் சமூக சார்பு கலையின் பிறப்பிடம் சமூக வாழ்க்கை, நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை விளக்கும் தன்மையுமாய் உள்ளன.

சமூக மற்றும் வீரர் கலைகள், சமயக்கலை, தற்காப்பு கலை என எவ்வளோ சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால் அன்று தமிழன் பெருமை உலகிற்கு ஓர் உதாரணம். சுமார் 1000 வருடங்களாக பல வீரர்களை இந்த உலகம் கண்டிருக்கிறது. மூர்க்கத் தனமான அந்த வரலாறு தன் பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.

பொழுதுபோக்குச் சண்டைகளாக எகிப்து, ரோம் அடிமைகளை கண்ணாடி தொய்த்த கைகளுடன் குத்துச் சண்டைகள் நடந்ததாக குறிப்புகள் இருக்கிறது. மூர்க்கத்தனமாக இருந்த இந்த வீரம் பின் தாற்காப்பு கலைகளாக உலா வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், உதாரணமாக சீனா, ஜப்பான் என்றாலே நம் நினைவுக்கு வருவது குங்ஃபூ, கராட்டே, ஜூடோ தான்.

அந்த நாட்டவர் எவரைப் பார்த்தாலும் அவர்கள் அனைவரும் சண்டை கற்று வந்தவர் என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு தற்காப்பு கலை முத்திரை பதித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள கலைகள் ஏராளம் என்றாலும் தொழிலில் இருந்து தொழில் பாடல், விளையாட்டு, சமயம் சண்டை இதை எல்லாமே ஒரு கலையாக எடுத்து கொண்டவன் தமிழன். உலகிற்கே கற்று தந்தவன் தமிழன்.

காஞ்சி புகழ்பெற்ற மன்னர்களை கண்டெடுத்து இருக்கிறது. இருந்தபோதிலும் ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டில் காஞ்சி மண்ணிலே பிறந்து உருவான மாபெரும் வீரன் போதி தர்மன் என்ற சூரனை நம் தாயகம் குறிப்பாக தமிழ் மண் ஈன்றெடுத்தது. நமக்கு மிகப்பெரும் பெருமை வாய்ந்ததாகும். ஆனால் அதிர்ஷ்ட காற்று சீனா பக்கம் வீசியது.

ஆகவே, உலகிற்கே தற்காப்பு கலை தந்த தமிழன் நிலை இன்று கேள்விக்குறியாக இருக்கிறது. நம்மிடம் இருந்து தோன்றிய கலைகளை பயன்படுத்தி மேலை நாட்டினர் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, நாமோ கூனிக் குறுகிப்போய் பேதையாய், போதையாய் உருண்டு கிடக்கிறோம். இழந்தது போதும்.

இனிமேலாவது நம்முடைய மக்களை மேம்படுத்தி, இந்த சமூகம் தெளிவான நல் மனதோடும் திடமான எண்ணத்தோடும் ஆரோக்கியமாக வாழ அழிந்து வரும் தமிழனின் மரபுகளை மீட்டெடுக்க பாடுபட வேண்டும்.

நன்றி – ரமேஸ்குமார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More